San Francisco வில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்த சம்பவம் – அமெரிக்கா கடும் கண்டனம்.

செய்தி சுருக்கம்:
காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவின் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் San Francisco நகரத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனர். மேலும், தூதரகத்தின் சில உடைமைகளை தீவைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவத்தை பற்றிய தனது அறிக்கையில் போராட்டக் காரர்களின் மீது கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் இத்தகைய திடீர் தாக்குதல் மற்றும் வன்முறையை உண்டாக்கி இந்திய தூதரகத்தில் பாதிப்பை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்களின் இந்த வஞ்சகமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா அறிக்கை வெளியிட்டது. இந்திய அரசிடம் அதன் வருத்தங்களையும் அந்த அறிக்கையில் தெரிவித்தது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
அமெரிக்க உள்ளூர் செய்தி (Diya TV) சேனலில் இந்த செய்தி வெளியானது. அதில் காலிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிக்கு ஆதரவாக இங்குள்ள காலிஸ்தானியர்கள் இந்திய தூதரகத்தை நள்ளிரவில் தாக்கி சேதங்களை ஏற்படுத்தி தீ வைத்து கலவரத்தை உருவாக்கி உள்ளனர். தக்க நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட San Francisco தீயணைப்பு வீரர்கள் விரைவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த கலவரத்தால் பெரிதான பாதிப்புகள் மற்றும் இழப்புகள் ஏற்படவில்லை எனவும் செய்தியில் கூறியுள்ளனர்.
கலவரத்தின் காரணமாக தூதரகத்தில் இருந்த யாருக்கும் எவ்விதமான காயங்களோ, பாதிப்புகளோ ஏற்படவில்லை எனவும், சேதாரங்கள் எல்லாம் எளிதில் சீரமைக்க கூடிய அளவில் தான் உள்ளன என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ ஒன்றினை காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோ வெளியீட்டாளர் யார் என்பதை கண்டறிய தீவிரமாக முயன்று வருகிறது அமெரிக்க அரசு.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு தாண்டிய பின்னர் அரங்கேறிய இந்த வன்முறை செயலானது கண்டிக்கத்தக்கது என்றும், மேலும் தூதரகத்தில் தீ வைக்க துணிந்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்றும் அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை பற்றி அமெரிக்காவின் செய்தித் தொடர்பாளர் Matthew Miller தனது டிவிட்டர் பக்கத்தில் “தீவிரவாதம் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரான வன்முறையை குறிக்கிறது. அமெரிக்காவில் உள்ள வெளிநாடுகளின் தூதரகம் மற்றும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை இது கேவிக்குள்ளாக்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் இதே தூதரகத்தில் இதே போன்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் போராட்டங்களை செய்தும் பாதிப்பை உண்டாக்கினார். அது நடந்து மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில் அதேபோன்ற அதைவிட அதிகமான பாதிப்பை உருவாக்கும் விதத்தில் மீண்டும் ஒரு போராட்டம் இங்கு ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இந்திய அரசு தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளது. அமெரிக்கவாழ் இந்தியர்களும் இந்த தீவிரவாத செயலால் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகி தங்கள் கண்டனங்களை அமெரிக்க அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். உடனடியாக இந்த வன்முறை சம்பவங்களுக்கு காரணமான நபர்களை பிடித்து தண்டனை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சம்பவத்தன்று வன்முறையாளர்கள் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பியவாறு இந்திய தூதரகத்தின் முன்னால் கூடினர், பின்னர் போலீசாரால் போடப்பட்டிருந்த தற்காலிக தடுப்பு வேலிகளை உடைத்தெறிந்து விட்டு தூதரகத்தின் உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் தூதரகத்தின் வாயிலில் இரண்டு காலிஸ்தான் நாட்டுக் கொடிகளை பறக்க விட்டனர். கலவரம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே தூதரகத்தில் இருந்த நிர்வாகிகள் சிலர் அந்த கொடிகளை அங்கிருந்து அப்புறப் படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் மூல காரணமாக, அதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையத்தின் கட்டிடத்தில் ஏற்றப்பட்டு இருந்த இந்திய மூவர்ணக் கொடியை அங்கிருக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டதாகவும், அதன் தொடர்ச்சியே அமெரிக்க தூதரகத்தில் நிகழ்த்தப்பட்ட கலவரம் என்பதும் தெரிய வந்துள்ளது.
Hindustan Times பத்திரிக்கையில் திங்கள் கிழமை வெளிவந்த செய்தியின்படி இந்திய அரசு கனடா அரசிடம் அங்கு வாழும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. ஏனெனில் தீவிரவாதிகள் Toronto மற்றும் Voncouver நகரங்களில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையிடமிருந்து வந்த தகவல் கூறியுள்ளது.
இந்த தாக்குதல்களுக்கு காரணமாக Hardeep Singh Nijjar என்ற தீவிரவாதியின் மரணத்தை முன்வைக்கின்றனர், சில நாட்களுக்கு முன்னர் காரணம் ஏதுமின்றி வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு அவர் கொல்லப்பட்டது தான் காலிஸ்தான் ஆதரவாளர்களை தூண்டி உள்ளது என்கின்றனர்.
கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி Voncouver நகரத்தின் சீக்கியர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீவிரவாதிகளின் இருபிரிவினருக்கு இடையில் நிகழ்ந்த சண்டையின் பொது 45 வயதான Khalistan Tiger Force(KTF) என்கிற தீவிரவாத அமைப்பின் தலைமை பொறுப்பிலிருந்த Nijjar தாக்கி கொல்லப்பட்டு உள்ளான். இந்த கொலைக்கு காரணமாக SFJ எனப்படும் மற்றொரு தீவிரவாத அமைப்பு இருந்தது. இது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமைப்பாகும். இந்த SFJ அமைப்புடன் Nijjar சிலகாலம் தொடர்பில் இருந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னணி:
அமெரிக்காவின் San Francisco நகரிலுள்ள இந்திய தூதரகத்தின் மீது சனிக்கிழமை நள்ளிரவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களுக்கும் தீவைப்பு சம்பவங்களுக்கும், அதே நாளில் லண்டனில் நிகழ்ந்த மூவர்ணக் கொடியை அகற்றிய தாக்குதல் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கனடா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் மீது ஒரே சமயத்தில் தாக்குதல் நிகழ்த்த தீவிர வாதிகள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இரு தீவிரவாத அமைப்புகளுக்கு இடையேயான சண்டையில் காலிஸ்தானை சேர்ந்த நபர் இறந்து போனதும், அவரை கொன்றது இந்தியர்கள் என்கிற காரணத்தாலும் காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் இந்திய தூதரகங்களையும் வெளிநாடுகளிலுள்ள மற்ற இந்திய அலுவலகங்களையும் தாக்கவும் சேதங்களை உண்டாக்கவும் திட்டம் போட்டிருந்தது அனைத்து நாடு மக்களையும் அதிருப்தி படுத்தியுள்ளது. பல்வேறு அமைப்புகளும் இந்த சம்பவங்களை கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றன.
விரைவில் இம்மாதிரியான தீவிரவாத செயல்கள் செய்பவர்கள் கண்டறியப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று காவல் துறையை சார்ந்த உயர்மட்ட அதிகாரிகள் முடிவெடுத்து உள்ளனர்.