காவல்துறையில் புகார் அளிப்பது எப்படி?

இந்திய நாட்டுச் சட்டங்களில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் அறியப்படும் சட்டங்கள் என்பவை சிவில் சட்டம் எனப்படும் உரிமையியல் சட்டங்களும் கிரிமினல் சட்டம் எனப்படும் குற்றவியல் சட்டங்களும்தான். இவற்றுள் உரிமையியல் சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான கால அவகாசம் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படுகிறது. ஆனால் குற்றவியல் சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களுக்குத் தேவையான கால அவகாசம் பெரும்பாலும் கிடைப்பதில்லை. அதிலும் ஒரு குற்ற நிகழ்வில் ஒருவர் பாதிக்கப்படும்போது அதை ஏற்படுத்தியவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எப்படி என்பது கூடத் தெரியாமல் பலர் இருக்கின்றனர்.
சட்டரீதியாக ஒரு குற்றம் குறித்துக் காவல்துறை அறிய வந்தால் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றுதான் நம் சட்டம் கூறுகிறது. ஆனால் எந்தக் காவல்துறையும் தாமாக முன்வந்து குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்கள் சென்று புகார் கொடுத்தாலொழிய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்பதே வாடிக்கையாகிவிட்டது. சரி வாருங்கள் ஒரு குற்ற நிகழ்வு குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பாதிக்கப்பட்டவரோ அல்லது அவர் சார்பாக வேறொருவரோ என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
பொதுவாகக் குற்ற நிகழ்வு குறித்துப் புகார் அளிக்க விரும்புபவர் தன்னுடைய வசிப்பிடம் அல்லது எவர் மீது புகார் அளிக்கிறாரோ அவரது வசிப்பிடம் அல்லது குற்றம் நிகழ்ந்த இடம் ஆகியவற்றுள் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் புகார் அளிப்பதற்குக் காவல் நிலைய எல்லைகள் தடை கிடையாது என்பதை முதலில் தெரிந்துகொள்ள் வேண்டும். எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்.
மக்களிடையே நிலவும் இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கத்தான் காவல்துறை சார்பில் நாடெங்கும் ‘ஜீரோ எப்ஐஆர்’ திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளிப்பதற்கு எந்தக் காவல் நிலையத்தையும் தேர்ந்தெடுக்கலாம். அப்படி அவர் அளிக்கும் புகாரின் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
புகார் மனுவில் மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான எண் ஆகியவற்றை எழுத வேண்டும். புகார் மனுவை சாதாரண வெள்ளைத் தாளில் கையால் தெளிவாக எழுதினாலே போதுமானது. சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியின் பெயரைப் பெறுநர் பகுதியில் குறிப்பிட வேண்டும். காவல் நிலையத்தில் பல அதிகாரிகள் இருந்தாலும் குற்ற நிகழ்வு விவரங்களைப் பெறுபவர் காவல்துறை ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளரே ஆவார். அவரே புகார் மனுவைப் பரிசீலித்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்க முடியும். புகார் மனுவில் குற்றம் நிகழ்ந்த இடம் மற்றும் நேரத்துடன் அதுகுறித்த முழுமையான விவரங்கள் இடம்பெற வேண்டும்.
எடுத்துக்காட்டாக, எதிரி உங்களை மோசமான வார்த்தைகளில் திட்டி இருந்தாலோ கொலை மிரட்டல் அல்லது வேறு ஏதேனும் மிரட்டல் விடுத்திருந்தாலோ அவற்றைக் குறிப்பிடவேண்டும். கைகலப்பு அல்லது தாக்குதல் நடந்திருந்தால் அது எவ்வாறு நடைபெற்றது என்பதையும் எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது என்பதையும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் இழப்புகளையும் குறிப்பிட வேண்டும்.
இவை தவிர, விபத்து, திருட்டு மற்றும் கொள்ளை பற்றிய புகார்கள் என்றால் இழப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் அளிக்கப்படவேண்டும். நீங்கள் கொடுக்கும் புகார்களில் எதிரிகளை அடையாளம் காட்டுவது மிக முக்கியமானது. காவல்துறைக்கு அது மிகவும் உதவும் என்பதால் எதிரிகளின் பெயர் மற்றும் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சில சமயங்களில் உங்களுக்கு எதிரிகளின் பெயர்கள் தெரியாமல் இருந்து அடையாளம் மட்டுமே தெரியும் என்றால் ‘பெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக் கூடிய நபர்’ எனக் குறிப்பிட வேண்டும். அவர்களுடைய அடையாளமும் உங்களுக்குத் தெரியாது என்ற பட்சத்தில் ‘அடையாளம் தெரியாத நபர்’ என்று குறிப்பிட வேண்டும்.
எதிரிகளால் உங்களுக்குக் காயம் ஏற்பட்டு உங்களால் காவல் நிலையம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் உங்கள் சார்பாக வேறு ஒருவர் காவல் நிலையம் சென்று புகார் அளிக்கலாம். இயன்றவரையில் உண்மையான மற்றும் முழுமையான விவரங்களைத் தருவது மிகவும் நல்லது. ஏனென்றால் நீங்கள் கொடுக்கக்கூடிய விவரங்களின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளையில், நீங்கள் அளிக்கக்கூடிய அந்த விவரங்களைத் தாண்டியும் உண்மைகள் இருக்கலாம். எனவே அந்த உண்மையையும் காவல்துறை விசாரிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
காவல் நிலையம் இவ்வாறு பதிவு செய்யும் புகார்களை விசாரித்துத் தகுதியுடைய அனைத்து புகார்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையைத் தயாரிக்க வேண்டும் எனக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் சொல்கிறது. ஆனால் நிர்வாக வசதி கருதி, தமிழகக் காவல்துறையில் புகார்கள் மீது எப்ஐஆர் தயாரிப்பதற்கு முன்பு சமூகசேவைப் பதிவேட்டில் பதிவு செய்து அதற்கான ரசீது வழங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இதை நம் நாட்டுச் சட்டமும் அரசாணையும் அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் நீதிமன்றங்கள் இந்த முறையை ஏற்றுக் கொள்கின்றன.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் பல சமயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகார்களைப் பல்வேறு காரணங்களைச் சொல்லிக் காவல்துறையினர் ஏற்பதும் இல்லை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதுமில்லை என்ற நிலையும் உள்ளது. அத்தகைய நேரங்களில் அதாவது காவல்துறையினர் புகாரைப் பதிவு செய்ய மறுக்கும் பட்சத்தில் பதிவுத் தபால் அல்லது ஆன்லைன் மூலமாகப் புகார் அளிக்கலாம். அவற்றின் மேலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் உயர் அதிகாரிகளை அணுகலாம். இப்படி நேரடியாக உயரதிகாரிகள் புகார்களைப் பெற்றால் உள்ளூர் காவல் நிலையங்களின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து போகும் என்பதை யாராலும் மறுக்க முடியாதுதான். இருந்தாலும் என்ன செய்வது? சரி, இவை எதுவும் நடக்கவில்லை என்றால் என்ன செய்யவேண்டும் என்கிறீர்களா? வேறென்ன, நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியே இல்லை!