fbpx
LOADING

Type to search

அறிவியல்

இந்தியப் பெருங்கடலில் ‘துளை’ இருக்கிறதா?

Indian Ocean

செய்தி சுருக்கம்:

இந்தியப் பெருங்கடலின் ஓரிடத்தில் ‘துளை’ இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால், அதன் வழியாக தண்ணீர் கொட்டிவிடுமல்லவா! இது தண்ணீர் வெளியேறக்கூடிய துளை அல்ல. புவியீர்ப்பு விசையில் ஏற்பட்டுள்ள குறைபாடே ‘துளை’ என்று கூறப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் புவியீர்ப்பு விசை மிகக்குறைந்த இடத்தில் நீரின் மட்டம் இயல்பை காட்டிலும் தாழ்வாக உள்ளது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

இந்தியப் பெருங்கடலானது பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்து அளவில் பெரிதானது. அதாவது உலகில் மூன்றாவது பெரிய கடல் இதுவாகும். ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களின் தென்முனைகளுக்கு இடையே இது பரந்துள்ளது. உலக பெருங்கடல்களில் ஐந்தில் ஒரு பாகம் நீர் இந்தியப் பெருங்கடலில் உள்ளதாகும். இதன் மொத்தப் பரப்பு ஏறத்தாழ 7 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் சதுர கி.மீ. ஆகும்.

இந்தியப் பெருங்கடலில் ஒரு பகுதியில் புவியீர்ப்பு விசை சராசரியை விட மிகக்குறைவாக காணப்படுகிறது என்று மண்ணியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது இந்திய பெருங்கடல் ஜியோட் லோ என்று அதாவது ஐஓஜிஎல் என்று குறிப்பிடப்படுகிறது. ஆப்பிரிக்காவுக்கு அருகில் முன்பு ஆழ்ந்துபோன பழம்பெருங்கடல் அல்லது புவி தட்டு ஒன்றின் அடிப்பகுதியின் மிச்சங்கள்மேல் எரிமலை குழம்பிலான பாறையின் கூரான பகுதிகள் காணப்படுவதால் இந்த வித்தியாசம் காணப்படலாம் என்று நம்பப்படுகிறது.

பின்னணி:

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட நீல நிறத்தில் காட்சியளிக்கும் பூமியின் படத்தை நாம் பார்த்திருப்போம். ஆனால் பூமியானது அப்படி அழகான உருவம் கொண்டதல்ல. அது ஏற்றமும் இறக்கமும் கொண்டது. உருளைக்கிழங்கு போல ஒழுங்கற்ற மேற்பரப்பு கொண்டது. மலைகளும் பள்ளத்தாக்குகளும், பூமியின் அடியிலுள்ள புவித்தட்டுகளின் நகர்வும் மேற்பரப்பில் ஒழுங்கற்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதுபோன்றே பெருங்கடல்களுக்குள் அடிப்பரப்பு ஒழுங்கற்றே இருக்கிறது.

கோள்களின் ஈர்ப்பு விசை:

பிரபஞ்சம் அல்லது அண்டவெளியிலுள்ள அனைத்து கோள்களும் தங்கள் நிறைக்கேற்றவண்ணம் ஈர்ப்பு விசை கொண்டுள்ளன. சூரியனின் ஈர்ப்பு விசை காரணமாகவே அனைத்து கோள்களும் குறிப்பிட்ட பாதையில் அதைச் சுற்றி வருகின்றன. ஒரு கோளில் உள்ள பருப்பொருளின் எடை அந்தக் ஈர்ப்பு விசையை பொறுத்தே கணக்கிடப்படுகிறது. உதாரணமாக பூமியில் உங்கள் எடை 60 கிலோகிராம் என்று வைத்துக்கொண்டால், சந்திரனுக்கு நீங்கள் சென்றால் உங்கள் எடை ஏறத்தாழ 10 கிலோகிராம் (10.02 கிகி)என்று கூறப்படும். வியாழன் கிரகத்தில் உங்கள் எடை ஏறத்தாழ 140.4 கிலோகிராமாக இருக்கும். இவ்வாறு ஒரே நிறை கொண்ட பொருள்கள் வெவ்வேறு கோள்களில் வெவ்வேறு எடையில் இருக்கும். சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாகவே பூமியிலுள்ள கடல்களில் அலைகள் எழும்புகின்றன.

புவியீர்ப்பு விசை:

பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்று கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன் என்று பள்ளிப்பருவத்திலேயே படித்திருக்கிறோம். கோளைச் சுற்றி அதன் ஈர்ப்பு விசை வட்டவடிவில் செயல்படும் என்று அவர் கூறினார். அதாவது ஒரு கோளிலிருந்து பொருள் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பதைப் பொறுத்து அதன்மேல் செயல்படும் ஈர்ப்புவிசை கூடுதலாக அல்லது குறைவாக உணரப்படும்.

சராசரி புவியீர்ப்பு விசையானது நொடியின் இருமடிக்கு 9.8 மீட்டர் என்று குறிப்பிடப்படுகிறது. இதைப் பொறுத்தே பூமியில் எந்தப் பொருளின் எடையும் கணக்கிடப்படுகிறது.

