fbpx
LOADING

Type to search

அறிவியல் இந்தியா உலகம் தொழில்நுட்பம் பொழுது போக்கு மொழி வர்த்தகம்

செயற்கை நுண்ணறிவு அலையில் வெற்றிகரமாகச் சவாரி செய்ய இந்தியா தயாராக உள்ளது என்கிறார் ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா 

இன்று உலகம் முழுவதிலும் ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பேச்சுத்தான் அதிகமாக உள்ளது. அதன் ஆற்றலையும் அதிவேகமான பாய்ச்சலையும் கண்டால் மிகவும் வியப்பாகவே உள்ளது. சாட் ஜிபிடி, கூகுள் பார்ட் போன்ற சாட்பாட் உதவியால் பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மருத்துவம், பாதுகாப்பு, வணிகம், நிதி, சட்டம், வங்கி, போக்குவரத்து, உற்பத்தி என அனைத்துத் துறைகளிலும் இன்று ஏ.ஐ என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு கோலோச்சி வருகிறது. 

மனிதனைப் போலவே சிந்தித்துப் பதில் கூறும் திறன் படைத்த ஏ.ஐ என்னும் இந்த மென்பொருளுக்குத் தெரியாதாது என எதுவுமே இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தியாவில் பல நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை உருவாக்கச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடுகளைச் செய்கின்றன. இந்த மென்பொருளானது திட்டமிடல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், பல கோணங்களில் சிந்தித்தல், கற்றுக்கொள்ளுதல், கற்றவற்றைச் செயல்படுத்துதல் என்பது போன்ற நுண்ணறிவு திறன்களை உள்ளடக்கியதாக உள்ளது. 

ஏ.ஐ என்னும் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட இந்த மென்பொருளானது கணினி அறிவியலின் பரந்த கிளையாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை. அண்மையில் அமெரிக்காவில் 18 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரைப் பேச வைத்துள்ளது இந்தச் செயற்கை நுண்ணறிவு. இந்தியாவிலும் சமீபத்தில் ஒடிசாவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் லிசா என்ற செய்தி வாசிப்பாளரைத் தொலைக்காட்சி ஒன்று அறிமுகப்படுத்தியதும் நிஜமான பெண் போலவே இருக்கும் அந்த ரோபோ செய்திகளைப் பிழையின்றி வாசித்ததும் உங்கள் நினைவுக்கு வரலாம். இப்படி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என்பது எல்லாத் துறைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் தேசியத் திட்டம் அதாவது நேஷனல் ஸ்ட்ரேடஜி பார் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வெளியிடப்பட்டது. இதன்படி 2035 ஆம் ஆண்டுக்குள் ஏ.ஐ மூலம் இந்தியாவில் ஆண்டு வளர்ச்சியை 1.3 சதவீதம் உயர்த்துதல், சுகாதாரம், விவசாயம், கல்வி, ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் இடம்பெயர்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை தருதல் என முடிவானது. செயற்கை நுண்ணறிவுப் புரட்சிக்கான மகத்தான ஆற்றலை இந்தியா கொண்டுள்ளது எனவும் இது உலகின் செயற்கை நுண்ணறிவு திறமையாளர்களுக்கான மூன்றாவது பெரிய இடம் என்றும் கூறப்படுகிறது. 2030ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு 15.7 டிரில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் சீனாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் எனவும் கூறப்படுகிறது.  

கம்ப்யூட்டிங் ஆற்றல், தரவு சேமிப்பு மற்றும் டிஜிட்டல் தரவுகள் ஆகிவைதான்  செயற்கை நுண்ணறிவின் விரைந்த வளர்ச்சிக்கு உதவும். இதிலே ‘டிஜிட்டல் இந்தியா’ முனைவுகள் மூலம், டிஜிட்டல் தரவுகள் உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. ஆனாலும், சிறப்பு வாய்ந்த கம்ப்யூட்டர், தகவல் சேகரிப்பு வசதிகளில் நம் நாடு இன்னமும் நீண்ட தூரம் போக வேண்டி உள்ளது. 2025ஆம் ஆண்டளவில் இந்தியாவின் தொழிற்சாலை, வாகனம், சுகாதாரம் மற்றும் சில்லரை விற்பனைத் துறைகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதம் செயற்கை நுண்ணறிவின் மொத்த மதிப்புக் கூட்டலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வரும் 2035-ம்  ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரத்துக்கு, 957 பில்லியன் டாலர் அளவுக்குக் கூடுதல் வருமானம் தருகிற வல்லமை, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு இருக்கிறது. ஆக, செயற்கை நுண்ணறிவின் தலைமை இடமாக இந்தியா திகழ்வதற்கான அத்தனை தகுதிகளும் நிரம்பிக் கிடக்கின்றன.

இந்நிலையில் ஆகஸ்ட் 28ம் தேதியன்று  நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான உரையாடலில் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம்மின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, “விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக கணினி உள்கட்டமைப்பில் முதலீடுகள் அதிகரித்துள்ள உலகளாவிய போக்குக்கு ஏற்ப, ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவில் இறையாண்மைத் திறனை இந்தியா உருவாக்க வேண்டும். முக்கியமாக, தேசிய ஏ.ஐ கணினி மையத்தை அது அமைக்க வேண்டும். அதாவது இந்தியாவிற்கு கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பு தேவை; தரவு உள்கட்டமைப்பு தேவை. மேலும், இந்தியாவுக்கே உரித்தான வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்பட  ஒரு வழி தேவை. நாங்கள் இது குறித்து இந்தியத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகருடன் மிகவும் நன்றாக விவாதித்திருக்கிறோம். ஒவ்வொரு நாட்டிற்கும் மொழி மாதிரிகள், ஏ.ஐ உருவாக்கம் ஆகிவற்றை உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவில் சில இறையாண்மைத் திறன் இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரையில் செயற்கை நுண்ணறிவு அலையில் வெற்றிகரமாகச் சவாரி செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றே நினைக்கிறேன் ” என்று கூறியுள்ளார். 

அரவிந்த் கிருஷ்ணா கூறியிருப்பதைப் போல உலக நாடுகளின் தேவைகளுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்ப, நமது நாடு ஏ.ஐ குறித்தான தனது அணுகுமுறையை வெகுவிரைவில் மாற்றிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் காலம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தாலான காலம்தான் என்பதைப் புரிந்து கொண்டு நாமும் அவற்றோடு இணைந்து வேலை செய்வதற்குத் தயாராக இருப்பதுதான் நல்லது. என்ன சரிதானே?

தொடர்புடைய பதிவுகள் :

உடற்பயிற்சி செய்தால் புற்றுநோய் பாதிப்பை தவிர்க்கலாமா?
அமெரிக்கப் பணக்காரராக வேண்டுமா? உங்களிடம் 2.2 மில்லியன் டாலர் சொத்து இருந்தால் போதும்
இந்தியாவிற்கு வெளியே ‘கறி’ பற்றிய பழைமையான ஆதாரங்கள்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
தைராய்டு அறிகுறிகள்
சாலமன் தீவுகளுடனான உறவைப் பலப்படுத்துவதன் மூலம் பசிபிக் பிராந்தியத்தை ஆதிக்கம் செய்கிறதா சீனா?
விமான விபத்தில் இறந்துவிட்டாரா ரஷ்யாவின் தனியார் இராணுவ கம்பெனியின் தலைவர்..? 
மிகப்பெரும் இந்திய - அமெரிக்கா ஒப்பந்தங்கள்: H-1B விசா விதிகளில் மாற்றங்கள், விண்வெளித் துறையில் ஒரு...
சிங்கப்பூரில் துவங்கவுள்ள தமிழ் இளைஞர் திருவிழா - மூன்றாம் ஆண்டு கோலாகல கொண்டாட்டம் ஆரம்பம்.
புது பொலிவு பெறும் ஏர் இந்தியா - வண்ணங்கள், அடையாளங்கள், சீருடைகள் அனைத்திலும் மெருகேற்றப்பட்டு நவீன...
மின்சார வாகனத் தொழிற்சாலைத் திட்டம்: இந்திய வர்த்தக அமைச்சருடன் டெஸ்லா பிரதிநிதிகள் சந்திப்பு
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *