fbpx
LOADING

Type to search

இந்தியா உலகம் வர்த்தகம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சீனாவின் உயர்மட்ட தூதர் சந்திப்பு: இந்திய-சீன உறவு பலப்படுமா? 

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு மந்திரிகள் பிராந்திய மாநாட்டின் இடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கரும் சீனாவின் உயர்மட்ட தூதரான வாங் யீயும் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பில் வாங் யீ தரப்பிலிருந்து சீன முதலீடுகளின் மீதான இந்தியக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மேலும்  இந்திய-சீன எல்லையில் நிலவும் தற்போதைய மோதல்கள் இரு நாடுகளுக்குமிடையிலான ஒட்டுமொத்த உறவைப் பாதிக்கக்கூடாது எனவும் அவர் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா, மியான்மர் மற்றும் புருனே  ஆகிய நாடுகள் அடங்கியதே ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பில் இடம் பெற்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பில் நிதி, தொழில்நுட்பம், உணவு, பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு ஆகியவை குறித்துப் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

சீன வெளியுறவு மந்திரியான குயின்னின் உடல்நிலை சரியில்லாததால் அவருக்குப் பதிலாக அந்நாட்டு உயர்மட்ட தூதரான வாங் யீ இம்மாநாட்டில் கலந்து கொண்டார். சிபிசி மத்திய வெளியுறவு ஆணையத்தின் இயக்குனராகவும் உள்ள வாங் யீ உடனான தன்னுடைய  விவாதங்கள் ஆசியான் பிராந்தியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரல், பிரிக்ஸ் (BRICS)  மற்றும் இந்தோ-பசிபிக் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று தனது டுவிட்டர் வலைத்தளப்  பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஜெய்சங்கர். மேலும் இந்தியா சீனா உறவுகள் இயல்பானவை அல்ல என்றும் எல்லைப் பகுதிகளில் அமைதி சீர்குலைந்திருக்கும் நிலையில் இயல்பாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய-சீனப் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே நேரடியாகப் போர் எதுவும் இல்லை. ஆனாலும் அவ்வப்போது போர் பதற்றம் ஏற்படுவதுண்டு. இந்த நிலையில் இரு நாடுகளும் 1996 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் எல்லைகளில் அமைதிக்காக உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டன. எல்லையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்தவோ, வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தவோ, வெடிகுண்டுச் சோதனை போன்ற ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவோ மாட்டோம் என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஆனால் 2017 ஆம் ஆண்டு சீனா மீண்டும் தன்னுடைய நரித்தனத்தைக் காட்ட ஆரம்பித்தது. 

இந்தியா, பூட்டான் மற்றும் சீனா ஆகியவற்றின் எல்லைச் சந்திப்புகளில் இருக்கும் டோக்லாம் என்னும் இடத்தில் அது ராணுவப் படைகளைக் குவித்தது. அந்த எல்லைகளில் அத்துமீறிச் சாலைகளை ஏற்படுத்தியது. அவற்றை இந்திய ராணுவம் தடுத்தது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் எல்லைகளில் போதுமான கட்டுமான வசதிகளை ஏற்படுத்தத் தொடங்கி 10,000 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள அக்சாய் சின் பகுதியை ஆக்கிரமித்தது. அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள 90000 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு உரிமை கொண்டாடியது. சிக்கிம் மாநிலத்தின் முகுத்தங் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி கிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த மோதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் இன்றுவரை தீர்ந்தபாடில்லை. இந்தத் தாக்குதலில் இந்தியாவின் கர்னல் சந்தோஷ் பாபு உட்பட இரு நாட்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்களும் சீனாவைச் சேர்ந்த 45 ராணுவ வீரர்களும் இறந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் சீனாவிலிருந்து இதை உறுதிப்படுத்துவதற்கான எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த மோதலில் வீரர்கள் கம்பி, கற்கள் ஆகியவற்றை உபயோகித்து ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். பல மணி நேரம் நீடித்த இந்த மோதலில் சீன ராணுவ வீரர்கள் ஆணிகள் அடிக்கப்பட்ட கம்பிகளைப் பயன்படுத்தியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்வான் ஆற்றங்கரையில் நடந்த ஒரு சண்டைதான் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்கு வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த வருடம் இருதரப்பு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே 16 சுற்று பேச்சு வார்த்தைக்குப் பிறகும் எந்த ஒரு முடிவும் எழவில்லை. அதுமட்டுமின்றி பேச்சுவார்த்தையை சீன ராணுவம் கண்துடைப்புக்காக நடத்தியதோ என்ற ஐயமும் எழுந்தது. இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து சீன ராணுவத்தின் சார்பாக எந்தச் செய்திக் குறிப்பும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சீன அதிபர் அந்நேரத்தில் படுகாயமடைந்த சீன ராணுவத்தின் ரெஜிமெண்டல் கமாண்டர் உள்ளிட்ட ராணுவத் தளபதிகளைப் பாராட்டியதும் சர்ச்சையைக் கிளப்பியது. அவரது அனுமதியுடன்தான் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்குமோ என்ற ஐயத்தையும் உண்டாக்கியது. 

