fbpx
LOADING

Type to search

பல்பொருள் வர்த்தகம்

பெண்ணியவாதிகள் அழகு சாதனப் பொருட்களை அதிகம் விரும்புபவர்களா? ஆராய்ச்சி முடிவுகள் சொல்வது என்ன?

 எந்தப் பெண்ணும் தன்னை அழகாய்க் காட்டிக்கொள்ளவே விரும்புவாள். அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தற்கால அழகு சாதன நிறுவனங்கள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பது அவளுக்கு இன்னும் சாதகமாகவே  அமைந்துவிட்டது. எத்தனை விதமான அழகு சாதனங்கள், தோலைச் சிவப்பாக்கும் என்று சொல்லப்படும் அழகு கிரீம்கள், அழகு நிலையங்கள்! அப்பப்பா! பெண்களுக்காகவே படைக்கப்பட்ட ஓர் தனி உலகம் அது. தலைக்குப் போடும் ஷாம்புவில் இருந்து முகப்பூச்சு, நகப்பூச்சு, நிறம் ஏற்றிகள், உதட்டு வண்ணங்கள், வியர்வைத் தடுப்பான்கள், கிரீம்கள் என்று பெண்களுக்காகவே இருக்கிறது இந்த உலகம். இந்தியாவில் பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்கள் சந்தை அதிவேகமாக விரிவடைந்து வருவதாகவும் இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ளதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகின்றது. 2035ம் ஆண்டுக்குள் இச்சந்தை 35 பில்லியன் டாலராக உயரும் என்று கூறப்படுகின்றது. உலகளாவிய அழகுசாதனச் சந்தை இன்னும் இரண்டு ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றால் நினைத்துப் பாருங்கள் அன்றாட வாழ்வில் அழகு சாதனப் பொருள்கள் எத்தகைய முக்கியத்துவத்தை அடைந்திருக்கின்றன என்று.  இன்று நாற்பதுகளில் இருக்கும் பெண்களுக்குக்  கூட காம்பேக்ட் பவுடர், மஸ்காரா, பவுண்டேசன், பேஸ்  கிரீம் , ஹேர் ஜெல், வாசனைத்  திரவியங்கள் என எல்லாம் தேவைப்படுகிறது.

அழகு சாதனப்  பொருட்களை விரும்பாத பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த ஆண்டு முதல் நான் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களை விட்டு விடப் போகிறேன்என்று எந்தப் பெண்ணும் சபதம் எடுப்பதில்லை.  எந்தப் பொருளை வாங்க மறந்தாலும் அவள் அழகு சாதனப் பொருட்களை வாங்க மறப்பதில்லை. இருந்தபோதும் சில ஆராய்ச்சி முடிவுகள் பெண்களுக்கும் அழகுசாதனப்  பொருட்களுக்கும் உள்ள தொடர்பினை வெளிப்படுத்தும்போது பெரும் வியப்பாக இருக்கிறது.

குறிப்பாகப் பெண்ணியவாதிகளுக்கும் இந்த அழகு சாதனப் பொருட்களுக்கும் உள்ள சம்பந்தத்தைப்  பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அதாவது தங்களைப் பெண்ணியவாதியாகளாகக்  காட்டிக் கொள்ளும் பெண்கள், சாதாரணப்  பெண்களைக் காட்டிலும் அதிக அளவில் அழகு சாதனங்களைப்  பயன்படுத்துவதாகவும் தங்களது ஆளுமையை நிரூபிக்க அழகுசாதன நிலையங்களுக்குச் சென்று பணத்தைச் செலவழிப்பதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு அவர்கள் கூறும் காரணங்களைப் பார்க்கும்போது வியப்பாக உள்ளது.  அழகு சாதனப் பொருட்களால் தங்களது இருப்பு மற்றவர்களால் அறியப்படுகிறது என்றும் நாம் எப்படி இருக்கிறோமோஎன்ற மேலோட்டமான சாதாரண பெண்ணுக்கே உரிய கவலைகளை நீக்கி அழகு சாதனப் பொருட்கள் தன்னம்பிக்கையைத்  தருவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இன்னும் சிலர் நகைச்சுவையாகத் தாங்கள் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தாவிட்டால் மற்றவர்களால் தங்களை அடையாளம் காண்பது கடினம்  என்று தெரிவிக்கிறார்கள்.

 ஆணாதிக்க சமூகத்தில் இப்படித்தான் பெண்கள் இருக்க வேண்டும்என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதை உடைத்தெறிவதற்கும் கூட  அழகு சாதனப்பொருட்களின் மீது தங்களுக்கு அதீத நாட்டம் வந்ததாகச் சிலர்  கூறுகிறார்கள்.

ஆட்ரே லார்ட் என்பவர் ‘எஜமானரின் கருவிகள் எஜமானரின் வீட்டை ஒருபோதும் பாதிக்காது’ என்பார். அதுபோலத்  தாங்கள் பயன்படுத்தும் இந்த பிரீமியர் அழகு சாதனங்கள் தங்களை உயர்த்திக் காட்டவே அன்றி தாழ்த்துவதற்கு அல்ல என்பதில் பெண்ணியவாதிகள் உறுதியாக இருக்கிறார்கள். 

  ‘ஒரே மாதிரியான கொள்கைகளை உடைத்து உங்களை நீங்கள் நேசிக்க வேண்டுமென்றால் அதற்கு அழகு சாதனப் பொருட்கள் நிச்சயம் வேண்டும்என்கிறார் ஒரு பெண்ணியவாதி. மற்றொருவரோ உங்களை வலிமை  நிறைந்தவராகவும் அதிகாரம் நிறைந்தவராகவும் காட்டுவதற்கு அழகு சாதனப் பொருட்கள் அவசியம்என்கிறார். நம்பிக்கையையும் நேர்மறை சக்தியையும் அழகுசாதனப் பொருட்கள் தருவதாகப் பல பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.

அழகு தொடர்பான நுகர்வு அனுபவங்கள் பெண்ணியவாதிகளுக்கும் அல்லாதவர்களுக்கும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை ஆராய்ச்சி செய்த போது பல உண்மைகள் வெளிப்பட்டன. வழக்கமான மற்றும் தினசரி நடைமுறைகளான ஒப்பனை செய்தல், கை கால்களில் ரோமம் நீக்குதல், கை நகங்களை அழகுபடுத்துதல், தலைமுடியை அழகுபடுத்துதல் போன்ற அடையாளத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளில் கூட பெண்ணியவாதிகள் அழுத்தங்களைச்  சந்திக்கிறார்கள் என ஹெரால்ட் மற்றும் மில்லர் ஆகியோரின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் பெண்ணியவாதிகள் பிரீமியம் அழகு சாதனப் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அதிகாரத்திற்காகவும் சுயநிர்ணயத்திற்காகவுமே அவர்கள் இதைச்  செய்வதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. வித்தியாசமான ஆராய்ச்சிகள்தான் என்றாலும் சுவாரஸ்யமான தகவல்களை இவை வெளிக்கொண்டு வந்ததால் முக்கியத்துவம் பெறுகின்றன என்றே சொல்லவேண்டும். எல்லாம் சரி, உங்களுக்குத் தெரியுமா? அழகு சாதனப் பொருட்களின் சந்தை உலகளாவிய முக்கியத்துவம் பெறும் இந்தக் காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில்  பெண்கள் நடத்தும் அழகு நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *