நீண்ட ஆயுள் வேண்டுமா? எட்டு பழக்கவழக்கங்களைக் கையாளுங்கள்!

நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுமென எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் அதற்கான ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நாம் மேற்கொள்கிறோமா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறிதான். நம்முடைய முன்னோர்கள் ‘உணவே மருந்து’ என்னும் உயரிய கொள்கையோடு சர்வ சாதாரணமாக நூறாண்டுகள் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் நமக்கோ இன்று மூன்று வேளையும் மருந்துதான் உணவாக உள்ளது. அறுபதாண்டுகள் தாண்டுவதே பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இன்றும் கலிபோர்னியா, இத்தாலி, ஜப்பான், நிக்கோலா மற்றும் கோஸ்டாரிகா, கிரீஸ் போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக இவர்களில் பெரும்பாலானோர் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் பாக்கியசாலிகளாக இருக்கிறார்கள்.
நீண்ட ஆயுள் என்பது நமக்கெல்லாம் சாத்தியமே இல்லையா என யோசிக்கிறீர்களா? கவலையை விடுங்கள். நாற்பது வயதுக்குள் எட்டு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தால் நீண்ட ஆயுள் நிச்சயம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சுமார் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வி.ஏ.பாஸ்டன் ஹெல்த்கேர் சிஸ்டத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் 2011- 2019க்குள் 40 லிருந்து 99 வயதுக்குட்பட்ட 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கப் படை வீரர்களின் குழுவிடமிருந்து உடல் செயல்பாடு, உணவு, தூக்கம், மன ஆரோக்கியம், உறவுகள் மற்றும் ஆல்கஹால் பயன்பாடு உள்ளிட்ட அவர்களது வாழ்க்கை முறைகள் குறித்த தரவுகளைச் சேகரித்து அவற்றை அவர்களுடைய உடல்நலம் மற்றும் சுகாதாரப் பதிவுகளின் தரவுகளோடு பகுப்பாய்வு செய்தபோது எட்டு முக்கியமான பழக்கவழக்கங்கள் அவர்களது நீண்ட ஆயுளோடு தொடர்பு கொண்டிருந்ததை அறிந்து ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.
அவர்கள் கண்டுபிடித்த அந்த எட்டு முக்கியமான பழக்கவழக்கங்கள் எவை தெரியுமா? ஆரோக்கியமான உணவை உண்ணுதல், உடற்பயிற்சி செய்தல், நேர்மறையான சமூக உறவுகளைப் பேணுதல், மன அழுத்தத்தை நிர்வகித்தல், மதுவைக் குறைத்தல், புகைப்பிடித்தல் பழக்கத்தைத் தவிர்த்தல், நன்றாக உறங்குதல் மற்றும் ஓபியாய்டுக்கு அடிமையாகாதிருத்தல் ஆகியவைதான்.
ஆரோக்கியமான உணவு என்பது நீண்ட ஆயுளோடு மிக முக்கியத் தொடர்புடையது. தாவர அடிப்படையிலான உணவுகள், பருப்புவகைகள் மற்றும் புரதச் சத்து நிறைந்த சோயா, பால் ஆகியவை ஆரோக்கியமான காலை உணவாகக் கருதப்படுகிறது. இவை இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கப் பெரிதும் உதவுகின்றன. காபியோ தேநீரோ குடிக்கக் கூடாதா எனக் கேட்டால், குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு கப் வரை குடிக்கலாம். ஆனால் அதில் சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. காபியில் உள்ள காபினேட் மற்றும் டிகாப் இரண்டுமே இறப்புக்கான ஆபத்தைக் குறைக்கும் திறனுடையவை என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். காபி மற்றும் தேநீர் அருந்தும் போது உங்களுடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து அருந்துங்கள். அவர்களுடன் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் தேநீர் மற்றும் காபி அருந்தும் போது உடல் நலம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அடுத்ததாக உடற்பயிற்சி. ஒரு நாளைக்கு குறைந்தது இருபது நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று பெரிய உபகரணங்களை எல்லாம் உருட்டிக்கொண்டு உடற்பயிற்சி செய்யவேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டுத் தெருவிலோ உங்கள் வீட்டு மொட்டை மாடியிலோ கூட நடக்கலாம். அருகிலுள்ள கடைகளுக்கு நடந்தோ மிதிவண்டியிலோ செல்லலாம். பணி புரியும் அலுவலகத்தை நெருங்குவதற்குப் பத்து நிமிடத்திற்கு முன் உங்களுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு அலுவலகத்துக்கு நடந்து செல்லலாம். இப்படி செய்யப்படும் சிறு சிறு உடற்பயிற்சிகளும் நீண்ட ஆயுளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன.
ஒவ்வொரு நாளையும் நல்ல முறையில் தொடங்கவேண்டும். நாளின் தொடக்கத்தில் நாம் பார்க்கும் முதல் நபரிடம் நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும். உங்கள் கணவரை அல்லது மனைவியை அல்லது குழந்தைகளைப் பாராட்டலாம். பக்கத்து வீட்டுக்காரருடன் பேசிச் சிரிக்கலாம். அவர்களிடமிருந்தும் நல்ல வார்த்தைகளைக் கேட்கலாம். இப்படி ஆரம்பிக்கும்போது அந்த நாள் முழுவதும் மனதுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும். சமூகத்துடன் நமக்கு இருக்கும் ஆரோக்கியமான உறவு மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. எனவே ஆரோக்கியமான சமூக வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வது மிகவும் அவசியம்.
சிகரெட் மிதமான அளவுக்கு புகைப்பது நல்லது. இயன்றவரை தவிர்ப்பது மிக நல்லது. தினமும் 15 க்கும் மேற்பட்ட சிகரெட் பிடிப்பவர்கள் மற்றும் உடல் பருமனாக உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அதாவது பிஎம்ஐ அளவு 30க்கும் மேல் இருப்பவர்கள் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கான வாய்ப்பு குறைவுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதிக உடல் எடை மற்றும் பருமன் ஆகியவை மார்பகப் புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் உணவுக் குழாய் புற்றுநோய் உள்ளிட்ட 13 வெவ்வேறு வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையவைகளாக இருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் பத்தில் நான்கு பேர் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பதப்படுத்திய மாமிசத்தைக் குறைத்தல், நார்ச் சத்துள்ள உணவு அதிகமாக உண்ணுதல், சூரிய வெப்பத்திலிருந்து தோலைப் பாதுகாத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை அவர்கள் மேற்கொண்டால் நிச்சயமாகப் புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.
நீண்டகால மன அழுத்தம் ஒருவருடைய மன மகிழ்ச்சியைக் கொன்றுவிடலாம். பல நோய்களுக்கும் அவை பங்களிக்கலாம். மன அழுத்தம் தரும் சூழ்நிலைகளை நாம் மாற்ற முடியாது. ஆனால் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை நிர்வகிக்கும் வழிகளைத் தெரிந்து கொண்டு நடந்தால் இரத்த அழுத்தம், இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, நீச்சல், ஜாக்கிங், இசை கேட்டல், நடைப்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப்பழக்கம், போதுமான தூக்கம், மசாஜ் ஆகியவை மன அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கக் கூடியவை.
அடுத்ததாக ஓப்பியாய்டின் பயன்பாடு. மருந்துக் கடைக்காரரிடம் நம்முடைய இஷ்டத்திற்கு மருந்தை வாங்கி உண்பது ஆயுளைக் கெடுத்துவிடும். அப்படி வாங்கப்படும் மருந்துகளில் முக்கியமானது ஓப்பியாய்டு. இந்த மருந்தை உட்கொண்ட பிறகு அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் போகிறவர்கள் அதிகம். ஏனெனில் இந்த ஓப்பியாய்டு மருந்துகளில் சில அபின் செடியிலிருந்து தயாரிக்கப்படுபவை. அதனால் வலி நிவாரணி என்பதிலிருந்து அது போதைப் பொருளாக மாறிவிடுகிறது. ஆக்சிக்கோடான், ஹைட்ரோகோடான், பென்டனைல் மற்றும் டிராமடோல் போன்ற தீவிரமான வலி நிவாரணி மருந்துகளும் இவற்றில் அடங்கும்.
சட்டவிரோதப் போதை மருந்தான ஹெராயின் கூட ஓப்பியாய்டு வகைதான். இந்த ஓப்பியாய்டு தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளப்பட்டால் தூக்கமின்மை, உடல் தளர்ச்சி, வாந்தி, குமட்டல், மலச்சிக்கல் என்று பல விதமானப் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். சுவாசக்கோளாறு, இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் செயல்பாடும் குறைந்துவிடும். ஏன், சில சமயங்களில் இறப்புக்குக் கூட இது வழி வகுக்கும். ஆகவே ஓப்பியாய்டு போன்ற வலி நிவாரணிகளைத் தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று உறக்கம். தரமான இரவுத் தூக்கம் இல்லாது போனால் அது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். எட்டு மணிநேரத் தூக்கம் என்பது மிக மிக அவசியம். மேலும் உறங்கச் செல்லும் முன் எலக்ட்ரானிக் கருவிகளான அலைபேசி, கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். தூக்கம் வரவில்லையென்றால் லைட் மியூசிக் கேட்பது, தியானம், மூச்சுப்பயிற்சி, குடும்பத்தாருடன் பேசுவது போன்றவற்றில் ஈடுபடலாம். இவை உங்களுக்கு நிம்மதி அளிப்பதோடு தரமான தூக்கத்தைத் தரும். மறுநாள் முழுவதும் உங்களைப் புத்துணர்ச்சியோடும் சுறுசுறுப்புடனும் இயங்க வைக்கும்.
எல்லாம் சரிதான். பல நூற்றாண்டுக்கு முன்பே நம்முடைய தமிழர்கள் சொல்லாததையா இந்த ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் சொல்லி விட்டார்கள்? நம்முடைய பாட்டிமார்கள் சொல்லுவது போல் ‘காலார நடந்து, வாயாரச் சிரித்து, வயிறார உண்டு மனமாரப் பேசினாலே’ ஒரு நோயும் வராது. நூறாண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம்.