விண்வெளியில் சாதிக்க தயாராக உள்ள இந்தியா, 2040ல் வின்வெளித்துறையில் அசுர வளர்ச்சி அடைந்து விடும் என்பது உண்மையா? – சாத்தியக்கூறுகள் என்னென்ன.

செய்தி சுருக்கம்:
விண்வெளி வாணிபம் என்பது தற்போது உலகளாவிய முக்கிய தொழிலாக மாறியுள்ளது, இந்த துறையில் 8 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து விண்வெளி சந்தையில் இரண்டு சதவிகித பங்களிப்பை கொண்டுள்ளது இந்தியா. எதிர்காலங்களில் விண்வெளியில் உருவாகவுள்ள தொழில் வாய்ப்புகளை மனதில் வைத்து பார்க்கும் போது 2040 ஆம் ஆண்டில் 40 பில்லியன் முதல் 100 பில்லியன் டாலர்கள் வரை இந்தியாவின் பங்களிப்பு உயரக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு வலுவான அடித்தளத்தை நாம் பெற காரணம் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு நம் நாடு ஒதுக்கியுள்ள நிதியின் அளவு உயர்ந்தது, விண்வெளி ஆராய்ச்சிகளில் தனியார் நிறுவனங்கள் கால் பதிப்பது, செயற்கைகோள் வழி இணையசேவை பயன்பாடுகள் அதிகரிப்பது, இந்திய செயற்கைக்கோள் ஏவு தளங்களில் பிற நாடுகளின் செயற்கைக்கோள்கள் ஏவப்படுவது மற்றும் பல புதிய விண்வெளி சார்ந்த ஸ்டார்ட் அப்களுக்கு வாய்ப்பளிப்பது போன்ற பல்வேறு காரணங்களாகும். இந்தியா தற்போது விண்வெளி வணிக சந்தையில் தன்னுடைய கால்களை ஆழமாக ஊன்றி நின்றுள்ளது, எனவே 100 பில்லியன் டாலர்களை விண்வெளி விஷயங்களில் இந்தியா 2040 ஆம் ஆண்டிற்குள் முதலீடு செய்வது என்பது சாத்தியமான ஒன்றே என்று தெரிய வருகிறது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
உலகில் விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள 34 நாடுகளின் 381 செயற்கைக்கோள்கள் நம் இந்தியாவில் இருந்து ஏவப்பட்டுள்ளன கடந்த 24 வருடங்களில், இதன் மூலம் நமக்கு கிடைத்த வருவாய் 279 மில்லியன் டாலருக்கும் அதிகமானது. நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) வின் தோராய மதிப்பு 8 பில்லியன் டாலர்கள், சந்திராயன், மங்கள்யான் போல இந்தியாவினால் ஏவப்பட்ட பல்வேறு விண்கலம் மற்றும் செயற்கைகோள்களின் மதிப்பு 2 பில்லியன் டாலர்கள், இந்த தரவுகளின்படி இந்தியா உலகளாவிய விண்வெளி சந்தையில் இதுவரை 2 சதவிகித பங்களிப்பை அளித்துள்ளது.
உலகின் ஆறாவது மிகப்பெரிய விண்வெளிஆராய்ச்சி நிறுவனமான ISRO, இரண்டு வாரங்களுக்கு முன்பு சந்திராயன்-3 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது, 2019 இல் இந்திய அரசால் நிலாவிற்கு அனுப்பப்பட்ட சந்திராயன் -2 விண்கலத்தின் தொடர்ச்சியே இந்த விண்கலம். இம்முறை இஸ்ரோ குழு அதன் அதிக கவனத்தை விண்கலம் பழுதில்லாமல் நிலவின் தரை பரப்பில் இறங்கவும், அங்கு உலாவி தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பவும், கட்டளைகளை ஏற்கவும் தகுந்தவாறு வடிவமைப்பதில் செலுத்தியுள்ளது, இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செய்துள்ள மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
செயற்கைக்கோள் மற்றும் ஏவுகலங்களை அதிகமாக உள்நாட்டில் உற்பத்தி செய்து இத்துறையில் இந்தியாவின் பலத்தை அதிகரிக்க வேண்டும். அதற்காக, செயற்கைக்கோள் வழியான இணைய சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும், இன்னும் சொல்வதானால் இந்தியா தன்னுடைய விண்வெளி ஆராய்ச்சிகளை மேலும் அதிகரித்து கொள்வதும், விண்வெளியில் இந்தியாவிற்கான தனித்த ஸ்பேஸ் ஸ்டேஷனை உருவாக்கி கொள்வதும் முக்கியம் ஆகிறது. உலகில் தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகின்ற விண்வெளி சுற்றுலா திட்டத்தில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும், அப்போதுதான் விண்வெளி சாம்ராஜ்யத்தில் இந்தியாவின் பங்களிப்பு புதிய எல்லைகளை எட்டி நிற்க வழி பிறக்கும்.
உலகளாவிய விண்வெளி வணிகம் என்பது 2040 ஆம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் டாலர்களை எட்டிவிடும், இந்த விண்வெளி துறையில் ஆண்டுக்கு 4% வளர்ச்சியை கொண்டுள்ள இந்தியா அதில் தன்னுடைய பங்கை எடுத்துக்கொள்வதில் தவறிவிட கூடாது. தற்போது 2 சதவிகித பங்களிப்பை கொண்டுள்ள இந்தியா வரும் 2030 இல் 9% பங்களிப்பை எட்டிவிட திட்டமிட்டுள்ளது, இதே ரீதியான வளர்ச்சியை கொண்டிருந்தால் வரும் 2040 க்குள் 40 பில்லியன் டாலர் முதலீட்டு அளவை தொட்டுவிடும், நிபுணர்களின் கருத்துப்படி வருகின்ற 2040 ஆம் ஆண்டில் இந்தியா 100 பில்லியன் டாலர்கள் அளவிலான முதலீட்டை விண்வெளி துறையில் கொண்டிருக்கும் என்கின்றனர்.
விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஸ்பேஸ் ஸ்டேஷனை 2030 ஆம் ஆண்டிற்குள் நிறுவ முனைந்துள்ள இஸ்ரோ, இதில் 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. தனியார் நிறுவனங்களும் முதலீடு செய்ய தயாராக உள்ளன, சில ஸ்டார்ட் அப் அமைப்புகளுடன் கைகோர்த்து இந்த பணி 2021 இல் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.
Virgin Galactic என்ற அமெரிக்க நிறுவனம் தன்னுடைய முதல் விண்வெளி சுற்றுலாவினை 2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது, கட்டுமான பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது, இதன் மூலம் விண்வெளி சுற்றுலா திட்டம் என்பது உலக நாடுகள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது, Virgin நிறுவனத்தை போல பல்வேறு நிறுவனங்கள் இத்துறையில் கூடிய விரைவில் கால் பதிக்கவுள்ளன. 2024 இறுதியில் நாம் விண்வெளி சுற்றுலா செல்ல விண்கலங்கள் தயாராக இருக்கும், 2030 வரை கூட காத்திருக்க தேவையில்லை என தெரிகிறது. இந்த தொழிலின் முதலீடு மிகப்பெரும் அளவு, எனவே சுற்றுலாவிற்கு கட்டணமாக ஒரு நபருக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை ஆகக்கூடும் என எதிர்பார்க்க படுகிறது. இப்படிபட்ட அனுபவத்தை பெற பெரும் கூட்டம் முன்பதிவு செய்து காத்து நிற்கிறது.
விண்வெளியில் சாதிக்கவும், வலுவாக நிற்கவும் இந்தியா சில கட்டமைப்புகளை அமைப்பது அவசியம். அதன் அனைத்து இலக்காகளையும் வரைமுறை செய்து விரிவான திட்டமிடல் மற்றும் செயலாக்கத்தை கொண்டு செயல்பட வேண்டும். செயற்கைக்கோள் உற்பத்தியில் அந்நிய நாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும், முதலீட்டாளர்களின் லாபத்தை கருத்தில் கொண்டு (Productin linked incentives – PLI) போன்ற திட்டங்களை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் செயற்கைகோள் தயாரிப்பில் பெரிய நாடாக இந்தியா உருவாகும்.
இன்னும் பல புதிய, அனுபவங்கள் இல்லாத ஆனால் சிறந்த திட்டங்களை கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இஸ்ரோ வில் “sandbox program” எனப்படும் பாதிப்பில்லா சோதனைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும், உலக விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு முயற்சிகள் செய்யப்பட வேண்டும் மற்றும் விண்வெளி ஆய்வுக்கு என பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) அமைப்பை நிறுவ வேண்டும். இவையெல்லாம் தான் தற்போது விண்வெளி துறையில் அதிகரித்து வருகின்ற எதிர்கால திட்டங்களாக உள்ளன.
விண்வெளி பயணங்களிலுள்ள சிக்கல்களை அறிந்து அதை தவிர்க்கும் படியான திறன் மேம்பாட்டு பாடங்களை இன்னும் அதிகரித்து விண்வெளி பயணத்திற்கான வீரர்களை உருவாக்கி எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் இந்திய தற்போது செய்து வருகின்றது.
பின்னணி:
கால மாற்றத்திற்கு தகுந்தவாறு அனைத்து துறைகளும் மாற்றம் அடைகின்றன. கடல், நிலம் போன்றவற்றில் சுற்றி பார்த்தும் போதாது என விண்வெளிக்கு சென்று சுற்றிப்பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த சமயத்தில் இந்தியாவும் அதனுடைய விண்வெளி பயணம் சார்ந்த திட்டங்களையும் கட்டுமானங்களையும் பலப்படுத்தி உலக விண்வெளி வணிகத்தில் ஒரு சிறந்த இடத்தை அடைய 2040 எனும் இலக்கை தீர்மானித்து செயலாற்றி வருகிறது.
தற்போது வளர்ந்து வரும் செயற்கைகோள் வழியான இணைய சேவை மற்றும் பிற நாடுகளின் செயற்கைகோள்களை இந்தியாவிலிருந்து ஏவுதல் போன்ற விஷயங்களில் முழு கவனம் செலுத்தினால் இந்தியா அதன் இலக்கை தாண்டிய ஒரு வெற்றியை அடையமுடியும் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.
பல தனியார் நிறுவனங்களும் விண்வெளி, ஏவுகலன் மற்றும் செயற்கைக்கோள் சார்ந்த தொழில்களில் இறங்க முனைப்பு காட்டி வருகின்றன. இவையனைத்தும் விண்வெளி துறையில் இந்தியா, வரும் 2040 ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் சந்தை மதிப்பை எட்டிப்பிடிக்க உதவும் காரணிகளாகும்.