இந்தியா இலங்கை பேச்சுவார்த்தை – முக்கிய அம்சங்களாக இலங்கையின் எரிசக்தி துறை வளர்ச்சி மற்றும் துறைமுக கட்டுமானம் ஆகியவற்றை இந்தியாவுடன் இணைந்து செயல்படுத்த முடிவெடுக்கப்படும்.


செய்தி சுருக்கம்:
இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் Ali Sabry அவர்களின் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் “அடுத்த வாரம் டெல்லியில் நிகழவுள்ள இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் போது இலங்கையின் எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி திறனை மேம்படுத்தவும், துறைமுக கட்டுமானங்களை விரிவு படுத்தவும் தேவையான விஷயங்களை இந்தியாவுடன் விவாதிக்க இலங்கை இந்த சந்திப்பை பயன்படுத்தி கொள்ள உள்ளது” என்று தெரிவித்தார். இலங்கையின் அண்டை நாடான இந்தியா, இந்த படுமோசமான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டுவர இலங்கை எடுக்கும் அனைத்து விதமான நலதிட்டங்களுக்கும் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது.
இந்திய அரசின் மூலமாக சமயத்தில் கிடைத்த மற்றும் கிடைக்கப் போகின்ற உதவிகளானது இலங்கையின் மீட்சிக்கும் எழுச்சிக்கும் மிகவும் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடந்த வருடத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையின் நிதி நிலைமை மிகவும் மோசமடைந்தது, அதன் டாலர் கையிருப்புகள் முழுவதுமாக கரைந்து, அத்தியாவசிய தேவைகளான மருந்துப் பொருட்களையும், எரிபொருளையும் கூட இறக்குமதி செய்ய முடியாமல் தவித்த காலங்களில் இந்தியா செய்திருந்த உதவிகள் இலங்கை அரசிற்கு மிகவும் கைகொடுத்தது என்பது குறிப்பிடத் தக்கது.
2022- ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை வரையில் மொத்தமாக 4 பில்லியன் டாலர்களை இலங்கை அரசுக்கு பல்வேறு சமயங்களில் பலவிதமான சிக்கல்களிலிருந்து மீள இந்திய அரசு குடுத்து உதவியுள்ளது, அத்துடன் கடன் மீதான வட்டி தள்ளுபடி, இருநாட்டு நாணய பரிமாற்ற ஒப்பந்தம் மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பணம் செலுத்தும் கால அவகாசம் நீட்டிப்பு போன்ற பரஸ்பர உதவிகளையும் செய்து இலங்கையின் கடினமான காலத்தில் தோளோடு தோள் நின்று உதவிகள் செய்துள்ளது இந்தியா. மேலும், இந்தியாவின் ஒரு போர்க்கப்பல் முழுதும் 22 மில்லியன் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு சேர்த்துள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் Ali Sabry செய்தியாளர்களிடம் கூறிய விவரங்களின் படி, வருகின்ற ஜூலை 21 – ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக இந்தியா செல்லும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கியமான சந்திப்பில் கலந்து பேச்சுவார்த்தை நிகழ்த்தவுள்ளார். அப்போது இருநாட்டு உறவினை பலப்படுத்தும் தீர்மானங்களும், இலங்கை தீவின் வடக்கு மாகாணங்களில் நிர்மாணிக்கப் படவுள்ள புதிய துறைமுக கட்டுமானங்களை நிறுவவும், மேலும் அப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள மறுசுழற்சி எரிசக்தி உற்பத்தி கேந்திரங்களுக்கு தேவைப்படும் முக்கிய உபகரண மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தையும் இலங்கை தரப்பில் பேசப்பட உள்ளன.
“திரிகோணமலை மின்சார உற்பத்தி மையத்தின் வளர்ச்சி, துறைமுகத் துறையில் முன்னேற்றம், முடிந்த அளவில் இவற்றில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் சீரமைப்பு வேலைகள்” போன்ற விஷயங்களை இந்த சந்திப்பின் போது விவாதிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதில் இவர் துறைமுக மேம்பாடு பற்றி கூறுவது இலங்கையின் வடகிழக்கே அமைந்துள்ள கடலோர இயற்கை துறைமுகங்கள் பற்றியதாகும், ஏனெனில் இந்த துறைமுகங்கள் கடல் போக்குவரத்தில் மிக முக்கியமான இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இயற்கையான துறைமுக அமைப்பாகும்.
தற்போது இந்த முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் தொழில்நுட்ப வசதிகள் முழு அளவில் விரிவாக்கம் செய்து, நவீன வசதிகளை கொண்ட ஒரு துறைமுக நகரத்தை நிர்மாணிக்க இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன, எனவே இந்த தருணத்தை நாங்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்வோம் என்றும், வாய்ப்புகள் சரியாக அமைந்தால் இந்த துறைமுக கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றும் அதற்கான அனைத்து முன்னெடுப்பு நடவடிக்கைகளும் நாங்கள் எடுத்து வருகிறோம், விரைவில் இதற்கான வழியை கண்டறிவோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையின் இந்த வடகிழக்கு இயற்கை துறைமுகங்கள் இந்தியப் பெருங்கடல் வழியாக பயணிக்கும் அனைத்து கப்பல்களுக்கும் போதுமான வசதிகளை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த இடத்தின் மீதான அதிகாரத்தை கைப்பற்ற இந்தியாவும் சீனாவும் பல ஆண்டுகளாக இலங்கையின் மீது ஆதிக்கத்தை நிலைநாட்ட போரிட்டு வருகின்றனர்.
மேலும் அமைச்சர் கூறியதாவது, சீனாவை சேர்ந்த துறைமுக கட்டுமான நிறுவனமான ‘China Harbour Corp’ மற்றும் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு மூலப்பொருட்கள் தயாரிக்கும் Sinopec என்ற நிறுவனமும் இலங்கையில் தங்களுடைய முதலீடுகளையும், தங்கள் தொழிற்சாலைகளையும் அமைத்துவிட மிகுந்த முனைப்பு காட்டி வருகின்றன. இதில் Sinopec நிறுவனம் ஏற்கனவே இலங்கையின் தெற்கு மாகாணத்தை சேர்ந்த Hambuntota துறைமுகத்தில் தங்களுடைய பெட்ரோலிய பொருட்களின் சுத்திகரிப்பு ஆலையை துவங்கிக்கொள்ள 4 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய தயாராக உள்ளது. இந்த திட்டத்திற்கு இலங்கை அரசின் அனுமதியும் கிடைத்துவிடும் நிலையில் உள்ளது என்கிறார்.
இந்நிலையில் இலங்கை அரசு இந்தியா மற்றும் சீனாவுடன் மறு பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது, கடந்த மே மாதம் இவ்விரு நாடுகளின் கடன் தவணைகளையும் கட்டமுடியாமல் போனது வணிகரீதியாக சரிசெய்யப்படும் பட்சத்தில் இவ்விரு நாடுகளுக்கும் இலங்கையில் முதலீடுகள் செய்வதற்கு அனுமதியளிக்க படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் Anil கூறியுள்ளார். மேலும் இந்த பேச்சுவார்த்தையின் ஆரம்ப கட்டங்களானது சிறப்பாக இருந்ததாகவும், இதில் நல்ல முடிவை எட்டுவோம் என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் இந்த பேச்சுவார்த்தையானது வரும் செப்டம்பர் மாதத்தில் முடிவுக்கு வரும் என்றும், அதன்பிறகு, பொருளாதார நெருக்கடியால் கடன் கட்ட முடியாமல் திவால் ஆகிப்போன இலங்கையின் நிலைமை, வணிக ரீதியாக சரிப்படுத்தப் பட்டு பொருளாதார சமநிலையை அடையும், பின்னர் இந்த முதலீடுகளால் உருவாகும் லாபங்களை கொண்டு அனைத்து கடன்களையும் திருப்பி செலுத்த ஆரம்பிப்போம் என்று கூறி முடித்தார்.
பின்னணி:
கடந்த வருடத்தில் கோவிட் ஊரடங்கு காலம் முடிவுக்கு வந்து உலக மக்கள் அனைவரும் சகஜநிலைக்கு மீண்டுவர ஆரம்பித்த தருணங்களில், உள்நாட்டு அரசியல் கலவரங்களாலும், கவனிப்பாரற்று சிதறிப்போன பொருளாதார கொள்கைகளாலும் வரலாற்றில் இதுவரை நிகழாத அளவு பொருளாதார நெருக்கடியும் உள்நாட்டு கலவரங்களும் இலங்கை அரசை திக்குமுக்காட வைத்துவிட்டது, அனைத்து வகையிலும் நம்பிக்கையை இழந்த நிலைக்கு ஆளானது, கடந்த மே மாதத்தில் உலக நாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தேங்கி நின்றது. இத்தனை இன்னல்களையும் நேருக்கு நேர் நின்று சந்தித்தனர் இலங்கை மக்கள்.
சர்வதேச நிதி ஆணையம், சேவை நிறுவனங்கள் ஆகியவற்றின் நியுதவிகளும், இந்தியாவின் பொருளாதார மற்றும் மக்கள் நலன் சார்ந்த உதவிகளாலும், சிறிது சிறிதாக சரியாகி வருகிறது இலங்கையின் நிதிநிலையும் பொருளாதாரமும். தற்போது இறக்குமதி பொருட்களின் மீதான கட்டுப்பாடுகள் தளர்வு, சுற்றுலாத்துறை மேம்பாடு போன்ற வருவாய் பெருக்கும் செயல்களிலும் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு, இந்தியா மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தையில் நல்லதொரு முடிவை எட்டக் காத்திருக்கிறது. இந்த முயற்சிகள் சரியான முறையில் கைகொடுக்கும் பட்சத்தில் இலங்கை அரசு பொருளாதார சமநிலையை அடைந்து வருவாய் பெருக்கும் வணிக நடவடிக்கைகளை துறைமுகம் மற்றும் மறுசுழற்சி மாற்று எரிசக்தியான சோலார் மற்றும் காற்றாலைகள் நிறுவுதல் போன்ற தொழில்களை ஊக்குவித்து சிறந்த முன்னேற்றத்தை விரைவில் அடையும் என்று தெரிகிறது.