இதயநோய் ஆபத்தைக் குறைக்கும் ஆறு உணவு பொருள்கள்

செய்தி சுருக்கம்:
ஆண்டுதோறும் ஏறக்குறைய 1 கோடியே 79 லட்சம் பேர் இதய ரத்த நாள நோய்களால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 80 நாடுகளில் இதய நோய் பாதிப்புள்ளவர்கள் மற்றும் பாதிப்பில்லாதவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 45 பேரிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் கிடைத்த தரவுகளின்படி கனடா ஆராய்ச்சியாளர்கள் ஆறு வகை உணவு பொருள்களை ஒழுங்காக சாப்பிடுகிறவர்களுக்கு இதயம் மற்றும் இதய ரத்த நாளம் தொடர்பான வியாதிகள் ஏற்பட வாய்ப்பு குறைவு என்று தெரிவித்துள்ளார்கள்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
உலகம் முழுவதும் இதயம் மற்றும் இதய ரத்தநாள நோய்களால் இறப்போரின் எண்ணிக்கையானது மொத்த உயிரிழப்புகளில் 31 சதவீதமாகும். இதயம் தொடர்பான வியாதிகளால் உயிரிழப்போரின் மொத்த எண்ணிக்கையில் 85 சதவீதத்தினர் மாரடைப்பாலும் மூளைக்குச் செல்லும் நாளத்தில் அடைப்பு உண்டாவதால் ஏற்படும் பக்கவாத பாதிப்பினாலும் இறக்கின்றனர். கனடாவில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் 26 லட்சம் பேருக்கு இதய நோய் பாதிப்புள்ளது. பக்கவாதத்தினால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கனடாவில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஒருவருக்கு பக்கவாதம் என்னும் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலத்தில் சராசரியாக 1 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோரை பக்கவாதம் பாதிக்கிறது. ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடித்தல், உடல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், புகை பிடிக்காதிருத்தல், அளவுக்கு அதிகமாக மது அருந்தாதிருத்தல் போன்ற கட்டுப்பாடுகளினால் இதயத்தை பாதுகாக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
பின்னணி:
இதயத்திற்கு இரத்தம் கொண்டு செல்லும் நாளங்களில் பாதிப்பு, ஒழுங்கற்ற இதய துடிப்பு, பிறவி இதய பாதிப்பு, இதய தசைகளில் பாதிப்பு, இதயத்திலுள்ள வால்வுகளில் பாதிப்பு என்று இதய நோய்கள் பலவகைப்படும். உலக அளவிலும் அமெரிக்காவிலும் மக்கள் உயிரிழக்க முக்கியமான காரணமாக இதயம் மற்றும் இதய ரத்த நாள நோய்களே காரணமாக இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவில் பெரியவர்களுள் ஏறக்குறைய பாதி எண்ணிக்கையினர் ஏதோ ஒருவகை இதய நோய் பாதிப்புள்ளாகியிருக்கின்றனர். அனைத்து வயதினர், அனைத்து பாலினத்தை சேர்ந்தவர்கள், அனைத்து சமுதாய மற்றும் பொருளாதார பிரிவை சார்ந்த மக்களுக்கும் இப்பாதிப்பு ஏற்படுகிறது.
பொதுவான காரணங்கள்:
இதய நோய்கள் ஏற்பட பொதுவான காரணங்களாக உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு அதிகரிப்பு, புகையிலை பயன்படுத்துதல், சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு, குறைந்த உடல் செயல்பாடு, உடல் எடை மற்றும் பருமன் அதிகரித்தல், சோடியம், சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை சாப்பிடுதல், அளவுக்கு அதிகமாக மது அருந்துதல் பரம்பரை நோய் பாதிப்பு ஆகியவை கூறப்படுகின்றன.
இதய நோயை தடுப்பதில் உணவின் பங்கு
பதப்படுத்தப்பட்ட மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பதால் இதயம் மற்றும் இதய ரத்த நாளம் தொடர்பான நோய் பாதிப்பு ஏற்படாமல் காத்துக்கொள்ளலாம். இயற்கை உணவு பொருள்களை தேவையான அளவு சாப்பிடுவதால் உடலும் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
பரிந்துரைக்கப்படுகிற சர்விங் என்ற அளவானது உணவை பொறுத்து மாறுபடும் என்றாலும் பொதுவாக 75 கிராம் அளவு என்பது ஒரு சர்விங் என்று கருதப்படுகிறது. தினமும் இரண்டிலிருந்து மூன்று சர்விங் பழங்கள், இரண்டிலிருந்து மூன்று சர்விங் காய்கறிகள், ஒரு சர்விங் நட்ஸ் என்னும் கொட்டை வகைகள், இரண்டு சர்விங் அளவு பால் பொருள்கள் ஆகியவற்றையும், வாரத்திற்கு மூன்று முதல் நான்கு சர்விங் அளவு பருப்பு வகைகள் மற்றும் இரண்டிலிருந்து மூன்று சர்விங் அளவு மீன் சாப்பிடும் பழக்கத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் இதய நோய் பாதிப்பை தவிர்க்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக, முழு தானியங்கள், ரெட் மீட் என்று அறியப்படும் வெள்ளாடு, செம்மறியாடு, மாடு, பன்றி இவற்றின் இறைச்சி, கோழி இவற்றையும் ஒரு நாளுக்கு ஒரு சர்விங் என்ற அளவுக்கு சாப்பிடலாம்.
பழங்கள்
பழங்கள், ஊட்டச்சத்து அடங்கியவை. இவை உடலில் கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பின் அளவையும் இரத்த அழுத்தத்தின் அளவையும் குறைக்க உதவுகின்றன. கொலஸ்ட்ரால் குறைவதும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. பழங்களில் நார்ச்சத்தும், பொட்டாசியமும் அதிகமாக இருப்பதால் இவை உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கின்றன. ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, பேரி, திராட்சை உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம்.
காய்கறிகள்
காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்தும், வைட்டமின் ஏ சத்தானது பீட்டாகரோட்டின் என்னும் நிறமி வடிவிலும் இவற்றில் அடங்கியுள்ளது. இதய ரத்தநாளங்களில் கொழுப்பு படிவதை காய்கள் தடுக்கின்றன. கீரைகள், கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு, வெள்ளைப் பூண்டு, பிரெக்கோலி போன்ற காய்கறிகளை சாப்பிடலாம்.
நட்ஸ்
வாதுமை, வால்நட், முந்திரி போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இவற்றிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதயத்தை பாதுகாக்கும். உப்பு மற்றும் இனிப்பு சேர்க்காமல் இவற்றை பரிந்துரைக்கப்பட்ட அளவு சாப்பிடுவதால் இதய நோய்களை தவிர்க்கலாம்.
பால் பொருள்கள்
பால் சார்ந்த உணவுகளில் வைட்டமின் டி மற்றும் கே, கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை இதயத்திற்கு நலம் பயக்கும். டிரைகிளிசராய்டு எனப்படும் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்புகளின்மேல் வினைபுரிந்து உடலுக்கு நன்மை செய்கின்றன.
பயிறுகள்
பயிறுகளை முளை கட்டி சாப்பிடலாம். காயவைத்து உடைத்தும் சாப்பிடலாம். இவற்றில் புரத சத்தும், அமினோ அமிலங்களும் உள்ளன. குறிப்பாக லைசீன் என்ற அமிலம் அதிகமாக இருக்கிறது. இவற்றில் இருக்கும் நார்ச்சத்து நீரில் கரையக்கூடியது. அது உடலிலிருக்கும் தீமை செய்யக்கூடிய கொழுப்பை குறைக்கிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை காக்கிறது.
மீன்
மீன்களில் 5 சதவீதத்திற்கும் மேல் கொழுப்புள்ள மீன்கள் இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன என்று பொதுவாக கருதப்பட்டு வந்தது. ஆனால் ஆராய்ச்சிக்கு பிறகு அதற்கான சரியான காரணம் தெரிய வந்திருக்கிறது. அதன்படி மீன்களில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. இவை உடலில் சேகரிக்கப்பட்டிருக்கும் டிரைகிளிசராய்டு என்னும் கொழுப்பினை கரைக்கிறது. இரத்த அழுத்தத்தை ஓரளவு குறைக்கிறது. இரத்தம் உறைதலை தடுக்கிறது. அதன்காரணமாக இதய செயல்பாடு இழக்கும் அபாயத்தையும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது என்பதே உண்மை.
தவிர்ப்பது எப்படி?
வாழ்வியல் மாற்றத்தால் இதய நோயை தடுக்கலாம். புகையிலை பொருள்களை பயன்படுத்துவதை விட்டுவிடுதல், இன்சுலின் சுரப்பு குறைவால் ஏற்படும் நீரிழிவு, கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பின் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்தல், சரியான எடையை பேணுதல், பூரித கொழுப்பு மற்றும் சோடியம் குறைவான உணவு பொருள்களை சாப்பிடுதல், நாள்தோறும் குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் ஏற்படாமல் எச்சரிக்கையாக இருத்தல் ஆகியவற்றால் இதயத்தை ஆரோக்கியமாக காத்துக்கொள்ளலாம்.