உடல் பருமன் அதிகரிப்பதற்கு பிரக்டோஸ் காரணமாகிறதா? ஆய்வுகள் சொல்வதென்ன?

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, உலக அளவில் 13 சதவீதம் பெரியவர்களுக்கு உடல் பருமன் பிரச்சினை உள்ளது எனத் தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலோனோர் வளர்ச்சியடைந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் வளரும் நாடுகளில் உள்ளவர்களின் உடல் பருமன் விகிதமும் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பெரியவர்கள் உடல் பருமனுடன் காணப்படுகிறார்கள். அவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் கடுமையான உடல் பருமன் உள்ளவர்கள். கனடாவில், வயது வந்தவர்களில் தோராயமாக 27 சதவீதம் பேர் பருமனாக இருப்பதாகவும், மேலும் 36 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டிருப்பதாக சுய-அறிக்கைத் தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் சுமார் 40 சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 21 சதவீதம் பெண்கள் மற்றும் 19 சதவீதம் ஆண்கள் அதிக எடை கொண்டவர்களாக உள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, 1975 ஆம் ஆண்டு முதல் உலகளவில் உடல் பருமன் பிரச்சினை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
உடல் பருமன் என்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் அசாதாரண அல்லது அதிகப்படியான கொழுப்புத் திரட்சியாகும். உடல் பருமனைக் கண்டறிய வல்லுநர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் அளவீட்டு முறை பிஎம்ஐ என்று அழைக்கப்படுகிறது. உடல் எடை மற்றும் உயரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிஎம்ஐ எண் கணக்கிடப்படுகிறது. இந்த பிஎம்ஐ ஒரு குறிப்பிட்ட அளவைக் கடக்கும்போது, உடல்பருமன் கண்டறியப்படுகிறது. பெரியவர்களில், 25.0 – 29.9 க்கு இடைப்பட்ட பிஎம்ஐ அதிக எடையாகக் கருதப்படுகிறது, பிஎம்ஐ 30 அல்லது அதற்கு மேல் இருந்தால் ஆபத்தை விளைவிக்கும் உடல் பருமன் எனக் கூறப்படுகிறது. உடல் பருமனால் இருதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மூட்டு வலி, இடுப்பு வலி, மூலநோய், மனச்சோர்வு, மலச்சிக்கல், பித்தப்பைக் கற்கள் மற்றும் புற்று நோய்கள் வர அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிரக்டோஸ் என்னும் நாம் உண்ணக்கூடிய உணவுகளில் இருக்கும் ஒரு வகை சர்க்கரை உடல் பருமனுக்கான முக்கியக் காரணியாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இது பழங்கள் மற்றும் தேனில் உள்ள முதன்மை ஊட்டச்சத்து என்று கருதப்படுகிறது. பழச்சா்க்கரை/பிரக்டோஸ் (fructose) உண்ணப்படும்போது, அது செரிமானப் பாதையில் உள்ள செல்களை மாற்றி, அந்த செல்கள் உணவுகளில் உள்ள அதிக ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள உதவி செய்கிறது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த மாற்றங்களை வைத்து, தற்போது உலக அளவில் பழச்சா்க்கரையை உண்ணும் பழக்கம் அதிகரித்து வருவதற்கும், உடல் பருமன் அதிகரித்து வருவதற்கும் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட புற்றுநோய்கள் அதிகரித்து வருவதற்கும் இடையே உள்ள தொடா்பை விளக்க முடியும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சிறு குடலின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய மற்றும் முடி போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும் வில்லியில் பழச்சா்க்கரை அதிகம் உள்ள உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகளை அறிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பரிசோதனைக்காக எலிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் சில எலிகளுக்குப் பழச்சா்க்கரை நிறைந்த உணவும் சில எலிகளுக்குப் பழச்சா்க்கரை இல்லாத உணவும் வழங்கப்பட்டன. ஆய்வின் முடிவில் பழச்சா்க்கரை உண்ணாத எலிகளை விட, பழச்சா்க்கரை உண்ட எலிகள் 25 முதல் 40 சதவீதம் நீண்ட வில்லிகளைக் கொண்டிருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விலங்குகள் சாப்பிடும் ஊட்டச்சத்துகளுக்கும், அவற்றின் உடல் எடை அதிகரிப்பதற்கும், அவை கொழுப்புகளைச் சாப்பிடுவதற்கும் மற்றும் வில்லிகளின் அதிகரிக்கும் நீளத்திற்கும் இடையே தொடா்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. வடிவ அமைப்பைப் பொறுத்தவரை, பழச்சா்க்கரை மற்ற சா்க்கரையான குளுக்கோஸை விட சற்று மாறுபட்டது என்றும் அதன் வளா்சிதை மாற்றமும் மாறுபட்டது என்றும் மூத்த ஆய்வாளா்களான டாக்டா் மார்கஸ் டாசில்வா கான்கல்வ்ஸ் மற்றும் ரால்ஃப் எல். நாக்மன் ஆகியோர் தெரிவிக்கின்றனா்.
பழச்சா்க்கரையின் வளா்சிதை மாற்றங்கள், வில்லியின் நீளத்தை அதிகரிக்கின்றன என்பதையும் மற்றும் குடல் கட்டிகள் வளா்ச்சியடைவதை ஊக்குவிக்கின்றன என்பதையும் தங்கள் ஆய்வு கண்டறிந்ததாக மருத்துவா் கான்கல்வ்ஸ் தெரிவிக்கிறார். அதாவது உணவில் உள்ள பழச்சா்க்கரையானது, எலியினுடைய பெருங்குடல் புற்றுநோய்க் கட்டியின் அளவை அதிகரிக்கலாம் என்றும் மற்றும் பழச் சா்க்கரையின் வளா்சிதை மாற்றம் நிகழ்வதைத் தடுக்காமல் இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஆக, அதிகமான சர்க்கரை கலந்திருக்கும் உணவுகள் பிரக்டோஸ் செயல்பாடுகளின் காரணமாக வயிற்றில் அதிகச் சுமையை ஏற்படுத்தும். குறிப்பாக வெறும் வயிற்றில் இத்தகைய சர்க்கரை உணவுகளை உண்ணும்போது இன்சுலின் பிரிவது கடினமாகிவிடும். அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராகப் பராமரிப்பதிலும் சிக்கல் நேரிடும். உடல் எடையும் அதிகரிக்கத் தொடங்கிவிடும். சில பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உயர்-பிரக்டோஸ் போன்ற சேர்க்கைகள் உள்ளன. இது உடலில் மாற்றங்களை ஏற்படுத்திக் கூடுதல் எடையை உண்டாக்கும்.
உணவுக் கட்டுப்பாடு மற்றும் சரியான உடற்பயிற்சி மூலம் உடல் பருமனைக் குறைக்கலாம். பொதுவாக இனிப்பான உணவுப் பொருட்களைக் காலையில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதிக மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் எண்ணெய் உள்ள உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. கீரைகள், கத்திரிக்காய், புடலங்காய், சுரைக்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், முருங்கைக்காய், காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பாகற்காய், வாழைத்தண்டு ஆகியவற்றில் கலோரிகள் குறைவு. கிழங்குகள், மாம்பழம், வாழைப்பழம், பலா, சீத்தா, அத்தி, திராட்சை, சப்போட்டா ஆகியவற்றில் கலோரிகள் அதிகம். கொய்யா, மாதுளை, தக்காளி, சாத்துக்குடி, அன்னாசி, பேரிக்காய் போன்ற பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். நோன்பையும் ஓட்டல் உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மது அருந்துதல் மற்றும் புகை பழக்கத்தைக் கைவிடுதல் நலம். மொத்தத்தில், உடல் பருமனுக்கான உண்மையான காரணங்களை அறிந்து கொண்டு அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் நல்லது.