செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து பதவிநீக்கம் செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இல்லை – சட்ட வல்லுநர்கள் கருத்து.

செய்தி சுருக்கம்:
சென்னை உச்சநீதிமன்ற பார் கவுன்சிலின் Vice President பொறுப்பில் உள்ள மூத்த வழக்கறிஞர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “தமிழக கவர்னர் சமீபத்தில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்து வெளியிட்ட உத்தரவு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது” என்று கூறியுள்ளார்.
சட்டசபை வரலாற்றிலோ அரசியல் நிகழ்வுகளிலோ இதுவரை நடக்காத வேறு மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடந்ததாகவோ கேட்டறியாத ஒன்று நம் தமிழக அரசியலில் நிகழ்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து பதவி விலக்கி கவர்னர் பிறப்பித்த உத்தரவு தற்போது நம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாத சர்ச்சைகளால் புயலைக் கிளப்பியுள்ளது. கவர்னரின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவர்மீது “நம்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியெழுத முயல்கிறார் தமிழக கவர்னர்” என்ற குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். தமிழக முதல்வர் M. K. ஸ்டாலின் அவர்கள் இந்த நிகழ்வைப் பற்றி பேசும்போது சட்டப்பூர்வமாக இதை எதிர்கொள்ள போவதாகவும், ஆளுநருக்கு செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய அதிகாரம் இல்லை என்றும், அவரது உத்தரவு செல்லுபடி ஆகாது என்றும் தெரிவித்தார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி Vice President நாராயண் திருப்பதி கவர்னரின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் தரும் விதமாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார். ” கவர்னருக்கு அமைச்சரை தகுதி நீக்கம் செய்ய எல்லா அதிகாரமும் உண்டு, ஏனெனில் அவர்தான் அனைத்து அமைச்சர்களையும் பதவி பிரமாணம் வாங்கிக் கொண்டு அமைச்சர் பதவியில் நியமிக்கிறார். கவர்னர் அமைச்சரை தகுதி நீக்கம் செய்ததற்கான காரணத்தை மட்டும் அரசுக்கு சமர்ப்பித்தால் போதும்” என்று அதில் கூறியுள்ளார்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
கடந்த வியாழனன்று (29-06-2023) தமிழக ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதற்கும் சில நாட்கள் முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை இயக்குனரகம் கைது செய்துள்ளது. அவர் மேல் ‘அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடிகள் மோசடி நடந்த வழக்கில்’ இவருக்கும் தொடர்பு உள்ளதாக சொல்லி அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த வழக்கில் இன்னும் விசாரணை நடந்து கொண்டு உள்ளது, நீதிமன்றம் தீர்ப்பளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. அதனால் மறுநாள் வெள்ளியன்று ஆளுநர் தன் செந்தில் பாலாஜி மீதான பதவிநீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டார். வெள்ளிக்கழமை மாலை முதல்வருடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு ஆளுநர் செய்தியாளர்களிடம் தனது இந்த உத்தரவு Attorney General அவர்களின் தீர்ப்புக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது, அவரது கருத்துக்கு பிறகே என்னால் எதுவும் திட்டவட்டமாக கூற முடியும் என்றார்.
தற்போது இந்த விஷயம் சமூக வலைத்தளங்களிலும், விவாத நிகழ்ச்சிகளிலும்அதிகமாக பேசப்படும் சம்பவமாக ஆகியுள்ளது அமைச்சரவையில் இருந்து அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என்றும் செந்தில பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர முடியுமா இல்லையா என்றும் பல்வேறு தரப்பினரும், சட்ட நிபுணர்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் தங்கள் தரப்பு வாதங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அரசியலமைப்பு சட்டம் சொல்வது என்ன:
சுப்ரீம் கோர்ட் Bar Association இல் Vice President பொறுப்பில் உள்ள மூத்த வழக்கறிஞர் பிரதீப் ராவ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ” கவர்னரின் செயல் சட்டத்திற்கு புறம்பானது, கவர்னர் என்பவர் அம்மாநில சட்டமன்றத்தின் ஆலோசனைகள், பரிந்துரைகள் இல்லாமல் தனித்து இயங்க முடியாது. கவர்னர் பதவி வகிக்கும் மாநிலத்தின் சட்டசபை, முதல்வர் அல்லது சபாநாயகர் பரிந்துரைக்கும் சட்டங்களுக்கும் உதரவுகளுக்கும் ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் மட்டுமே ஒரு கவர்னரின் கையில் உள்ளது, மாறாக வேறெந்த விதமான தனிப்பட்ட அதிகாரமும் அவருக்கு வழங்கப் படவில்லை என்று கூறுகிறார்.
இந்த சமயத்தில் சில அரசியல் தலைவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆர்டிக்கிள் 164 ஐ சுட்டிக்காட்டுகின்றனர். இதன் மூலம் கவர்னருக்கு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய அதிகாரம் உள்ளது எனவும் இது சட்டப்படி செல்லும் என்றும் வாதிடுகின்றனர்.
மூத்த வழக்கறிஞரான திமுக MP P. வில்சன் அவர்கள் ANI டிவிட்டர் பக்கத்தில் அவருடைய கருத்தை கூறும்போது “ஆர்டிக்கிள் 164 பற்றி அறிந்தவர்கள் Attorney General தலையீடு இதில் தேவை இல்லை, கவர்னருக்கு அமைச்சரவையில் முடிவுகளை எடுக்க அதிகாரம் உண்டு என்றுதான் கூறுவார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னர் நிகழ்ந்த வழக்கின் விவரங்களை நாம் பார்த்தால் அதில் வழக்கு தொடுத்திருந்த நபர்கள் ஆர்டிக்கிள் 164 ஐ மேற்கோள் காட்டி ஒரு அமைச்சர் ஆளுநரின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே அமைச்சரவையில் பணிகளை தொடர முடியும் என்று சட்டம் கூறுவதாக வாதிட்டனர். அதற்கு நீதிபதி “கவர்னருக்கு ஒரு அமைச்சர் அமைச்சரவையில் இடம்பெற ஒப்புதல் தருவதற்கு முழு சுதந்திரம் இருப்பதாக ஆர்டிகிள் 164 இல் கூறி இருப்பதை போல, கவர்னருக்கு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய அதிகாரம் இருப்பதாக எங்கேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா” என்று கேட்டிருந்தார். இந்த சம்பவத்தையும் கருத்தில் கொண்டு இப்போது நடக்கும் விவாதங்களை கவனிக்கும் போது ஆர்டிகிள் 164 கூறுவது என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
ஆர்டிகிள் 164 :
இந்திய அரசியமைப்பு சட்டத்தில் உள்ள 164 வது ஆர்டிகிள் அமைச்சரவையில் அமைச்சர்களை நியமிப்பது தொடர்பான நெறிமுறைகளை விளக்குகிறது. இதில் முதல் ஷரத்தில் “ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்பட வேண்டும், சட்டசபையின் மற்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நியமிக்க வேண்டும். மேலும், கவர்னரின் முழு ஒப்புதலோடும், இசைவோடும் அமைச்சரவையை நிர்வாகிக்க வேண்டும் “Minsters Hold Office at the Pleasure of the Governor” என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது நடப்பதில் சர்ச்சைக்குள்ளான விவாதமாக இருப்பது அந்த ஷரத்தில் உள்ள Pleasure of the Governor என்ற குறிப்பிட்ட வார்த்தை பிரயோகம் தான். இந்த வார்த்தைக்கு அர்த்தமாக “அமைச்சரவையில் அமைச்சர்களை நியமிக்கும் உரிமையும் தகுதியும் ஒரு ஆளுநருக்கு இருப்பதை போல கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட அமைச்சர்களை பதவி நீக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று எடுத்துக்கொள்ளலாமா. ? இதற்கு பதிலாக Supreme Court இல் பிராக்டீஸ் செய்யும் வழக்கறிஞர் Nipun Sexena கூறுவதை காணலாம்.
கவர்னர் பொறுப்பில் இருப்பவர் அமைச்சர்களை முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே நியமிக்க முடியும், எனவே முதல்வர் பரிந்துரை செய்யாத ஒருவரை அமைச்சராக நியமிக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது. மேலும், எப்போது முதலமைச்சரிடமிருந்து ஒரு அமைச்சரை பதவிநீக்கம் செய்ய சொல்லி கவர்னருக்கு பரிந்துரை வருகிறதோ அப்போது தான் கவர்னரால் ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய முடியும். எப்பொழுது ஒரு கவர்னருக்கு சொந்த விருப்பத்தின் அடிப்படையில் ஒரு அமைச்சரை சட்டசபைக்கு நியமனம் செய்ய அதிகாரம் இல்லையோ அப்போதே அவருக்கு நியமனத்தை நீக்கவும் அதிகாரம் இல்லை, என்று Sexena கூறியுள்ளார்.
மேலும், இந்த விவாதத்தை மற்றொரு கோணத்தில் பார்த்தால் நம் அனைவருக்கும் தெரியும் சட்டத்தின் மூலம் ஒருவரின் குற்றம் நிரூபிக்க முடியாத வரை அவரை குற்றவாளியாக கருதக்கூடாது என்பது. அமைச்சர் மீது போடப்பட்டிருக்கும் வழக்கின் தீர்ப்பு செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என்று வரும் பட்சத்தில் கவர்னரின் பதவிநீக்க உத்தரவு அவசர செயல் அல்லவா? அப்படியே செந்தில் பாலாஜி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அவரை அமைச்சரவை பொறுப்புகளில் இருந்து நீக்கும் உத்தரவை அளிக்க வேண்டியவர் சபாநாயகர் அல்லவா? சபாநாயகர் சொன்ன பின்னர் தான் அமைச்சர் எனும் அந்தஸ்தை அந்த உறுப்பினர் இழக்க முடியும், என்று கூறுகிறார் Sexena.
மேலும் அமைச்சரவையில் எந்த மாதிரியான மாநில முன்னேற்றம் சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்கிற அலுவல் சார்ந்த “Pleasure” களை தீர்மானிக்க வேண்டியது அமைச்சரவையே. எனவே, கவர்னர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக யாரையும் தன்னிச்சையாக அமைச்சரவை பொறுப்புகளில் இருந்து நீக்க முடியாது. முதலமைச்சர் நீக்கும் படி பரிந்துரைத்தால் மட்டுமே இவரால் உத்தரவிட முடியும் என்று கூறுகிறார்.
ஆர்டிகிள் 163(1) ஐ மேற்கோள் காட்டி சுப்ரீம் கோர்ட்டில் தற்பொழுதும் பல விஷயங்களிலும், நிகழ்ச்சிகளிலும் சட்டமன்றம் நீதிமன்ற அனுமதியை கோரும் போது அந்த கோரிக்கையில் முதல்வரும் கவர்னரும் இணைந்து ஒப்புதல் அளித்துள்ளனரா என்று சரிபார்க்கும் வழக்கம் உள்ளதாக சொன்னார், இதனால் கவர்னருக்கு தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்பது தெரிகிறது. அவருடைய எல்லாவித அலுவலக நடவடிக்கைகளும் முதல்வரின் ஆலோசனை படி இருக்கும், முதல்வர் செய்த பரிந்துரை மற்றும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க மட்டுமே இவரால் முடியும் என்று கூறினார்.
செந்தில் பாலஜியின் அமைச்சர் பதவியின் நிலை:
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் கவர்னர். இதன் மீதான Attorney General-ன் கருத்தை தெரிந்து கொள்ளும் வரை கவர்னரின் உத்தரவு செல்லாது, அதனால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என்றும் கூறியுள்ளார். இவ்வழக்கு செந்தில் பாலாஜிக்கு பாதகமாக இருந்தால் அவர் உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
பின்னணி:
தமிழக கவர்னரின் செந்தில் பாலாஜி மீதான பதவி நீக்க உத்தரவு தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பல்வேறு விதமான விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. கவர்னரின் இந்த உத்தரவை பற்றி பல்வேறு பிரமுகர்களும், செய்தி சேனல்களும், அரசியல் கட்சிகளும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து விவாதித்து வருகின்றன. தமிழகத்தின் தற்போதைய Hot Topic இதுதான் என்றால் அது மிகையில்லை. சீனியர் BJP தலைவர் ஒருவரின் பேட்டியில் “அரசியல்வாதிகள் அமைச்சரை பதவியை விட்டு விலக்க கோரி கவர்னரிடம் மனு கொடுக்கும் நிகழ்வுகள் பலமுறை நிகழ்ந்துள்ளது, தற்போது முதல்வராக இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் கூட 2018 ல் எதிர்கட்சியாக இருந்த போது அமைச்சர் விஜய பாஸ்கரை பதவி நீக்கம் செய்யக்கோரி அப்போதைய ஆளுநரிடம் மனு கொடுத்தார்” என்று பழைய நிகழ்வை சுட்டிக்காட்டியுள்ளார்.
முதல்வர் தனது அறிவிப்பில் கவர்னரின் இந்த உத்தரவு செல்லுபடியாகாது எண்டு தெரிவித்துள்ளார். கவர்னருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் “Home minister ன் அனுமதியின்றி உங்களின் உத்தரவு செல்லாது” என்று கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகள் இரு அணியாக நின்று ஒரு சாரர் கவர்னரின் உத்தரவு செல்லும் என்றும், மற்றொரு அணி கவர்னருக்கு அதிகாரமில்லை என்றும் தொடர்ந்து பல்வேறு வலைதளங்களிலும், செய்தி சேனல்களிலும் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செய்தியின் பரபரப்பு Attorney General ன் கருத்து தெரியும் வரை ஓயாது என தெரிகிறது.
மற்றொரு புறம் Enforcement Directorate தன்னுடைய விசாரணையை தீவிரப்படுத்த நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜியை தங்கள் காவலில் அழைத்து சென்று விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கின் விசாரணை முடிவும் கவர்னரின் இந்த உத்தரவு செல்லுமா இல்லையா என்பதை தீர்வுக்கு கொண்டு வர உதவும். இவையெல்லாம் முடியும் வரை நாமும் தொடர்வோம் அரசியல் நிகழ்வுகளை.