வெப்பமா? குளிரா? செக்ஸ் உணர்வை அதிகரிக்க எந்த சூழல் பொருத்தமானது..?!

“இது என்னங்க கேள்வி? காலா காலமா தேனிலவுன்னாலும் இல்ல தன் துணையோட ‘என்ஜாய்’ பண்ணனும்னாலும் நாம போறது குளிரான மலைப் பிரதேசங்களுக்குத்தானேங்க..?” என்கிறீர்களா.
நீங்கள் நினைப்பது சரிதான். நாம் எப்போதும் குளிரையும் செக்ஸ் உணர்வையும் இணைத்தே பார்க்கிறோம். குளிரான காலங்களிலும், குளிரான பிரதேசங்களிலும் நமக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படும் என்றும், உடலறவு செயல்படுகளில் சிறப்பாக இருக்க முடியும் என்றும் எண்ணுகிறோம்.
ஆனால் இதற்கென்று செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் வேறுவிதமாக அல்லவா இருக்கின்றன!! தட்பவெப்பம் மற்றும் அதனால் ஏற்படும் உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள் நம் பாலியல் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்று நடத்தப்பட்ட ஆய்வு குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமே சொல்லுதுங்க!
புராண காலம் முதல் வசந்த காலம்தான் காதலுக்கான காலம் என்று சொல்லிவந்திருக்கிறோம். இருந்தாலும், வெப்பநிலை உயரும்போது பாலியல் செயல்பாடு பொதுவாக அதிகரிப்பதை மறுப்பதற்கில்லை.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ‘மனித இனப்பெருக்கத்தில் பருவகாலத்தின் பங்கு’ என்ற ஆய்வறிக்கை , பொதுவாக அதிக வெப்பநிலை கொண்ட நாடுகளில் கோடை காலத்திற்குப் பிறகு சரியாக பத்து மாதம் கழித்து குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை சுட்டிக்காட்டுகிறது. எனவே, அதிக பாலியல் செயல்பாடுகள் அதிகரிப்பதற்கு வெப்பம் ஒரு காரணம் என்று நிறுவுகிறது.
வெப்பம்தான் வேண்டும்.. நம்ம ஊர் போன்ற தீவிர அனலடிக்கும் கோடையல்ல!
வெப்பம் என்றதும் நம் ஊரின் தார் உருகும் அனல் மிகுந்த கோடையை கற்பனை செய்யாதீர்கள். அந்த அதீத வெப்பத்தில் இதற்கு நேர்மறையான விளைவுகளே ஏற்படும்.
அதீத வெப்பம் வியர்வை மற்றும் மற்ற உடல் திரவங்களின் இழப்பை ஏற்படுத்தி உடலின் நீரிழப்பிற்கு (டி ஹைட்ரேஜன்) வழிவகுக்கும். இது உடலின் ஹார்மோன் சமநிலையை பாதித்து பாலுணர்வு தூண்டலைக் குறைத்துவிடும். அதீத வெப்பம் மனிதர்களில் மன அழுத்தத்தையும் அதிகரிக்கக்கூடும்.
இந்த ஆய்வுகள் மேலை நாட்டினரால் அவர்கள் நாட்டில் நிலவும் மிதமான வெப்பம் கொண்ட கோடைக் காலத்தைக் கணக்கில் கொண்டு நடத்தப்படுவது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
வெப்பமும் ஹார்மோன்களும்!
பாலியல் சிகிச்சையாளர்களும் ஆய்வாளர்களும் வெப்பமும், ஒளியும் பாலியல் தொடர்பான இன்ப ஹார்மோன்களின் தூண்டுதலில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை ஒத்துக்கொள்கின்றனர்.
லவ்ஹோனி குரூப் பிராண்டுகளுக்கான பாலியல் நிபுணரும் பாலியல் சிகிச்சையாளருமான அனா லோம்பார்டியா கூறுகையில், “வெப்பமும் ஒளியும் இயற்கையாகவே செரோடோனின் மற்றும் பிற இன்ப ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பிகளைத் தூண்டுகின்றன. கூடவே கோடை காலத்தில் நாம் அணியும் குறைவான உடைகள், அதிகமான உடல் பாகங்களை வெளிக்காட்டுவது, அதிக காற்றை நம் தோலில் உணருவது போன்றவை கோடை காலத்தில் அதிக பாலியல் தூண்டலுக்கு காரணமாக இருக்கலாம்” என்கிறார்.
மிகவும் சூடாக இருக்கும்போது நம் உடல் வியர்வையால் ஈரமாக இருக்கும். வியர்வை எப்போதும் உடலுறவை பிரதிபலிக்கிறது. வியர்வையில் பெரோமோன்கள் குவிந்து கிடக்கின்றன. இது வியர்வை ஆவியாகும்போது காற்றில் பரவி நமக்கு பாலியல் தூண்டலை அளிக்கிறது. இந்த வாசனை நம் மூக்கிற்குப் புலப்படாதது என்ற கூற்றும் முன்வைக்கப்படுகிறது.
கோடை விடுமுறைதான் காரணம்.. வெப்பமல்ல!
செக்ஸ் உணர்வுத் தூண்டல் என்பது ஒரு சிக்கலான நிகழ்வு. பொதுவாக ஒரே ஒரு காரணத்தைக் கொண்டு இதை வரையறுக்க முடியாது. இது உண்மைதான். வெப்பம்தான் பாலியல் தூண்டலுக்கு காரணம் என்ற கூற்றை உளவியல் நிபுணர்கள் மறுக்கிறார்கள்.
கோடையில் நாம் விடுமுறையையும் நிறைய ஓய்வையும் அனுபவிக்கிறோம். அதன் காரணமாகவே நாம் அதிகமாக பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறோம் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.
“கோடைக் காலத்தில்தான் நமக்கு அதிக ஓய்வு நேரம் கிடைக்கும், விடுமுறைகள் மற்றும் குறைக்கப்பட்ட வேலை நேரங்களும் அமலில் இருக்கும். இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் நமது உடல் மற்றும் உணர்ச்சித் தேவைகளைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கிறது. கூடுதலாக, இந்த தேவைகளை பூர்த்தி செய்ய அப்போது மனிதர்களுக்கு அதிக ஆற்றல் உள்ளது. நண்பர்களுடன் வெளியே செல்ல, பார்பிக்யூ, நீச்சல் குளங்கள் மற்றும் பலவற்றிற்கு அதிக நேரம் உள்ளது, இவை அனைத்தும் பாலியல் உறவுகளில் ஈடுபட அதிக வாய்ப்புகளையும், அதிக விருப்பத்தையும் அளிக்கும்,” என்கிறார் உளவியல் நிபுணர் டேனியல் பிளாஸ்கோ.
உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் மனிதர்களின் பாலியல் செயல்பாடுகளைப் பாதிக்கிறதா?
ஆம். தீவிர வெப்பநிலை மற்றும் பாதகமான வானிலை சிலரின் ஆண்மை மற்றும் பாலியல் ஆசையை பாதிக்கலாம், எனவே அதிகப்படியான வெப்பம் உடலிலும் மனநிலையிலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உண்மைதான்.
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 2018 இல் செய்த ஒரு ஆராய்ச்சியில், வெப்பநிலை மற்றும் பிறப்பு விகிதங்களில் உள்ள உறவுகளை கண்டறிந்தனர். , 1930 மற்றும் 2010 க்கான இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் நிலவிய வெப்பநிலையையும் அங்கு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையையும் ஆராய்ந்தனர்.
அதில், அங்கு 80 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் நிலவிய காலகட்டத்திற்குப் பிறகு ஒன்பது மாதத்திற்குப் பிறகு குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதைக் கண்டறிந்தனர்.
ஆய்வு முடிவுதான் என்ன? குளிரா அல்லது வெப்பமா – செக்ஸ் உணர்வுக்கு எது தேவை?
குளிரோ அல்லது வெப்பமோ எந்த வெப்பநிலையாக இருந்தாலும், தீவிரமான நிலையில் அது பாலியல் தூண்டலுக்கு உதவாது என்பதுதான் ஆய்வு முடிவு. தீவிரமான வெப்பத்தில் வியர்வை, அதனால் ஏற்படும் நீரிழப்பு போன்ற உடலியல் மாற்றங்களும், சில மனநிலை மாற்றங்களும் நிகழும். இவை நிச்சயமாக பாலியல் தூண்டலுக்கு உதவாது.
அதேசமயம், நிதானமான வெப்பத்துடன் கூடிய சூழ்நிலை பாலியல் தூண்டலை அதிகரிக்கிறது. வெப்பம் எத்தகையதாக இருந்தாலும் உண்மையில், மேற்கூறிய ஆய்வில், ஏர் கண்டிஷனிங் பயன்பாடு மிகவும் பரவலாக இருக்கும் பகுதிகளில் கருவுறுதல் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வசந்தகாலம் மற்றும் குளிர் பிரதேசங்கள் காதலுக்கான அடையாளங்களாக இருக்கலாம். ஆனால், வெப்பம்தான் நம் ஹார்மோன்கள் மற்றும் மனநிலையை செக்ஸ் உணர்வுக்குத் தூண்டுகின்றது!