பழப்பூச்சி பெருக்கத்தை கட்டுப்படுத்த நவீன கருத்தடை – அமெரிக்காவில் ஆய்வு

செய்தி சுருக்கம்:
அமெரிக்காவில் பழத்தோட்டங்களின் விளைச்சலில் ஸ்பாட்டட் விங்க் டிரோஸ்பிலா என்னும் பழப்பூச்சிகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஆராய்ச்சி நிறுவனங்கள் பல ஆய்வுகளை செய்து வருகின்றன. கிரிஸ்பர் என கூறப்பட்டும் கிளஸ்டர்ட் ரெகுலர்லி இன்டர்ஸ்பேஸ்ட் ஷார்ட் பாலின்டிரோமிக் ரிபீட்ஸ் என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நவீன கருத்தடை முறையும் அவற்றில் ஒன்றாகும்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
அமெரிக்காவில் ஆண்டுதோறும் இந்த பூச்சிகளால் பல லட்சம் டாலர் மதிப்புள்ள விளைச்சல் சேதப்படுத்தப்படுகிறது. இப்பூச்சிகளை அழிப்பதற்கு விவசாயிகள் பூச்சிகொல்லிகளை பயன்படுத்துகின்றனர். இப்பூச்சிகொல்லி மருந்துகள், பழங்களுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகளோடு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்து அழித்துவிடுகின்றன. பூச்சி கொல்லி மருந்தினை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு அல்லது மருந்தின் அளவை கட்டுப்படுத்தும்படி, பூச்சிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான புதிய முறைகளை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
பின்னணி:
புள்ளி இறக்கை டிரோஸ்பிலா என்னும் பழப்பூச்சியானது, சாதாரண பழப்பூச்சியை போன்றதன்று. சாதாரண பழப்பூச்சி, அழுகிய உணவு பொருள்களையே தேடும். மாறாக, புள்ளி இறக்கை பழப்பூச்சியின் பெண் பூச்சிகள், பழுத்துக்கொண்டிருக்கும் நல்ல பழங்களின் தோலை ரம்பம் போன்ற அமைப்பு கொண்ட குழாய் போன்ற உறுப்பினால் துளையிட்டு அதனுள் முட்டையிடும். அந்த முட்டைகள் பொரிக்கும்போது அதிலிருந்து புழுக்கள் வந்து விளைச்சலை அழித்துப்போடும்.
ஜீன் எடிடிங்
கிரிஸ்பர் என கூறப்பட்டும் கிளஸ்டர்ட் ரெகுலர்லி இன்டர்ஸ்பேஸ்ட் ஷார்ட் பாலின்டிரோமிக் ரிபீட்ஸ் என்ற நவீன முறைப்படி பூச்சியின் கருமுட்டையிலிருந்து ஆண் இனப்பெருக்கத்திற்கான மரபணு மற்றும் பெண் உருவாக்கம் ஆகிய இரண்டு அத்தியாவசிய மரபணுக்கள் நீக்கப்படுகின்றன. இதன் காரணமாக, கருத்தடை செய்யப்பட்ட ஆண் பூச்சிகள் மட்டுமே பொரித்து வெளியே வரும். பெண் பூச்சிகள் மடிந்துவிடும். பெண் பூச்சிகளே பழங்களை அழிப்பதால் அவை உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது.
மரபணு மாற்றப்பட்ட பூச்சிகள் வெளியே விடப்படும் முன்னர் கிரீன்ஹவுஸ் என்னும் பசுமை கூடாரத்தில் பரிசோதிக்கப்பட வேண்டும். இந்த ஆய்வு முடிவதற்கு இரண்டு முதல் மூன்று மாதம் ஆகும். பூச்சிகளின் பெருக்கத்தை இவை எப்படி கட்டுப்படுத்தும் என்று சோதிக்கப்பட்டு பிறகு உரிய அனுமதிக்கு பிறகே இவை வெளியே விடப்படும்.
அடுத்த ஆண்டு கள பரிசோதனைக்காக ஆராய்ச்சி நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. கருத்தடை செய்யப்பட்ட ஆண் பூச்சிகளை கூட்டுப் புழு நிலையில் அட்டைப்பெட்டிகளில் வைத்து விற்பதற்கு இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. முழு வளர்ச்சியடைந்த பூச்சிகள் பறந்து செல்லக்கூடும்; சில இறந்துவிடக்கூடும் என்பதால் கூட்டுப் புழு பருவமே அவற்றை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்ல ஏற்றது என்று கூறப்படுகிறது. கூட்டுப் புழுக்கள் இருக்கும் பெட்டிகள் தோட்டங்களில் வைக்கப்படும். அவை முழு வளர்ச்சியடைந்து ஆண் பூச்சிகள் வெளி வந்து, இனப்பெருக்கத்திற்காக பெண்களை தேடிச் செல்லும்.
வெளியிலுள்ள ஒரு பூச்சிக்கு இணையாக கருத்தடை செய்யப்பட்ட நான்கு முதல் ஐந்து பூச்சிகள் தேவைப்படும் என்று ஆய்வக நிபுணர்கள் கருதுகின்றனர். ஒரு தோட்டத்தில் எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கிறது என்று கணித்து, அதற்கு தேவையான எண்ணிக்கையில் கருத்தடை செய்யப்பட்ட பூச்சிகளை விட வேண்டும். ஆண் பூச்சிகளுக்கு கருத்தடை செய்யப்பட்டிருப்பதால் அவை பெண் பூச்சியோடு இணைந்தாலும் இனப்பெருக்கம் உண்டாகாது. புள்ளி இறக்கை டிரோஸ்பிலா என்னும் பழப்பூச்சியானது சில வாரங்கள் மட்டுமே உயிர்வாழும். ஆகவே, பூச்சிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, ஒரு தலைமுறை பூச்சிகள் இறந்ததும், கருத்தடை செய்யப்பட்ட ஆண் பூச்சிகள் அந்த தோட்டத்தில் மீண்டும் மீண்டும் விடப்படும். பசுமை கூடார சோதனைக்கு வாரம்தோறும் பூச்சிகள் வெளியிடப்பட்டாலும், தோட்டத்தில் குறுகிய காலத்தில் ஏராளமான பூச்சிகளை வெளியிடவேண்டியிருக்கும் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.
பூச்சிகளின் மரபணுக்களை மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஓமர் அக்பரி என்ற பேராசிரியர், போதுமான எண்ணிக்கையில் நீண்டகாலத்திற்கு ஆண்பூச்சிகளை வெளியிட்டால், ஒரு கட்டத்தில் பூச்சிகளே இல்லாத நிலையை எட்டலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கதிரியக்க முறை
பூச்சிகளுக்கு கருத்தடை செய்வது புதிய சிந்தனை அல்ல. கால்நடைகளின் உடலில் வாழும் ஸ்குரூவார்ம் எனும் திருகுப் புழுக்கள் மற்றும் பாரசைட் ஃபிளைஸ் என்னும் ஒட்டுண்ணி பூச்சிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க பகுதிகளில் 1950ம் ஆண்டுகளிலேயே கருத்தடை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அப்போது மரபணு பொறியியல் முறை பயன்படுத்தப்படவில்லை. மாறாக ஆண் பூச்சிகளுக்கு ரேடியேசன் என்னும் கதிரியக்கம் மூலம் கருத்தடை செய்யப்பட்டது. கதிரியக்கத்தின் அளவு அதிகமானால் இனப்பெருக்க திறனே முற்றிலும் பாதிக்கப்பட்டுவிடும். இதனால், காட்டில் வாழும் ஒரு பூச்சிக்கு இணையாக கருத்தடை செய்யப்பட்ட பல பூச்சிகளை அனுப்ப வேண்டியதாயிற்று.
ஜீன் டிரைவ்
அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஜீன் டிரைவ் என்னும் மாற்று முறையை உருவாக்கி வருகிறார்கள். இந்த முறை கையாளப்படும்போது பெண் பூச்சிகள் இனப்பெருக்க திறனை இழக்கும். இம்முறையானது பரம்பரையாக தொடரும் சில விதிகளுக்கு மாறாக சில மரபணு மாற்றங்களை பூச்சிகளில் பரவச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சூழலியல் தாக்கம்
அமெரிக்காவின் மிக்ஸிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழ்நிலையாளர் ஹன்னா பராக், பூச்சிகள் மேலாண்மை நிபுணராவார். அவர், ஆண் பூச்சிகளுக்கு கருத்தடை செய்யும் முறையில் அதிக எண்ணிக்கையில் பூச்சிகள் தேவைப்படும். ஆகவே, தனி விவசாயி இதை செய்வது நடைமுறை சாத்தியமல்ல. தோட்டத்தினர் குழுவாக இணைந்தோ அல்லது அரசோ மரபணு மாற்றப்பட்ட ஆண் பூச்சிகளை மீண்டும் மீண்டும் வெளியிடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கிரிஸ்பர், ஜீன் டிரைவ் ஆகிய இரு முறைகளும் ஏனைய உயிரிகளுக்கோ சுற்றுப்புறத்திற்கோ ஏதேனும் பாதிப்பை உருவாக்குமா என்பதையும் நோக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. இந்தப் பூச்சிகளை அழிப்பதால் வேறு ஏதேனும் விலங்கு அல்லது உணவு ஆதாரம் பாதிக்கப்படுமா? வேறு ஏதேனும் தொல்லை தரும் பூச்சிகள் பெருகுமா என்பதையும் ஆராய வேண்டும்.
இந்த புள்ளி இறக்கை டிரோஸ்பிலா என்னும் பழப்பூச்சியானது தென்கிழக்கு ஆசியாவிலிருந்து 2008ம் ஆண்டில்தான் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு வந்ததாக கருதப்படுகிறது. அங்கிருந்து வந்த பழங்களில் இவை வந்திருக்கக்கூடும். அமெரிக்காவில் கலிபோர்னியாவிலுள்ள ராஸ்பெர்ரி பழத்தோட்டங்களில்தான் புள்ளி இறக்கை பழப்பூச்சி முதலாவதாக காணப்பட்டது. அது விரைவிலேயே மற்ற மாநிலங்களுக்கும் பரவிவிட்டது.
இது தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாயினும், அமெரிக்காவுக்கு வந்து குறுகிய காலமே ஆகியிருக்கிறபடியினால் இவற்றை அழிக்கப்பயன்படுத்தும் முறையானது சூழலியலில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தக்கூடும் எனவும் ஹன்னா பராக் கருத்து தெரிவித்துள்ளார்.