பொழுதுபோக்குகள் மன அழுத்த அபாயத்தை 30% குறைக்கும்: புதிய ஆய்வு முடிவு

மன அழுத்தம் இல்லாதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை, நாட்டின் தலைவர் முதல் கடைநிலை ஊழியர் வரை மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது இயல்பான ஒன்றாகிவிட்டது. உலகில் இன்று அதிகம் பேசப்படும் உளவியல் பிரச்சினை இதுதான். ஒரு சிலர் எப்பொழுதுமே மன அழுத்தத்துடன் இருப்பார்கள். கேட்டால் அதிக வேலைப்பளு, குடும்பம், தனிப்பட்ட பிரச்சினைகள் என்று கூறுவார்கள். வேறு சிலர் குறிப்பிட்ட சமயங்களில் மட்டும் மன அழுத்தத்துக்கு ஆட்படுவார்கள். எடுத்துக்காட்டாக மாணவர்கள் பரீட்சை, போட்டி, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின்போது மன அழுத்தத்துக்கு ஆளாவது மற்றும் உடல்நிலை பாதிப்பின் போது சிலர் மன அழுத்தத்துக்கு ஆளாவது ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
உங்களுக்குத் தெரியுமா? ஒருவர் மன அழுத்தத்தோடு இருந்தால் முதலில் பாதிக்கப்படுவது அவரது சுவாச அமைப்புதான். அதாவது மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ரத்த ஓட்டம் சீராக இல்லாதுபோகும். இரண்டாவதாக நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது கார்டிசோல் என்னும் ஹார்மோன் உங்கள் உடலில் சுரக்க ஆரம்பித்துவிடும். இது உடலின் எதிர்ப்புச் சக்தியைக் குறைப்பதோடு இன்ஃப்ளமேட்ரி வழியையும் சிதைக்கும். அதாவது உங்கள் உடல் பாக்டீரியா மற்றும் வைரசுடன் போராட முடியாமல்போய் நோய்களுக்கு ஆட்பட வேண்டிவரும்.
மூன்றாவதாக உங்களுடைய தசை மற்றும் எலும்புகள் மிகவும் பாதிக்கப்படும். உடலுக்குள் இருக்கும் பாகங்களைப் பாதுகாப்பதற்குத்தான் சதைப்பகுதி உள்ளது. மன அழுத்தம் ஏற்படும்போது இந்த தசைப்பகுதிகள் வலுவிழப்பதால் தோள்பட்டை, முதுகு, கழுத்து, மற்றும் தலை வலி ஆகியவை ஏற்படும். மன அழுத்தத்தில் இருப்பவர்களின் உணவுப்பழக்கம் முறையாக இல்லாது போகும் காரணத்தால் அஜீரணப் பிரச்சனைகள் ஏற்படும். இதனால் இரைப்பை மற்றும் குடலில் பாதிப்புகள் ஏற்பட்டு வயிறுவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
அடுத்ததாக மன அழுத்தத்தால் சிந்தனை செய்யும் திறன் குறைந்து போகும். ஏனென்றால் நாளமில்லா அமைப்புகள்தான் உடலில் அதிக வேலை செய்யக்கூடியவை. மன அழுத்தத்தால் இவை பாதிக்கப்படும்போது சிந்தனைத் திறன், திசுக்களின் செயல்பாடுகள் மற்றும் உடலின் மொத்த மெட்டபாலிசமும் பாதிக்கப்படும். மூளையின் ஹைப்போதலாமஸ் என்னும் பகுதிதான் நாளமில்லா அமைப்புடன் உடலின் நரம்பு மண்டலங்களை இணைக்கிறது. மன அழுத்தம் ஏற்படும் போது இது பாதிக்கப்பட்டு கார்டிசோலைத் தூண்டுகிறது. இவை தவிர இனப்பெருக்க அமைப்புகளும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்.
விந்தணு உற்பத்தி பாதிப்பு மற்றும் பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்சினைகள் போன்றவை மன அழுத்தத்தால் ஏற்படும். சர்க்கரை நோய் வருவதற்கும் இது காரணமாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இறுதியாக, ஒருவர் தொடர்ந்து மன அழுத்தத்துக்கு உள்ளானால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரைப் பறித்து விடும் அபாயமும் உள்ளது.
ஒருவர் தனக்குச் சாதகமற்ற நிலையை உணரும் போதோ அல்லது சவாலான நிகழ்வை எதிர்நோக்கும் போதோ அவருடைய உடலுக்குள் எச்சரிக்கை மணிகள் ஒலிக்க ஆரம்பிக்கின்றன. அவரது அட்ரினல் சுரப்பிகள் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் ஆகிய ஹார்மோன்களைச் சுரக்கத் தொடங்குகின்றன. மன அழுத்தம் ஆரம்பமாகிவிடுகிறது. விளைவு வேகமான இதயத் துடிப்பில் ஆரம்பித்து உடல் பல்வேறு விதமான பிரச்சினைகளைச் சந்திக்கிறது. பொதுவாக மன அழுத்தத்துக்கான அறிகுறிகளாக விரைவான இதயத்துடிப்பு, தலைவலி, அஜீரணம், தொடர்ந்து வியர்ப்பது, தூக்கமின்மை அல்லது தூக்கம் அதிகரிப்பு, அடிக்கடி ஜலதோஷம், வயிற்றுப்போக்கு, மார்பில் கனமான உணர்வு, வாய் உலர்ந்து போதல் ஆகியவை கூறப்படுகின்றன.
மன அழுத்தத்தின் இந்த அறிகுறிகளையும் மன அழுத்தத்தை உருவாக்கும் அபாயத்தையும் பொழுதுபோக்குகள் 30 சதவீதம் வரை குறைக்கும் என லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். மேலும் பொழுதுபோக்குகளால் மனச்சோர்வு உள்ளவர்கள் குணமடைய 272 சதவீதம் அதிக வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 13 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஆய்வில் 50 வயதுக்கு மேற்பட்ட 8280 பெரியவர்கள் உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இதில் 70 சதவீதம் பேர் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல், தன்னார்வத் தொண்டு, தச்சு வேலை மற்றும் இசை உருவாக்குதல் போன்ற பொழுதுபோக்குகளை கொண்டவர்கள். இவர்கள் அனைவருக்கும் குறைந்த அளவிலான மனச்சோர்வு அறிகுறிகளே காணப்பட்டது என்றும் மன அழுத்தத்துக்கும் இவர்கள் ஈடுபட்டிருக்கும் பொழுதுபோக்குகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய்க் காலத்திற்குப் பிறகு மன அழுத்த அளவுகள் எப்போதுமில்லாத உச்சத்தை எட்டியிருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். “மன அழுத்தத்திலிருந்து விடுபட உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யுங்கள். உடற்பயிற்சி, தியானம், யோகா, இசை, நீச்சல், ஜாக்கிங் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்” என்கிறார்கள். இவ்வகையான பொழுதுபோக்குகள் மன அழுத்தத்தை முப்பது சதவீதம் குறைக்கும் என்பதுதான் அவர்களது சமீபத்திய ஆய்வு முடிவு.
எனவே பயனுள்ள வகையில் உங்கள் பொழுதுபோக்குகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் மன அழுத்தம் என்பது இயல்பானதுதான் என்றாலும் நீண்ட நாட்கள் அது தொடரும்போதுதான் மனம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பிரச்சினைகளைச் சந்திக்காத மனிதர் எவரும் இல்லை. வாழ்வில் எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் ‘இதுவும் கடந்து போகும்’ என்ற மன நிலைக்கு வந்தால் மட்டுமே மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.