இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பாக் ஜலசந்தியின் குறுக்கே பாலம் அமைப்பதால் ஏற்படும் பலன்கள்

செய்தி சுருக்கம்:
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பாக் ஜலசந்தியின் குறுக்கே பாலம் அமைக்கப்படுமானால் இரு நாடுகளிலும் வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இலங்கையைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் கயாஷா சமரக்கோன் மற்றும் முத்துக் கிருஷ்ண சர்வானந்தன் ஆகியோர் பாக் ஜலசந்தியின் குறுக்கே நேரடிச் சாலையும் ரயில் பாலமும் அமைக்கும் பட்சத்தில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறும் வர்த்தகத்தின் போக்குவரத்துச் செலவு பெருமளவு குறையும் என்கிறார்கள்.
அதேவேளையில் பொருளாதார வல்லுநர்களான ரவுட்லெட்ஜ் டெய்லர் மற்றும் பிரான்ஸிஸ் இருவரும் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? “வட இலங்கையின் தலைமன்னாரைத் தனுஷ்கோடியுடன் இணைக்கும் பாலம் இந்திய இலங்கை கடல் வழி தூரத்தைக் குறைக்கும். இதனால் பயண நேரம் கணிசமாகக் குறையும். இருபத்து மூன்று கிலோ மீட்டர் பாலத்தை அமைக்கும் இந்தப் பாக் ஜலசந்தி திட்டமானது சேது சமுத்திரத் திட்டத்திற்கு மாற்றாகப் பார்க்கப்பட்டாலும் பாக் ஜலசந்தி அருகே கால்வாயை வெட்டுவது என்பது சர்ச்சைக்குரியதாகவே மாறும். ஏனென்றால் அது சுற்றுச்சூழல் பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும்” என்கிறார்கள்.
ஆனால் இந்தக் கூற்றை கயாஷா சமரக்கோன் மற்றும் சர்வானந்தன் இருவரும் மறுக்கிறார்கள். ‘இந்திய – இலங்கை இணைப்புச் சாலை மற்றும் ரயில் பாலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத் தீங்கும் இழைக்காமல் அதன் இலக்கை எளிதாக, மிகக் குறைந்த செலவில் அடையும்’ என்கிறார்கள்.
பின்னணி:
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகப் பரிவர்த்தனைகளில் பெரும் பகுதி கடல் வழியாகவே நடைபெறுகின்றன. அதாவது கொழும்பு மற்றும் சென்னை, கொல்கத்தா, மும்பை, தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களுக்கு இடையே நடைபெறுகின்றன. இவற்றுள் தூத்துக்குடி துறைமுகம் இலங்கை வர்த்தகத்தின் மிக நெருக்கமான மற்றும் முக்கியமான துறைமுகம். ஜவுளி மற்றும் உணவுப்பண்டங்கள் சார்ந்த பொருட்கள் அதிக அளவில் தூத்துக்குடியில் இருந்தே கொழும்புக்கு ஏற்றுமதியாகின்றன. தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல் பயண நேரம் என்பது பன்னிரண்டிலிருந்து பதினெட்டு மணி நேரமே. மற்ற இந்தியத் துறைமுகங்க ல் இருந்து இன்னும் அதிக நேரம் ஆகும். ஆனால் தூத்துக்குடியில் இருந்து சரக்குகளைக் கொண்டு செல்ல இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை ஆகின்றது. இது மிகவும் அதிகப்படியானது என்று கூறப்படுகின்றது. பாக் ஜலசந்தியில் பெரிய கப்பல்கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியிலிருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக் கொண்டு செல்கின்றன. இப்பகுதியை ஆழப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டமே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம். இங்கே இன்னுமோர் விஷயத்தையும் நாம் நினைவு கூரலாம். அதாவது, 2002ஆம் ஆண்டில் தென் இந்தியாவுடன் பொருளாதார உறவுகளை நிறுவும் எண்ணத்தில் அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பாக் ஜலசந்தியின் குறுக்கே அனுமன் பாலம் கட்டும் யோசனையை முன்வைத்தார். இந்திய இலங்கை நிபுணர்கள் சந்தித்து அதற்கான தொழில்நுட்பத்தைக் கூட வரைந்துவிட்டார்கள். ஆனால் அந்தத் திட்டம் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள தேசியவாதிகளிடமிருந்து கடும் எதிர்ப்பைச் சந்தித்ததால் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சரி, மீண்டும் பாக் ஜலசந்தி பாலத்தினால் கிடைக்க இருக்கும் பலனுக்கு வருவோம். இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பொருள்களை இறக்குமதி செய்பவர்களும் வணிகர்களும் சரக்குகளை இறக்குவதற்கு தற்போது கொழும்புத் துறைமுகத்திற்கு வெளியே வெகு நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. சாலை வழியாகச் சரக்குகளைக் கொண்டு சென்றால் சரக்குச் செலவில் மட்டும் இருபத்தைந்திலிருந்து முப்பது சதவீதம் வரை சேமிக்கப்படும் எனவும் ஐம்பது சதவீத நேரத்தைச் சேமிக்கும் போது கூடுதலாக பரிவர்த்தனைச் செலவைச் சேமிக்க முடியும் எனவும் கூறப்படுகின்றது. மேலும் இருபத்துமூன்று கிலோமீட்டர் பாதையை ஒரு மணி நேரத்துக்குள் கடக்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.
மொத்தத்தில் இந்தத் திட்டம் அதாவது பாக்ஜலசந்தியின் குறுக்கே பாலம் கட்டப்பட்டால் போக்குவரத்துச் செலவில் எழுபத்தைந்து சதவீதம் சேமிக்கப்படும். போக்குவரத்துச் செலவு குறையும் பட்சத்தில் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை கணிசமாகக் குறையும். இது இரு நாடுகளிலும் நிலவும் வறுமை நிலையைக் குறைக்கவும், வர்த்தகத்தை முன்னேற்றவும், ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கவும் ஏதுவாக அமையும். இந்தியாவுடனான இந்தச் சாலை இணைப்பு இலங்கையின் வட மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் போன்ற பின் தங்கிய மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெருமளவில் கைகொடுக்கும். இந்த மாகாணங்கள் நாட்டிலேயே வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் மிகவும் பின்தங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுடன் ஒரு நேரடிச் சாலை இணைப்பு ஏற்படும் பட்சத்தில் கொழும்பிலுள்ள இடைத்தரகர்கள் அகற்றப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணச் சந்தையில் பொருள்களின் விலை நிச்சயமாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் யாழ்ப்பாணச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் நாற்பது சதவீதத்திற்கும் அதிகமானவை தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக முன்மொழியப்பட்டிருக்கும் இந்தப் பாலமானது வட இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்தியாவுடனான சாலை இணைப்பு, வட இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.