மூளையில் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் காயங்களால் குழந்தைகளின் நுண்ணறிவு பாதிக்கப்படாது: ஆய்வு சொல்லும் நல்ல செய்தி

தலையில் காயங்கள் ஏற்படுவது என்பது ஒருவரது மூளை, மண்டை ஓடு அல்லது உச்சந்தலையில் ஏற்படும் காயங்கள் ஆகும். அவை மூளையில் ஏற்படும் அதிர்ச்சிகள், எலும்பு முறிவுகள் மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் காயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. குழந்தைகளுக்கு இந்த வகையான காயங்கள் ஏற்படும்போது பெற்றோர்களுக்கு ஏற்படும் கவலை சொல்லிமாளாது. அந்தக் காயங்கள் மூளை அதிர்ச்சியையும் உள்ளடக்கியிருக்கும் போது அவர்களின் கவலை இன்னும் அதிகரிக்கும்.
ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள கால்கரி பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு இப்படிக் கவலைப்படும் பெற்றோர்களின் மனதுக்குச் சற்று ஆறுதலான முடிவைத் தெரிவித்துள்ளது. பீடியாட்ரிக்ஸ் என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு முடிவுகள் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகளில் அவசர அறைக்குச் சென்று சோதித்ததன் அடிப்படையில் வெளியிடப்பட்டவை. மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட 566 குழந்தைகளை எலும்பியல் காயங்களால் பாதிக்கப்பட்ட 300 குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறது இந்த ஆய்வு. இந்த ஆய்வில் இடம் பெற்ற குழந்தைகள் எட்டிலிருந்து பதினாறு வயதுக்குட்பட்டவர்கள். வான்கூவர், எட்மண்டன், ஒட்டாவா, மாண்ட்ரீல் மற்றும் கால்கரியிலுள்ள ஆல்பர்ட்டா மருத்துவமனை என ஐந்து குழந்தைகள் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக வைத்து வெளிவந்திருக்கிறது இந்த ஆய்வு முடிவு. குழந்தைகளின் மூளை அதிர்ச்சிகளால் அவர்களது நுண்ணறிவு நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என அந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
கால்கரி பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் பேராசிரியரும் குழந்தைகள் மருத்துவ ஆய்வறிக்கையின் மூத்த ஆசிரியருமான கீத் யீட்ஸ் என்ன கூறுகின்றார் தெரியுமா?
குழந்தைகளுக்கு ஏற்படும் மூளையதிர்ச்சியின் விளைவுகள் பற்றி நிறைய கவலைகள் உள்ளன. மேலும் இது குழந்தையின் ஒட்டுமொத்த அறிவுசார் செயல்பாட்டைப் பாதிக்கிறதா இல்லையா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். எதிர்மறையான கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தப் போதுமான மாதிரிகளைச் சேகரிப்பது கடினம். மூளை அதிர்ச்சிக்குப் பிறகு நுண்ணறிவில் வேறுபாடு இல்லை என நிரூபிப்பது, வேறுபாடு உள்ளது என்பதை நிரூபிப்பதைக் காட்டிலும் கடினம். இருந்தபோதும் சமூகப் பொருளாதார நிலை, நோயாளியின் பாலினம், காயங்களின் தீவிரம், மூளையதிர்ச்சியின் வரலாறு மற்றும் காயத்தின்போது சுய நினைவை இழத்தல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பார்த்தபோது இந்தக் காரணிகள் எதுவும் வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை. அதாவது மூளை அதிர்ச்சிக்கும் நுண்ணறிவுக் குறைபாட்டுக்கும் தொடர்பு ஏற்படவில்லை என்கிறார். நுண்ணறிவு எண் அதாவது ஐக்யூ என்பது அறிவு நுட்பத்தை மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு சோதனைகளில் ஏதாவது ஒன்றின் மூலம் பெறப்படும் மதிப்பு. மனித நுண்ணறிவானது மூளையில் உள்ள சாம்பல் நிறத் திசுவின் அளவு மற்றும் இட அமைப்பை அடிப்படையாகக் கொண்டது எனவும் அத்திசுவில் 6% மட்டுமே ஐக்யூவுடன் தொடர்புடையதாகவும் 2004ஆம் ஆண்டு வெளிவந்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கர்ப்பக் காலத்தில் ஒரு தாய் எடுத்துக்கொள்ளும் விட்டமின் டி-யின் அளவைப் பொருத்து ஐக்யூ எனப்படும் நுண்ணறிவு மாறுபடக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளின் ஐக்யூ அதாவது அறிவாற்றல் செயல்திறனில் குறைபாடு அதிகம் உள்ளதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அடிலெயிட் பல்கலைக்கழக ஆய்வு கூறுவது என்னவென்றால் ஜங்க் ஃபுட் உண்ணும் குழந்தைகளுக்குக் குறைந்த ஐக்யூ இருக்கலாம். வாழ்க்கையின் முதல் இரண்டு வருடங்களில் பிஸ்கட், சாக்லேட், இனிப்புகள், குளிர்பானங்கள், சிப்ஸ் போன்ற உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகளுக்கு எட்டு வயதிற்குள் இரண்டு புள்ளிகள் வரை குறைவாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மற்றும் பதினைந்திலிருந்து இருபத்து நான்கு மாதங்களில் பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவு வகைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளும் குழந்தைகள் எட்டு வயதிற்குள் இரண்டு புள்ளிகள் வரை ஐக்யூவைக் கொண்டிருப்பதாகவும் அது தெரிவிக்கிறது. யூனிசெஃப்பின் புதிய அறிக்கையானது நச்சுக்காற்று கூட குழந்தைகளின் ஐக்யூவைப் பாதிக்கிறது என்று கூறுகிறது. எனினும் சிறுவயதில் ஏற்படும் காயங்கள் ஐக்யூவைப் பெருமளவு பாதிப்பதில்லை எனப் பவா, பாலன்டைன் மற்றும் ட்ராணர் ஆகியோரின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உடனடியாகப் பகிரப்பட வேண்டும் என்று ஜார்ஜியா மாநிலப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆய்வறிக்கையின் முதன்மை ஆசிரியருமான டாக்டர் ஆஷ்லே வேர் கூறுகிறார். ஏனென்றால் தங்கள் குழந்தைகளின் மூளை அதிர்ச்சிகளைக் கையாளும்போது பெற்றோர்கள் மிகுந்த பயத்துக்கு உள்ளாகிறார்கள் என்று அவர் தெரிவிக்கின்றார். உண்மையில் இந்தப் புதிய கண்டுபிடிப்பு பெற்றோர்களுடைய அச்சத்தையும் கவலையையும் நிச்சயம் குறைக்கும். மேலும் பெற்றோருக்கு இது ஒரு நல்ல ‘ஓய்வு’ செய்தி என்கிறார் ஆய்வாளர் டாக்டர் ஸ்டீபர் பிரீட்மேன்.
ஆக, மூளையதிர்ச்சியானது நுண்ணறிவின் மாற்றங்களுக்கு நிச்சயம் வழிவகுக்காது என்பது ஆறுதலான விஷயம்தான் என்றாலும் குழந்தைகள் அடிக்கடி கீழே விழுவது சகஜம். இப்படி விழும்போது தலையில் வீக்கம், ரத்தம் கட்டுவது, சுயநினைவை இழப்பது ஆகியவை நிகழலாம். இந்தக் காயங்கள் மூளையை ஏதோ ஒருவகையில் பலவீனப்படுத்தலாம். உடலின் எந்தப் பாகங்களையும் விட முக்கியமானது மூளை. எனவே உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதிப்பது குழந்தைகளின் மூளையைப் பாதுகாக்கும்.