பூமியின் ஈர்ப்பு விசை காரணமாகவே பொருள்கள் பூமியின் மீது தங்கியிருக்கின்றன. நாமும் நடமாட முடிகிறது. அனைத்து பருப்பொருள்களுக்கும் அவற்றின் நிறையைப் பொறுத்து ஈர்ப்பு விசை உள்ளது. பூமியின் நிறையுடன் ஒப்பிடும்போது நம்முடைய நிறை பொருட்படுத்ததக்கதல்ல. ஆகவே, நம்முடைய ஈர்ப்பு விசையானது பூமியின்மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

பூமியானது உருண்டை வடிவமானது; புவியீர்ப்பு விசை பூமி பரப்பின் எல்லா இடங்களிலும் சமமாக இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், பூமி உருண்டையின் மேற்புறமும் அடிப்புறமும் தட்டையாக இருக்கிறது. பூமி முழுமையான உருண்டை அல்ல. வட துருவம் மற்றும் தென் துருவ பகுதிகளில் அது தட்டையாக உள்ளது. நிலநடுக்கோட்டுப் பகுதியில் அது உப்பி பெரிதாக இருக்கிறது.

புவியீர்ப்பு விசையானது பூமியின் கிரெஸ்ட் எனப்படும் புவியோடு, மேண்டில் எனப்படும் புவிமேற்பரப்பு மற்றும் அப்பரப்பின் கீழான மொத்த ஆழம் இவற்றைப் பொறுத்து இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. விண்வெளியை ஆய்வு செய்த அளவு அதிகமாக நாம் பூமியின் உள்பகுதியை ஆய்வு செய்யவில்லை.

பெருங்கடலில் அலைகளும் நீரோட்டமும் இல்லையென்றால் அதன் நீரானது புவியீர்ப்பு விசை அதிகமாக இருக்கும் இடத்தில் உயர்ந்தும், புவியீர்ப்பு விசை குறைந்த இடங்களில் தாழ்வாகவும் இருக்கும். ஒழுங்கற்ற இந்த வடிவம் ஜியோட் என்று அழைக்கப்படுகின்றன. பூமி மேற்பரப்பில் ஏறக்குறைய 71% கடலாக இருக்கிறபடியினால் இந்த புவியீர்ப்பு விசை மாறுபாடு கடலின் தோற்றத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

புவியீர்ப்பு விசையானது நிலப்பரப்பில் வைக்கப்பட்டுள்ள உணர்வு கருவிகள் மற்றும் செயற்கைகோள்கள் இவற்றின் மூலம் அளவிடப்பட்டு, தொகுக்கப்படுகிறது.

இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் தென்முனையிலிருந்து தென்மேற்கே 1,200 கிலோ மீட்டர் தொலைவில், இலங்கைக்கும் தெற்கே அமைந்துள்ள 30 லட்சம் சதுர கி.மீ பரப்பில் இந்த புவியீர்ப்பு விசை குறைபாடு காணப்படுகிறது. இந்தப் பகுதியில் நீர்மட்டம் இயல்பை காட்டிலும் 106 மீட்டர், ஏறக்குறைய 348 அடி தாழ்வாக உள்ளது.

டச்சு நாட்டு புவிஇயற்பியல் அறிஞர் ஃபெலிக்ஸ் ஆண்ட்ரிஸ் வேனிங் மெய்னேஸ் என்பவர் செய்த கப்பல் அடிப்படையிலான புவியீர்ப்புவிசை கணக்கீட்டின்போது ஐஓஜிஎல் என்னும் இந்த இடத்தை கண்டுபிடித்தார். புவியீர்ப்பு விசை ஏன் குறைவாக உள்ளது என்ற காரணத்தை அறிவதற்காக, கடந்த 14 கோடி ஆண்டு காலத்தில் புவித்தட்டுகள் மாற்றம் பெற்றதன் மாதிரிகளை செய்து ஒப்பீடு செய்து பார்த்து விடை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பூமியின் மேற்பரப்பு, பெருங்கடலாயின் அதற்குக் கீழான பரப்பினுள் நிறை குறைந்த பருப்பொருள்கள் இருப்பதே காரணம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தொடர்புடைய பதிவுகள் :

பெண்களுக்கு உச்சக்கட்ட இன்பம் சாத்தியமா?
22 பேருடன் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றத்தைத் தொடங்க முடியும்..! எந்தமாதிரியான குணமுள்ள மனிதர்கள் த...
இந்தியாவின் சந்திராயன் - 3 வெற்றிகரமாக நிலவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது!! 
நிலவின் தென் துருவத்தில் இரவு தொடங்கியது - பிரயாணக்களைப்பு தீர 18 நாட்கள் ஓய்வெடுக்க போகும் சந்திராய...
மனிதர்கள் தாங்கக்கூடிய அதிகபட்ச வெப்பநிலை என்ன? ஆய்வு முடிவில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!!
படைப்பாற்றலில் கற்பனைத்திறனில் மனிதனை மிஞ்சும் சாட்ஜிபிடி (ChatGPT)!! ஆகச்சிறந்த படைப்பாளிகள் கூட சா...
நரம்பு தளர்ச்சி வர என்ன காரணம்?
இந்தியாவின் முதல் ட்ரோன் போலீஸ் படைப்பிரிவு தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது - இன்றுமுதல் செயல்பாட்டிற்க...
கல்லீரல் பாதிப்புக்கு வழங்கப்படும் மருந்தில் போலிகள் கலந்துள்ளன - இந்தியா மற்றும் துருக்கியில் அதிகள...
உங்கள் துணை மீது அதிக அக்கறை செலுத்துங்கள் - அப்புறம் பாருங்கள் உங்கள் செக்ஸ் வாழ்க்கை எப்படி மாறுகி...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *