fbpx
LOADING

Type to search

இந்தியா

தடிகளை ஏந்திச் செல்லும் காலனித்துவ மரபுக்கு முடிவு: இந்தியக் கடற்படை அறிவிப்பு

ஆயுதப்படைகள் தங்களது காலனித்துவ நடைமுறைகளைக் கைவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பைத் தொடர்ந்து இந்தியக் கடற்படை அதன் பணியாளர்கள் இனி சம்பிரதாயமான தடியை(பேடன்)  எடுத்துச் செல்ல மாட்டார்கள் என அறிவித்துள்ளது. உடனடியாக இது நடைமுறைக்கு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

 மத்திய அரசு ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வந்த காலனித்துவ மரபுகளுக்கு முடிவு கட்டி வருகிறது. குறிப்பாக நாட்டின்  தலைநகர் டெல்லியில் ராஜபாதை என்பதைக் கடமைப் பாதை எனப் பெயர் மாற்றம் செய்தது. அங்குதான் இந்த வருடக் குடியரசு தின அணிவகுப்புகள் யாவும் நடைபெற்றன. ராஜபாதை என்னும் அதிகாரத்தைக் குறிப்பதாக இருந்த பெயரைத் தற்போது மக்களுக்கான உரிமை மற்றும் அதிகாரமளித்தலைக் குறிக்கும் வகையில் கடமைப்பாதை என மாற்றியுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் தற்போது இந்தியக் கடற்படை தனது வீரர்கள் மத்தியில் கையாளப்படும் சிறு தடி அதாவது பேடன் நடைமுறையினை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அறிக்கையில் ‘கடற்படை வீரர்கள் சிறு தடியைச் சுமந்து செல்வது காலப்போக்கில் வழக்கமாகிப் போனது. தடியைக் கையில் வைத்திருப்பது அதிகாரத்தின் அடையாளம் என்பது காலனித்துவ மரபு. அமிர்தக் காலத்திற்கு மாறிய கடற்படைக்கு இனி அது தேவையில்லை. ஆகவே அதிகாரிகள் உட்பட அனைவரும் சிறு தடிகளை கையில் வைத்திருப்பது உடனடியாகத் தடை செய்யப்படுகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது. கடற்படையின் ஒவ்வொரு பிரிவின் தலைமை அதிகாரி அலுவலகத்தில் இந்தத் தடியை உரிய முறையில் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கமாண்டர் அளவிலான அதிகாரிகள் மாறும்போது அலுவலகத்திற்குள் மட்டும் தடியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

பேடன் என்பது சுவாக்கர்ஸ்டிக் என்று குறிப்பிடப்படும் ஒரு குட்டையான மற்றும் தடிமனான குச்சி. முதன் முதலில் இது ரோமானியப் பேரரசால் பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப் போரில்தான் இது பிரசித்தி பெற்றது. அதன்பின் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் இந்தக் குச்சியை எப்போதும் கையில் வைத்திருக்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்தார்கள். அந்தக் காலத்தில் இது அதிகாரமிக்கதாகக் கருதப்பட்டது. அவர்கள் தொடங்கி வைத்த இந்தப் பழக்கம்தான் இந்திய ராணுவத்தில் தொடர்ந்தது.

தடியைப் பிடிப்பதன் மூலம் சித்தரிக்கப்படும் அதிகாரம் அல்லது அதிகாரத்தின் அடையாளமானது பொற்காலம் அல்லது அமிர்தக் காலத்தில் இருக்கும் கடற்படைக்குத்  தேவையற்றது என்று இந்தியக் கடற்படை கூறியிருக்கின்றதே. அமிர்தக் காலமா? அப்படியென்றால் என்ன என்கிறீர்களா? இதோ பதில். ‘அம்ரித் கால்’  என்னும் சொல் பண்டைய வேத ஜோதிடத்தில் இடம்பெறும் சொல்லாகும். இது ஒரு புதிய திட்டத்தைத் தொடங்குவதற்கான மிகவும் மங்களகரமான காலத்தைக் குறிக்கிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கான புதிய வரைபடத்தை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடியின் உரையிலிருந்துதான் இந்த ‘அம்ரித் கால்’ என்னும் வார்த்தை பெறப்பட்டது. அதே வருடம் பழங்காலக் காலனித்துவ மரபுகளிலிருந்து இந்திய ஆயுதப் படைகள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

 2022ஆம் ஆண்டில் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை நாட்டுக்காக அர்ப்பணிக்கும் விழாவில் தேசத்தின் ஆயுதப்படைகள் தங்களது வளமான மற்றும் தனித்துவமான பாரம்பரியத்தை நீர்த்துப்போகச் செய்யாமல் அவற்றின் காலனித்துவ நடைமுறைகளில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்வில் காலனித்துவக் காலத்திலிருந்த கடற்படைக் கொடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைக் குறிக்கும் வகை யில் கடற்படையின்புதிய கொடியான நிஷானியை வெளியிட்ட பிரதமர் அதனைச் சத்ரபதி சிவாஜிக்கு அர்ப்பணித்து ஏற்றி வைத்தார். 

அந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “வரலாற்றில் இன்று அதாவது செப்டம்பர் 22, 2022 ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாள். அடிமைத்தனத்தின் அடிச்சுவட்டை இந்தியா அகற்றுவதை நன்கு உணர்கிறோம். இந்தியக் கப்பல்படைக்கு இன்று புதிய கொடி கிடைத்துள்ளது. இந்தியக் கடற்படையின் கொடியில் இதுவரை அடிமைத்தனத்தின் அடையாளம் இருந்தது. ஆனால் இன்று முதல் சத்ரபதி சிவாஜியின் உத்வேகத்தால் புதிய ‘கடற்படைக் கொடி’ கடலிலும் வானிலும் பறக்கும்” என்றார். 

இந்தியக் கடற்படைக் கொடியிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் சிவப்பு பட்டைகள் நீக்கப்பட்டதும் இந்திய தேசியக்கொடி, அசோகச் சின்னம் மற்றும் நங்கூரம் ஆகியவை இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ஜூலை மாதம் 24ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சகம் 58 பிரிட்டிஷ்கால கன்டோன்மென்ட்களை இராணுவ நிலையங்கள் என்று மறு பெயரிடும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. ராணுவம் அதன் பழைய பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகளைக் காலனித்துவ மரபுகள் நீக்கம் என்ற பெயரில் நீக்க முயற்சித்த போதும் சில பிரிட்டிஷ் கால மரபுகள் இன்னும் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. உதாரணமாக, 30 ஆயிரம் பேர் பேட்மேன்கள் (பிரிட்டிஷ் அதிகாரிகளின் தனிப்பட்ட வேலையாட்கள்) என்ற பெயரில் இந்திய ராணுவ அதிகாரிகளுக்குச் சேவை செய்யத் தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். 1980-களின் இடைப்பகுதியில் சகாயாக்கள் என்று இவர்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டார்களே தவிர இந்த நடைமுறை இன்னும் நீக்கப்படாமலேயே இருக்கிறது. 

தொடர்புடைய பதிவுகள் :

தமிழால் தலை நிமிர்வோம்! தமிழில் கையோப்பமிடுவோம்!
இந்தியாவின் 'தார்' பாலைவனம் ஒரு நூற்றாண்டுக்குள் மறைந்துவிடுமா? திடுக்கிட வைக்கும் ஆய்வு முடிவுகள்
தாராவி குடிசை மாற்றுத் திட்டம்: எதிர்ப்புகளை மீறி ஏலத்தைக் கைப்பற்றியது அதானி குழுமம்! பலனடையப் போவத...
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தை தடுக்க இந்திய தூதரகங்கள் முன்பு போலீசார் குவிப்பு -...
இந்தியாவில் தங்க நகைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு! சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வந்தவர்களுக்கு ...
விருந்தினர்கள் உடன் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஓய்வறையை உருவாக்கித்தர அனைத்து ஓட்டல்களுக்கும், நட்சத்தி...
தமிழ்நாட்டின் கீழடியில் ‘படிக குவார்ட்ஸ் எடை அலகு’ கண்டுபிடிப்பு
மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளிப்பது எப்படி - மனுக்களின் மீதான நடவடிக்கை எவ்வாறு இருக்க...
வெளிநாட்டு மாப்பிள்ளைகள்  செய்யும் புதுவித மோசடி!  பெற்றோர்களே எச்சரிக்கை!!
சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மரபணு ரீதியாக ஒத்திருக்கிறார்கள்: டிஎன்ஏ விஞ்ஞானிகள் கண்டுபிடிப்...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *