fbpx
LOADING

Type to search

அறிவியல்

HIV எப்படி வரும்…?

HIV (Human Immunodeficiency Virus) என்பது பொதுவாக‌ எய்ட்ஸ் (AIDS) நோயை உருவாக்கும் ஒரு கிருமி ஆகும். இந்தக் கிருமி, மனித‌ உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக அழித்து, எய்ட்ஸை உருவாக்குகிறது. எய்ட்சால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் HIV இருக்கும். எய்ட்ஸ் என்பது உயிர்க் கொல்லி நோய், இதற்கான மருந்து இப்போது வரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால், சில சிகிச்சைகள் செய்வதன் மூலம் நோய் பாதிக்கப்பட்டோரின் வாழ்நாளைக் கூட்டலாம். உண்மையில், HIV கிருமியால் தொற்றும் எய்ட்ஸ் என்பது பல நோய்களின் கூட்டுத் தொகுப்பாகும். 

AIDS – Acquired Immune Deficiency Syndrome. 

அதிகமாக, இரத்தம், ஆண்களின் உயிரணு திரவமான‌ விந்து, பெண்களின் உயிர்த் திரவம், தாய்ப்பால் ஆகிய வற்றில்தான் HIV அதிகமாக வாழ்கிறது. இதனால், இந்தத் திரவங்கள் மூலம்தான் அதிகம் பரவவும் செய்கிறது. HIV வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருடன், இன்னொருவர் உடலுறவு கொள்ளும் போது அவருக்கும் எய்ட்ஸ் பரவி, பாதிக்கப்படுகிறார். உலகில் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்படுவோரில் 80% ஆட்களுக்கு இவ்வகையிலான பாதுகாப்பற்ற உடல் உறவுதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. அடுத்ததாக, HIV பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலில் பயன்படுத்திய ஊசியை அப்படியே மற்றவர்களுக்கு பயன்படுத்துவதன் மூலமும் எய்ட்ஸ் பரவுகிறது. ஒருவருக்கு ஒரு ஊசி மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனும் விழிப்புணர்வு இதனால்தான் மருத்துவத்துறையில் அதிகமாகச் செய்யப்படுகிறது. மருத்துவத் துறை தவிர்த்து, ஊசிகள் பயன்படுத்தப்படும் பச்சை குத்திக்கொள்ளல், டாட்டூ ஸ்டுடியோக்கள் ஆகியவற்றிலும் கூட ஒருவருக்கு ஒரு ஊசி மட்டுமே பயன்படுத்த வேண்டும், ஏனெனின் இதன் மூலமும்  HIV பரவ வாய்ப்புகள் உண்டு. அதே போல, போதை ஊசிப் பழக்கம் மூலமும் இந்த வைரஸ் அதிகமாகப் பரவி வருகிறது.

HIV கிருமி, பெண்களின் தாய்ப் பாலிலும் வாழ்வதால் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட ஒரு தாய், தன் குழந்தைக்கு தாய்ப் பால் கொடுத்தால் அதன் மூலமும் இந்த வைரஸ் குழந்தைக்குப் பரவும். தான் கருவுறும் முன் அல்லது கருவுற்றிருக்கும் போது எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகும் பெண்ணின் வயிற்றில் உள்ள சிசுவுக்கும் இந்த வைரஸ் பரவ வாய்ப்புகள் அதிகம்.  

குறிப்பாக, இந்த மூன்று வழிகளிலும் HIV தொற்று பரவினாலும், இரத்ததின் மூலமும் அதிகமாகப் பரவுகிறது. அதாவது, HIV பாதிக்கப்பட்ட ஒருவரின் உடல் இரத்தத்தை அடுத்தவருக்கு ஏற்றும் போது அவருக்கும் கிருமித் தொற்று ஏற்படுகிறது.

HIV பரவுவது குறித்து ஏகப்பட்ட வதந்திகள் நிலவி வருகின்றன. ஆகவே, அது எப்படி பரவுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது போலவே, எதன் மூலமாகப் பரவாது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

சாதாரணமான‌ சமூகப் பழக்கவழக்கங்களான, கை குலுக்குதல், தொட்டுக் கொள்ளுதல், கட்டியணைத்தல், முத்தம் போன்றவற்றின் மூலம் HIV பரவாது. பொதுக் கழிப்பிடங்கள், குளியலறைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் நோயாளிகள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்களின் மூலமும் HIV பரவ வாய்ப்பில்லை. நீச்சல் குளம், சலூன் கடைகள் உள்ளிட்ட அழகு நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் HIV பரவக் காரணமில்லை. சரியான விதிமுறைகளையும், சுத்தமான கருவிகளையும், அவசியமான சோதனைகளையும் பயன்படுத்தி இரத்த தானம் செய்தாலும், HIV பரவ வாய்ப்புகள் இல்லை. இருமல், தும்மல் மற்றும் கொசுக்கடி மூலமும் HIV வைரஸ் பரவாது.

HIV தொற்றின் அறிகுறிகள்:

HIV தொற்றுக்கு ஆளானோர், குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலும் கூட‌ அந்நோய்க்கான அறிகுறிகள் எதுவுமின்றி, அது பற்றித் தெரியாமலேயே வாழக் கூடும். ஒருவர் HIV’யால் தாக்கப்பட்டிருக்கிறாரா என்பதை இரத்தப் பரிசோதனை மூலம்தான் உறுதி செய்ய முடியும். 

கடுமையான தலைவலி, அளவுக்கதிகமான காய்ச்சல், உடல் அசதியான களைப்பு, நிண நீர் சுரப்பிகளின் வீக்கம், தொண்டை வறட்சி, தோலில் சொறிகள் ஏற்படுதல், தசை மற்றும் மூட்டுகளில் வலி, வாய்ப் புண், பிறப்புறுப்பில் புண் ஏற்படுத‌ல், இரவில் அதிகமாக வியர்த்தல், தொடர்ச்சியான வயிற்றுப் போக்கு ஆகியவை HIV கிருமித் தொற்றின் முக்கியமான அறிகுறிகளாக மருத்துவ உலகம் கூறுகிறது.

தொடர்புடைய பதிவுகள் :

உங்கள் குழந்தைகள் புத்தகங்களை அதிகம் வாசிப்பவர்களா? அப்படியானால் நீங்கள்தான் பாக்கியசாலிகள்!
மூளை மையங்களைத் தூண்டுவதன் மூலம் நோயாளியை மருந்துகளின்றி மயக்கத்தில் ஆழ்த்த இயலும்! ஆய்வு சொல்லும் அ...
செவ்வாய் கிரகத்தில் ஓடிய ஆறுகளுக்கு என்ன நடந்தது?
கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்
Walnut Health Benefits in Tamil
அமில ரிப்ளக்ஸ் மருந்துகளைப் பயன்படுத்தினால் டிமென்ஷியா அதிகரிக்கலாம்! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள...
பழப்பூச்சி பெருக்கத்தை கட்டுப்படுத்த நவீன கருத்தடை - அமெரிக்காவில் ஆய்வு
கருப்பைக் கட்டி அறிகுறிகள்
முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஓபியாய்டுகள் தீர்வு அல்ல: சிட்னி பல்கலைக்கழக ஆய்வு முடிவு
அமெரிக்காவில் பரவும் இறைச்சி அலர்ஜி - ஆபத்துக்குக் காரணம் என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *