இந்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை, இதனால் உலக சந்தையில் உண்டாகப்போகும் பாதிப்புகள் – எல் நினோ ஏற்படுத்த போகும் வானிலை மாற்றங்கள்.


செய்தி சுருக்கம்:
உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யவும், இந்த ஆண்டு பருவமழை பொழிவில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாகவும் இந்திய அரசு சில குறிப்பிட்ட ரக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் அரிசியை பிரதான உணவாக கொண்டுள்ள மக்கள் வாழும் நாடுகளில் கடும் விலையுயர்வு ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடான இந்தியாவின் இந்த முடிவால் பல நாடுகள் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுவரை உக்ரைன் நாட்டின் ஏற்றுமதி மீது இருந்து வந்த தடையை கடந்த ஜூலை மாதத்தில் ரஷ்யா நீக்கியது, அதன்பின்னர் கருங்கடல் வழியாக உக்ரைன் நாட்டு தானியங்கள் உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த தடை நீங்கிய மூன்று நாட்களில் இந்தியா ஜூலை 20 ஆம் தேதி பாஸ்மதி அல்லாத வெள்ளை நிற அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உடைந்த நுச்சரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்திருந்த தடை இன்னமும் அமலில் உள்ளது. உள்நாட்டில் உயர்ந்து கொண்டே வரும் அரிசியின் விலையை கட்டுப்படுத்தவும், பணவீக்க மாறுபடும் மற்றும் எல்நினோ எனப்படும் பருவகால மாற்றத்தை எதிர்கொள்வதை முன்னிட்டும் இந்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை செய்துள்ளது. மேலும், விரைவில் துவங்கவுள்ள பண்டிகைகளும், மாநில மற்றும் மத்திய அரசு தேர்தல்களும் இந்த முடிவை எடுக்க காரணம் என தெரிய வருகிறது. இந்திய நாட்டின் அரிசி வரத்து குறைந்ததால் பல நாடுகளில் அரிசியின் விலை உயர்ந்து வருகிறது.
இந்தியாவை சேர்ந்த மிகப்பெரும் அரிசி ஏற்றுமதி நிறுவனமான Olam Agri India Private Limited சார்பில் அதன் Vice President நிதின் குப்தா செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள தகவலின்படி, உள்நாட்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் ஒரு மெட்ரிக் டன் அரிசியின் விலை 550 டாலர்களில் இருந்து உயர்ந்து தற்போது 650 டாலர்களாக உள்ளது. உலக அரிசி சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதையும், அதேசமயம் தற்போது நிலவி வரும் அரிசி தட்டுப்பாட்டிற்கான காரணங்களாக உள்ள உள்நாட்டு தேர்தல், பருவகால மாற்றம் மற்றும் எல்நினோ எனப்படும் கடல் மேற்பரப்பு சூடாகும் நிகழ்வு முன்கூட்டியே வந்ததால் விவசாயத்தில் ஏற்படும் மாறுதல்கள் என்னென்ன என்பவை பற்றி விரிவாக காணலாம்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
உலகின் 40 சதவிகித அரிசி இந்தியாவில் இருந்தே ஏற்றுமதியாகிறது, சென்ற ஆண்டில் மட்டும் 22 மில்லியன் டன் அரிசியை உலகநாடுகளுக்கு அனுப்பியுள்ளது, இதன் மதிப்பு 9.66 பில்லியன் டாலர்கள், மொத்தம் 140 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதில் 4.5 மில்லியன் டன் பாஸ்மதி ரகமும், 8 மில்லியன் டன் புழுங்கலரிசியும், 6 மில்லியன் டன் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியும் மற்றும் 3.5 மில்லியன் டன் நுச்சரிசியும் அடங்கும்.