இதற்கிடையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தொடரும் எல்லைப் பிரச்சினைக்கு இந்தியாதான் காரணம் என்று சீனப் பாதுகாப்புத் துறைத் தலைவர் தெரிவித்தார். இந்தியா தனது எல்லையில் ராணுவத்துக்கான ஆயுதங்களைக் குவித்து வருகிறது எனவும் சீனாவுக்குள் இந்தியர்களை ஊடுருவ அனுமதிக்கிறது எனவும் குற்றம் சாட்டினார் அவர். இதற்கு இந்தியத் தரப்பில் மறுப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இது சீனாவிற்கு இன்னும் வசதியாய்ப் போயிற்று. கடந்த ஆண்டில் பலமுறை சீன அமைச்சர் மற்றும் அதிகாரிகளை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு குறித்து விவாதித்தபோதும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்பதே நிதர்சனம். 

இதுதான் தீர்வு என்று ஒரு நாடு சொல்வதை அடிப்படையாய் வைத்து எப்படி இந்தப் பிரச்சனைக்கு முடிவு எடுக்க முடியும்? பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்வுகள் மற்றும் பரஸ்பர உரிமைகள் அடிப்படையிலேயே முடிவை எட்ட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலை என ஜெய்சங்கர் அப்போது தெரிவித்ததைச் சீனத் தரப்பு ஏற்கத் தயாராக இல்லை. அது மட்டுமல்ல, இந்த வெளிப்படையான அத்துமீறல்களுக்குப் பிறகும் எல்லைப் பிரச்சினையை ஒதுக்கி வைத்துவிட்டு இருநாடுகளும் இருதரப்பு உறவில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் இரு அரசுகளும் பகைவர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்கவேண்டும் என்றும் வாங் யீ கூறியிருந்ததுதான் வேடிக்கை. 

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சீன தூதரக உயர் அதிகாரியைச் சந்தித்து இந்திய-சீன எல்லை அமைதி மற்றும் அமைதி நிலுவையில் உள்ள  பிரச்சினைகள் குறித்து விவாதித்தது பேசுபொருளாக மாறியுள்ளது.
சிக்கிம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் வரையறுக்கப்படாத 3500 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையை இந்தியாவும் சீனாவும்  பகிர்ந்து வரும் நிலையில் இந்த எல்லைப் பிரச்சினை தீராதவரை இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தரமான அமைதி என்பது ஏற்பட வாய்ப்பே இல்லை.

தொடர்புடைய பதிவுகள் :

பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜிம்னாஸ்டிக...
பங்குசந்தை மோசடி - 135 டிரேடிங் நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது செபி
சேமிக்கும் பழக்கம் அதிகம் கொண்ட  புத்திசாலி தலைமுறை 90ஸ் கிட்ஸ்
ஏன் வீடுகளின் விலை வீழச்சி அடைகிறது? ஏனென்றால் நாம் போதுமான அளவு செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை!
இந்தியாவின் ரஷ்யாவில் இருந்தான எண்ணெய் இறக்குமதி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது
இந்தியா-குடிகளும் அவர்கள் குடிப்பழக்கமும் 
பேர்லினில் வளர்ப்புப் பராமரிப்பில் இருக்கும் குழந்தை அரிஹாவை திருப்பி அனுப்புமாறு ஜேர்மனிக்கு இந்திய...
அமெரிக்கப் பொருட்கள் மீதான இந்தியாவின் பதிலடி சுங்க வரிகள் நீக்கப்படுவதன் பின்னணி என்ன?
கனகசபையால் ஏற்பட்ட கலவரம்! சிதம்பரம் கோயில் சர்ச்சை விவரங்கள்!!
வந்தே விட்டன டிரைவரில்லா டாக்சிகள்! கலிபோர்னியாவில் அறிமுகப்படுத்தப்படும் ரோபோடாக்சிகள்…!!
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *