இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க அரசு முடிவு.

செய்தி சுருக்கம்:
இந்தியாவில் இருந்து பல காலகட்டங்களில் திருடப்பட்ட பழமை வாய்ந்த பொருட்களை திரும்ப இந்தியாவிடமே ஒப்படைப்பதாக அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது, என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் நிகழ்ந்த சந்திப்பில், இந்தியாவின் எதிர்காலம் குறித்த பல விஷயங்களை இருவரும் விவாதித்துள்ளனர். அச்சந்திப்பில், இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மிகப் பழமை வாய்ந்த பொருட்களை மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைப்பதாக பைடன் தெரிவித்ததாக மோடி கூறியுள்ளார்.
பின்னணி:
இந்தியா ஒரு பழமை வாய்ந்த நாடாகும். மிகப் பழங்கால கலாச்சாரமும் நாகரீகமும் கொண்ட இந்திய நிலத்தில் பல கலைகள் வளர்ச்சியடைந்தது. அதில் சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டிடக்கலை என பல கலைகள் அடங்கும். இந்தியாவில் பல உள்நாட்டுப் போர்களால் அரசுகள் வீழ்ச்சியடைந்தது.
வடக்கில் முகலாயர்களும், தெற்கில் ஒரு நிலையற்ற ஆட்சியும் நிலவியது. அந்த நேரத்தில் ஐரோப்பாவில் இருந்து பல நிறுவங்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்தது. பிறகு இந்தியா நாட்டை தனது காலனியாக மாற்றியது. இதனால் இந்தியாவின் கலைகள் மற்றும் கலைஞர்கள் நசுக்கப்பட்டனர். இது மட்டுமல்லாமல் பல சமயங்களில் இந்தியாவின் பல பொக்கிஷங்களை கடத்திக்கொண்டு செல்லப்பட்டது. கோஹினூர் வைரம் துவங்கி இந்தியாவிற்கு உரிய பல அரிய சிற்பங்கள், ஓவியங்கள் தற்போது பல நாடுகளில் இருக்கிறது.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு பல காலகட்டங்களில் கடத்திச் செல்லப்பட்ட அறியவகைப் பொருட்களை இந்தியா அரசு மீட்டுவருகிறது. அந்த வரிசையில் அமெரிக்காவில் இருக்கும் நூறு பழங்காலப் பொருட்களை இந்தியாவிடம் திருப்பி தர அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனைப் பற்றிப் பேசுகையில், அமெரிக்க அரசு எடுத்துள்ள இந்த முடிவு தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக மோடி தெரிவித்தார். இதற்காக அவர் அமெரிக்க அரசாங்கத்திற்கும் நன்றியை தெரிவித்துள்ளார். இந்த பழமைவாய்ந்த பொருட்கள் எல்லாம் இந்தியாவின் சொத்துக்கள் ஆகும்.
சில தவறான வழிகளால் இது இந்தியாவில் இருந்து கடத்தபட்டுவிட்டது. எனினும் இதை திரும்ப இந்தியாவிற்கு ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா எடுத்த முடிவு, இந்த இருநாடுகளின் நல்லுறவை பறைசாற்றுகிறது என மோடி தெரிவித்துள்ளார்.
இவ்வகை முன்னெடுப்புகள், இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை புதுப்பிக்கும் முயற்சியாகும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், உலகம் முழுவதும் உள்ள பழங்கால கலைப்பொருட்களை இந்திய அரசு மீட்டுக்கொண்டு வருகிறது.
இந்த விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் ஆழமான இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகும். பல நூற்றாண்டுகளாக, திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட இவ்வகை அறிய பொருட்களை தாயகத்திற்கு திருப்புவதை இந்திய அரசங்கம் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டுள்ளது.
பிரதமர் மோடி சென்ற அனைத்து வெளிநாட்டுப் பயணங்களிலும் இதைப் பற்றி பேசியுள்ளார். பல நாட்டுத் தலைவர்களுடனும், பல நிறுவங்களுடன் இதைப் பற்றி கலந்துரையாடியுள்ளார். 2014 முதல் மொத்தமாக 238 பழங்கால பொருட்கள் இந்தியாவிற்கு எடுத்துவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா அமெரிக்க நல்லுறவை மனதில் வைத்துக்கொண்டு அமெரிக்காவும் இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு உதவி செய்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் சுமார் நான்கு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கொண்ட 307 பொருட்களை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கப்படுகிறது.
அறியவகை பொருட்களை சேகரிப்பதை சிலர் வாடிக்கையாக கொண்டிருப்பர். பெரும் பணக்காரர்கள் தங்கள் கவுரவத்திற்காக இவ்வகை அறிய பொருட்களை வாங்குவர். இதன் அடைப்படையில் தான் இந்த கள்ளச் சந்தை செயல்படுகிறது.
இந்தியாவின் பலவகை கலைப் பொருட்களை திருடி சர்வதேச சந்தையில் விற்று பணம் பார்க்க பல வகை இடைத்தரகர்கள் செயல்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் டார்க் வெப் வழியாக தங்கள் வணிகத்தை செய்கிறார்கள் என்பதும் கூடுதல் செய்தி.