உலகநாடுகளுடன் கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் இந்தியா தன்னுடைய பங்களிப்பில் இருந்து முழுவதும் விலகிவிடாமல் பாஸ்மதி மற்றும் புழுங்கல் அரிசி ஏற்றுமதியை நிறுத்தவில்லை, ஆயினும் பாஸ்மதி அல்லாத அரிசி மற்றும் நுச்சரியின் ஏற்றுமதி தடையானது தற்போது உலக சந்தையில் அரிசியின் விலையை 15 முதல் 25 சதம் உயர்த்தியுள்ளது. மேலும், இந்த தடையானது பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற அரிசியை பிரதான உணவாக கொண்டுள்ள மக்கள் அதிகமாக வாழும் நாடுகளை மிகவும் பாதித்துள்ளது. விலை குறைந்த ஒன்றாக உள்ள உடைந்த அரிசி ஏற்றுமதி தடை அதை நம்பியிருக்கும் ஆப்பிரிக்க நாடுகளான Benin, Senegal, Togo மற்றும் Mali உள்ளிட்ட நாடுகளை வெகுவாக பாதித்துள்ளது.
ரஷ்யா நிகழ்த்தி வரும் உக்ரைன் நாட்டின் மீதான போர் காரணமாக உலக நாடுகளில் கோதுமை மற்றும் அரிசியின் விலை ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில் கடந்த மாதம் கருங்கடல் வழி உக்ரைன் நாட்டு தானிய போக்குவரத்தை ரஷ்யா திறந்து விட்டதன் காரணமாக சற்றே குறைந்து வருகின்றது, இந்நிலையில் ஜூலை 20 ஆம் தேதி இந்திய அரசு விதித்துள்ள அரிசி ஏற்றுமதி தடையால் மீண்டும் அரிசி விலை உயர்ந்த கொண்டு போகிறது. தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து உலகின் 30 சதவிகித அரிசி ஏற்றுமதியை செய்கின்றன, இந்த நாடுகளும் உள்நாட்டு தேவை அல்லது எல்நினோ மீதான பயம் காரணமாக இந்தியாவை போன்றே தங்களது ஏறுமதியையும் தடை செய்து விட்டாலோ அல்லது குறைத்து கொண்டாலோ அரிசி இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகளின் நிலை இன்னமும் மோசமடையும். கடல் பரப்பு சூடாவதால் உருவாகும் வறட்சி ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தற்போதும் பெரும் பாதிப்பை விளைவிக்கும் என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
வியாபாரிகளும், அறிவியலாளர்களும் இந்த விஷயத்தை பற்றி கூறும்போது, உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அத்தியாவசிய உணவாக அரிசியை பயன்படுத்துகின்றனர். தற்போது நிலவி வரும் அசாதாரண சூழல்களால் அரிசி உற்பத்தி குறைந்து பற்றாக்குறை ஏற்படுமாயின் மக்கள் அனைவரும் மாற்று உணவுகளான கோதுமை, சோயாபீன்ஸ், மக்காச்சோளம் மற்றும் சோளம் போன்றவற்றை வாங்க ஆரம்பிப்பார்கள், இவை மனிதர்கள் மட்டுமன்றி கால்நடைகளுக்கும் தீவனமாக வழங்கப்படும், எனவே இவற்றின் தேவை உயர்ந்து அவற்றின் விலை அதிகரிக்கும். இதனால் எரிபொருள் விலையும் கணிசமாக உயரக்கூடும் என தெரிய வருகிறது.
இந்திய மக்கள்தொகையில் 70 சத மக்களின் பிரதான உணவாக அரிசியே இருக்கிறது, இந்தியாவில் வருடந்தோறும் சராசரியாக 135 மில்லியன் டன் அரிசி உற்பத்தியாகிறது. இதில் 100 முதல் 105 மில்லியன் டன் வரை உள்நாட்டு தேவைக்கு ஒதுக்கப்படுகிறது. நாட்டிலுள்ள 800 மில்லியன் ஏழை மக்களுக்கு இந்த சேமிப்பில் இருந்துதான் அரசு மானிய அரிசியை வழங்கி வருகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள International Rice Research Institute (IRRI) இல் முதன்மை ஆய்வாளராக இருந்து ஓய்வுபெற்று தற்போது ஆசிய பிராந்தியத்தின் இயக்குனராக உலக உருளைக்கிழங்கு மையத்தில் பணியாற்றி வரும் Samarendu Mohanty அவர்கள், “இந்தியாவின் அரிசி கையிருப்பு போதுமானதை விட அதிகமாகவே உள்ளது, நம்மிடம் 41 டன் அரிசி அரசாங்க சேமிப்பு கிடங்குகளில் உள்ளது, இதன் மூலம் எந்தவொரு உணவு நெருக்கடியையும் சமாளிக்க முடியும்” என்று கூறியுள்ளார். ரஷ்யா உக்ரைன் போரினால் உலக விலைவாசி உயர்ந்ததால் கடந்த வருடத்தில் இருந்து இந்தியாவில் அரிசி விலையும் உயர்ந்து வருகிறது. எனவே உள்நாட்டு விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், எல்நினோ பாதிப்பால் தற்போது அறுவடையாக தயாராக இருக்கும் பயிர்கள் அல்லது அடுத்த விளைச்சல் பாதிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய அரசு சில குறிப்பிட்ட ரக அரிசியின் ஏற்றுமதிக்கு தடை விதித்திருக்கிறது என்று பல வணிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், உள்நாட்டில் தொடர்ந்து ஏறிக்கொண்டு இருக்கும் அரிசி விலையை குறைக்க இந்திய அரசின் சேமிப்பில் இருந்து 2.5 மில்லியன் டன் அரிசியை வெளிசந்தைக்கு வழங்கியுள்ளது. ஆனாலும் விரைவில் நடக்கவுள்ள ஐந்து மாநில தேர்தல்கள் மற்றும் அடுத்த வருட மே மாதம் நடக்கவுள்ள மத்திய அரசு தேர்தல் போன்றவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் தற்போது ஆளும் அரசிற்கு அரிசி விலையை கட்டுக்குள் வைத்திருப்பது என்பது அரசியல் ரீதியில் மிக முக்கியமானது ஆகிறது. இந்த காரணத்தினால் தான் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, இதனால் தேர்தல்கள் முடியும் வரை அரிசி விலை உயராமல் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றாகிறது.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்கள் அங்குள்ள கடைகளில் இருந்து அரிசியை மூட்டை கணக்கில் வாங்கிசெல்லும் வீடியோ வைரலாகி வருகிறது, அமெரிக்காவில் சில கடைகள் “ஒரு குடும்பம் ஒரு மூட்டை” என்ற நிபந்தனையுடன் அரிசி விற்பனை செய்து வருகின்றன. பாஸ்மதி அரிசியை பயன்படுத்தும் நாடுகளில் இந்த பற்றாக்குறையும் விலையேற்றமும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது, ஆனால் இந்தியர்கள் அதிகம் வசிக்கின்ற மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆபிரிக்க நாடுகளிலும் மற்றும் ஆசிய நாடுகளிலும் இந்த இந்திய அரிசி ஏற்றுமதி தடையானது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
பங்களாதேஷ், நேபாள் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது அரிசி விலை மிக உயர்ந்து காணப்படுகிறது, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் எல்நினோ பாதிப்பால் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. இந்தோனேசியா மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலா துறைகளின் வருவாயை நம்பியே உள்ளது, அங்கு தற்போது கடலில் இருந்து உருவாகும் உஷ்ன காற்று பயிர்களை கருக செய்துள்ளது, இப்படியே தொடர்ந்தால் அரிசி இறக்குமதி செய்ய போதிய வசதியின்றி தடுமாறும் நிலை உருவாகும்.
Domino’s effect எனப்படும் தொடர் விளைவுகள் இதனால் ஏற்படும், மீன்வரத்து குறைந்து மக்கள் இறைச்சியை நாடினால் தீவன தேவை அதிகமாகி விடும், இதனால் எத்தனால் உற்பத்தி அளவு குறைந்து எரிபொருள் விலை உயரும், அதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயரும் என எச்சரிக்கை செய்கிறது இந்த அறிக்கை. இந்தியா அரிசி ஏற்றுமதியை தடை செய்த பின்னர் வியட்நாம் மற்றும் நேபாளத்தில் 16 சதம் அரிசியின் விலை உயர்ந்துள்ளது, சைனாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய அரிசி இறக்குமதி செய்கின்ற நாடான பிலிப்பைன்சில் தற்போது புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை பேரிடர்கள் அதிகரித்து வருவதால் அந்த நாடு பாதிக்க பட்டுள்ளது. எனவே நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இந்திய அரசிடம் G2G என்ற அரசாங்க ஒப்பந்த அடிப்படையில் அரிசியை அனுப்பிவைக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. சென்ற ஆண்டில் இந்திய நுச்சரிசி ஏற்றுமதியை தடை செய்த பின்னர் 800000 டன் உடந்த நுச்சரிசியை Senegal, Indonesia மற்றும் Gambia நாடுகளுக்கு G2G திட்டம் மூலமாக அனுப்பியது. இந்த ஆண்டும் அதேபோல G2G வகையில் சில நாடுகளுக்கு அரிசி அனுப்பி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் சிலர் செலவு அதிகமான இந்த குறைந்த அளவிலான அரிசி ஏற்றுமதி என்பது அரசியல் ஆதாயத்திற்காக என்று கூறி வரும் நிலையில், அரசுத்தரப்பு கூறி உள்ள பதிலில் அந்த நாடுகளின் உணவு பாதுகாப்பு மற்றும் தேவை மட்டுமே இங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது, செலவோ விலையோ முக்கியமல்ல என்று தெரிவித்துள்ளது.
பின்னணி:
எல்நினோ என்பது அதிகபட்ச மழைப்பொழிவு அல்லது கடும் வறட்சியை ஏற்படுத்தும், இதனால் ஆசிய நாடுகளின் அரிசி உற்பத்தி பாதிக்கப்படும். ஆசிய நாடுகளில் இருந்து தான் உலகின் 90 சத அரிசி ஏற்றுமதி நடக்கிறது, கிழக்கு பசிபிக் கடலில் அதிகரித்து வரும் வெப்பநிலை எல்நினோவின் தீவிரத்தை காட்டுகிறது. இது இந்திய அரிசி உற்பத்தியில் 60 சதத்தை பாதிக்கும் அதேசமயம் இந்தோனேஷிய நாட்டின் உற்பத்தி 100 சதம் பாதிப்புக்கு உள்ளாகும். உலக வெப்பமயமாதல் காரணமாக உருவாகும் இந்த எல்நினோ பாதிப்பு ஒன்பது முதல் பனிரெண்டு மாதங்கள் வரை நீடிக்கும். இந்தியாவில் தற்போது பருவமழை சரியாக இல்லை, ஆகஸ்டில் உருவாகியுள்ள இந்த எல்நினோ காரணமாக இவ்வாண்டு மழைப்பொழிவு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும், இதனால் அடுத்த பட்டத்தில் பயிரிடப்படும் விளைச்சலையும் இது பாதிக்கும். வருடந்தோறும் 135 மில்லியன் டன் அரிசி உற்பத்தி ஆகின்ற இந்தியாவில் இந்த எல்நினோ காரணமாக இந்த ஆண்டு 80 முதல் 90 மில்லியன் டன் அளவே உற்பத்தி செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.
காலநிலை மற்றும் பருவ மாறுபாடுகளை ஆய்ந்து வரும் விஞ்ஞானிகள் அரேபியன் கடல் மேற்பரப்பு வெப்பம் அதிகரித்து வருவதாகவும் இதனால் பாகிஸ்தான் பகுதிகளில் பெருவெள்ளம் உண்டாகும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர், இதனால் அந்நாட்டின் விளைச்சல் பெருமளவு பாதிக்கும். இந்தியாவில் வழக்கமாக டிசம்பரில் துவங்கி பிப்ரவரி வரை நீடிக்கும் இந்த எல்நினோ இந்த ஆண்டில் அக்டோபரில் ஆரம்பித்து டிசம்பர் வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளனர். இது தற்போதைய விளைச்சலை மட்டுமன்றி அடுத்த மகசூலும் இதனால் பாதிக்கப்படும், இந்த அசாதாரண சூழல் அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை வெகுவாக குறைத்து விடும், அனைத்து அரிசி உற்பத்தி நாடுகளும் இருப்பு வைக்க முடிவெடுத்து விட்டால் அல்லது ஏற்றுமதியை தடை செய்து விட்டால் கடந்த 2007-2008 ஆம் ஆண்டுகளில் மூன்று மடங்கு அரிசி விலை உயர்ந்தது போல தற்போதும் நிகழ் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அச்சமயத்தில் முதலில் வியட்நாம் ஏற்றுமதிக்கு தடை விதித்தது, அதை தொடர்ந்து இந்தியா மற்றும் கம்போடியா அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்ததால் விலை உயர்வும் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இப்போதும் அது போல நிகழக்கூடிய காலசூழ்நிலை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.