அமெரிக்கப் பொருட்கள் மீதான இந்தியாவின் பதிலடி சுங்க வரிகள் நீக்கப்படுவதன் பின்னணி என்ன?

செய்தி சுருக்கம்:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணம் ஒரு மைல்கல் என நிபுணர்கள் பலரும் கூறி வருகிறார்கள். இந்திய – அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் இந்தப் பயணத்தால் ஆழமடைந்துள்ளன என்பதே இதற்குக் காரணம். அமெரிக்கா தனது பன்னாட்டு நிறுவனங்களின் மிகப்பெரிய மற்றும் முக்கியச் சந்தையாக விளங்கும் இந்தியாவைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும், தனக்கு மிகப்பெரிய வர்த்தகப் போட்டியாளராக விளங்கும் சீனாவைப் பின்னுக்குத் தள்ளவும் மோடியின் இந்தப் பயணத்துக்கு இருகரம் நீட்டி வரவேற்பு நல்கியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்கா தனது புதிய பங்காளியாகவே இந்தியாவைப் பார்க்கிறது. உலகப் பொருளாதாரத்திற்குச் சீனாவினால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க அமெரிக்கா ஒரு புதிய அணியை உருவாக்க முயல்கிறது என்பதே அரசியல் மற்றும் பொருளாதார வல்லுனர்களின் பார்வை.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காலத்தில் நிகழ்ந்த அமெரிக்க – இந்திய வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் புதிய வரிவிதிப்பு ஆகியவை இந்தியாவின் பதற்றத்தை அதிகரித்ததோடு மட்டுமின்றி மோடியின் தலைமையிலான இந்திய அரசைப் பதிலடி கொடுக்கும்படி உசுப்பியது உண்மைதான்.
2018 ஆம் ஆண்டு அமெரிக்கா தேசப் பாதுகாப்பின் அடிப்படையில் இந்திய எஃகுப் பொருள்களுக்கு 25 சதவீதமும், சில அலுமினியப் பொருள்களுக்கு 10 சதவீதமும் இறக்குமதி வரியை விதித்தது. இதற்குப் பதிலடியாக 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அரசு ஆப்பிள், பருப்பு, கொண்டைக்கடலை உட்பட எட்டு முக்கியமான அமெரிக்கத் தயாரிப்புகளுக்கு சுங்க வரி விதித்தது.
இங்கேதான் நாம் கவனிக்கவேண்டிய விஷயம் இருக்கிறது. அமெரிக்காவின் வாஷிங்டனில் விளையும் ஆப்பிள்களுக்கான ஏற்றுமதி சந்தையாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட இந்தியாவின் பதிலடி சுங்க வரிகள் மூலமாக வாஷிங்டன் மாநில ஆப்பிள் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்தியச் சந்தையின் பங்கைப் பெருமளவில் இழந்து நஷ்டத்திற்குள்ளாயினர். இதனால் அவர்கள் அமெரிக்க அதிபர் பைடனிடம், ஆப்பிள்கள் மீதான இந்தியாவின் வரிகளை நீக்கவோ அல்லது குறைக்கவோ உதவுமாறு வலியுறுத்தினர். இந்நிலையில் இந்திய அரசின் தற்போதைய வரி நீக்க அறிவிப்பால் மீண்டும் அமெரிக்கா 120 மில்லியன் டாலர் இந்தியச் சந்தையை அணுகும் என்று அந்நாட்டு ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கால்டுவெல் தெரிவித்துள்ளார்.
இந்த எட்டு அமெரிக்கப் பூர்வீகத் தயாரிப்புகளின் மீதான வரிகள் நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் இந்தியா அமெரிக்காவின் MFN (Most Favoured Nation) அதாவது மிகவும் சாதகமான நாடு என்ற விகிதத்திற்குத் திரும்பிவிடும். எல்லாம் சரி, அமெரிக்கா திடீரென இந்தியாவைப் பங்காளியாக்குவதன் காரணம் என்ன தெரியுமா? வாருங்கள் அதையும் பார்த்துவிடுவோம்.
அமெரிக்கா தனது மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரரான இந்தியாவுடன் 2021–2022 ல் நிகழ்த்திய வர்த்தகத்தின் மதிப்பு 119.8 பில்லியன் அமெரிக்க டாலர். இது 2022–2023 ல் 128.8 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இந்தியாவுடனான வர்த்தகப் பரிமாற்றங்களில் சீனாவை அமெரிக்கா முந்திவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதேவேளை, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பரிவர்த்தனையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 700 பில்லியன் அமெரிக்க டாலர். சீனாவின் இந்த அதீத வளர்ச்சிக்குக் காரணம் யார் தெரியுமா? இதே அமெரிக்காதான்.
பின்னணி:
2000-வது ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபராயிருந்த பில் கிளிண்டனின் பேராதரவும் பெருமுயற்சிகளும் 2001 வது ஆண்டில் சீனாவை உலக வர்த்தக அமைப்பில் இணைய வைத்தன. உலகத்திலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனா தன்னுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதோடு தனக்குச் சாதகமாக அதன் வெளியுறவுக் கொள்கையையும் மாற்றிக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் கிளிண்டன் மேற்கொண்ட இந்த நடவடிக்கை ஏமாற்றத்தில் முடிந்தது என்பதே உண்மை. அவருடைய முயற்சிகள் அனைத்தும் சீனாவிற்குத்தான் சாதகமாக முடிந்தன. ஆம், உலகின் மிக முக்கியமான உற்பத்தி மையமாகவும் உலகின் நம்பர்-1 ஏற்றுமதியாளராகவும் தன்னை மாற்றிக்கொண்ட சீனா, தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றிக் கொள்ளவே இல்லை. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கே சவால்விடும் ‘பிசாசு’ ஒன்றை உருவாக்கி விட்டார் என்று மிகப் பெருமளவில் விமர்சிக்கப்பட்டார் பில் கிளிண்டன்.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் ஏன் சமீபத்திய மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது என்று. பேராசிரியர் பந்த் சொல்வதைப்போல புதிய பங்காளியைத் தேடுவது அமெரிக்காவுக்கு அவசியமாகிறது. அந்த வகையில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் இந்தியா, அமெரிக்காவுக்கு தற்போது மிக முக்கியமான பங்காளியாகத் தோன்றலாம்.
மோடி தனது சுற்றுப்பயணத்தின்போது, ‘இந்திய அமெரிக்க நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கூட்டாண்மை என்பது இருநாடுகளுக்கு மட்டுமின்றி உலகப் பொருளாதாரத்திற்கும் மிக முக்கியமானது’ என்று கூறியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தனது அமெரிக்கப் பயணத்தின் போது ஏராளமான அமெரிக்கத் தொழிலதிபர்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை, குறிப்பாக எலான் மஸ்க், சாந்தனு, ஜேம்ஸ் குவின்ஸி உட்பட பலரைச் சந்தித்தது கவனம் பெறுகிறது.
ஆக மொத்தத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அமெரிக்கச் சுற்றுப்பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்பதை மறுப்பதற்கில்லை.