26 ரஃபேல் ஜெட் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்சிடமிருந்து வாங்க போகும் இந்தியா!!

செய்தி சுருக்கம்:
பிரான்சிடம் இருந்து மேலும் 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் மூன்று ஸ்கார்பீன் ரக வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 13 மற்றும் 14ம் தேதிகளில் பிரான்ஸ் செல்லவிருக்கும் பிரதமர் மோடி இதை அறிவிப்பார் என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இந்த ஆண்டு பாஸ்டில் தின அணிவகுப்பில் கௌரவ விருந்தினராக பாரத பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்க பிரான்ஸ் செல்கிறார். அப்போது பிரதமர் மோடி இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிகிறது.
இந்திய கப்பற்படைக்கு 22 ஒருவர் அமரக்கூடிய ரபேல் மறைன் விமானங்கள் மற்றும் நான்கு பயிற்சி விமானங்களும் மூன்று ஸ்கார்பின் வகை நீர்மூழ்கிக் கப்பல்களும் கப்பற்படையால் வாங்கப்படும்.
இந்த விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் பற்றாக்குறையை கப்பற்படை எதிர்கொண்டு வருவதால் அவற்றை வாங்குவதற்கு கப்பற்படை அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. விமானம் தாங்கி கப்பல்களான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்த் ஆகியவை மிக்-29 வகை விமானங்களை இயக்கி வருகின்றன. மேலும் இவற்றிற்கு இரண்டு கேரியர்களிலும் செயல்பட ரஃபேல் வகை விமானங்கள் தேவைப்படுகின்றன.
பின்னணி:
இந்த ஒப்பந்தங்கள் ரூபாய் 90 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் ஒப்பந்த பேச்சு வார்த்தைகள் முடிந்த பின்னரே இறுதித் தொகை தெளிவாக தெரியும்.
இந்தியாவுக்கு ஏற்கனவே 36 ரஃபேல் வகை போர் விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் 2016ல் கையெழுத்தானது. 2016 இல் இந்தியாவின் பிரான்சும் ரூபாய் 59 ஆயிரம் கோடி மதிப்பிலான 39 ரபேல் வகை போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ரபேல் விமான ஊழல் என்பது என்ன ?
இந்தியா 1996 வரை ரஷ்யாவிடம் இருந்து சுகோய் விமானங்களை வாங்கியது. அதன்பிறகு வெளிநாட்டிலிருந்து போர் விமானங்கள் வாங்கப்படவில்லை. உள்நாட்டிலேயே விமானம் தயாரிப்பது என்ற திட்டப்படி 2001 இல் தேஜஸ் எனப்படும் இலகுரக போர் விமானம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஆனால் இதன் உற்பத்தி தாமதமாகி 2016 இல் தான் விமானப்படையில் இது சேர்க்கப்பட்டது.
இதற்கிடையில் போர் விமானங்களின் தேவை அதிகரித்ததால் 2007 இல் மன்மோகன் சிங் ஆட்சியில் 126 போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்த பின் பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்திடமிருந்து போர் விமானங்களை வாங்க முடிவெடுக்கப்பட்டது.
2014 மே மாதம் மோடி அரசுக்கு வருகிறார். 2015 ஏப்ரலில் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். முன்பு எடுக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு மாறாக வெறும் 36 ரபேல் விமானங்களை மட்டுமே வாங்கப் போவதாக அறிவிக்கிறார். முன்பு கையெழுத்தான ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது. எனவே புதிய ஒப்பந்தம் 2016 செப்டம்பரில் கையெழுத்து ஆகிறது.
முந்தைய மன்மோகன் சிங் அரசு விமானத்தை 526 கோடி ரூபாயில் வாங்குவதாக ஒப்பந்தம் போட்டிருந்தது. மோடி அரசின் புதிய விலை 1670 கோடி ரூபாய்!
முந்தைய ஒப்பந்தத்தின்படி 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதம் 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் புதிய ஒப்பந்தத்தின் படி அனைத்து விமானங்களும் பிரான்ஸில் தான் தயாரிக்கப்படும்.
முந்தைய ஒப்பந்தத்தில் தஸ்ஸோ நிறுவனம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹெச் ஏ எல் நிறுவனத்திற்கு தொழில்நுட்பத்தை வழங்கும். ஆனால் புதிய ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தொழில்நுட்பத்தை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான எச் ஏ எல் நிறுவனம் விமானத்துறையில் அனுபவம் வாய்ந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விமான துறையில் எந்த அனுபவமும் இல்லை.
இது போன்ற பல காரணங்களால் முந்தைய ரபேல் விமான ஒப்பந்தம் சர்ச்சைக்குரியதாகியது. இதன் காரணமாகவே ரபேல் என்ற வார்த்தையை கேட்டாலே ஊழல் என்ற வார்த்தையும் சேர்ந்து நம் காதுகளில் ஒலிக்கிறது.