இந்தியாவில் தங்க நகைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு! சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வந்தவர்களுக்கு சவுக்கடி!!

செய்தி சுருக்கம்:
இது நாள் வரை இந்தியாவில் தங்கமானது இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் இலவச பிரிவில் இருந்து வந்தது. இப்போது இது கட்டுப்பாடு பிரிவுக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய தங்கத்திற்கான நுகர்வு சந்தையைக் கொண்டுள்ள நாடான இந்தியா கடந்த புதன்கிழமை முதல் சாதாரண தங்கத்தை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆனால் இந்த கட்டுப்பாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு பொருந்தாது. இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் எந்த உரிமமும் இல்லாமல் தங்கம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
ஏன் இந்த திடீர் கட்டுப்பாடு?
கடந்த சில மாதங்களாக இறக்குமதியாளர்கள் எந்தவொரு இறக்குமதி வரியும் செலுத்தாமல் இந்தோனேசியாவிலிருந்து சாதாரண தங்க நகைகளை டன் கனக்கில் இறக்குமதி செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“இந்தோனேஷியா ஒருபோதும் இந்தியாவிற்கு தங்க நகை சப்ளையர் அல்ல, ஆனால் கடந்த சில மாதங்களில், இந்தோனேசியாவிலிருந்து 3-4 டன்களை இறக்குமதி வரி செலுத்தாமல் தங்க நகை வியாபாரிகள் இறக்குமதி செய்தனர்” என்று மும்பையைச் சேர்ந்த தனியார் தங்க இறக்குமதி வங்கியின் டீலர் கூறியுள்ளார்.
தங்கத்தை இறக்குமதி செய்வதில் உள்ள சட்டங்களில் இருக்கும் சில ஓட்டைகளை பயன்படுத்தி இந்தோனேசியாவில் இருந்து டன் கணக்கில் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த சட்ட ஓட்டைகளை அடைக்கும் பொருட்டு இந்தியா இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது நிரந்தரமானதா இல்லை தற்காலிகமானதா என்பது குறித்து இன்னும் அறியப்படவில்லை.