fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம்

குழந்தை பராமரிப்பில் தந்தையின் பங்கு – ஆய்வு கூறுவது என்ன?

செய்தி சுருக்கம்:

குழந்தை பராமரிப்பில் தந்தையரின் பங்களிப்பு குழந்தைகளின் நடத்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
குழந்தை பிறந்ததும் தாயின் பொறுப்பு மட்டுமே அதிகரிக்கிறது. வீட்டு வேலைகளோடு, குழந்தையை பராமரிக்கும் கடமையும் பெண்ணுக்குக் கூடுகிறது. குழந்தை பராமரித்தல் என்பது எளிதான வேலையல்ல.
கடந்த 30 ஆண்டு காலமாக அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையங்கள், பெண்கள் கருவுறும் முன்னரும், கருவுற்றிருக்கும்போதும், பிரசவத்திற்கு பின்பும் கர்ப்பகால இடர் மதிப்பீடு கண்காணிப்பு என்ற ஆய்வை செய்து வருகின்றன.

இந்த ஆய்வின்போது பெண்களுக்கு வழங்கப்படும் கேள்விகளில் ‘உங்கள் கர்ப்ப காலத்தில் உங்கள் கணவர் உங்களை அடித்துள்ளாரா? உதைத்துள்ளாரா?’ என்ற கேள்வி மட்டுமே இடம் பெற்றிருந்தது. ஆனால், பெண்கள் அதையும் தாண்டி தங்கள் கருத்துகளை பதிவு செய்ய முயற்சித்தனர். கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளந்தாய்மார் தங்கள் கணவரின் உதவியை அதிகமாய் எதிர்பார்த்தனர். ஆகவே, இரண்டு முதல் ஆறு மாதம் வரை வயதுகொண்ட சிசுக்களின் தந்தையரிடம் தனியாக ஆய்வு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் குழந்தைப் பேற்றுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைப்பது உள்ளிட்ட பல சமுதாய காரணிகள் பெண்களுக்குச் சுமையாக உள்ளது.
அன்றாட வீட்டு வேலைகளுடன் குழந்தையையும் பராமரிப்பது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெண்களை சோர்வடையச் செய்யும்.

குழந்தை பராமரிப்பில் மனைவிக்கு கணவர் உதவுவதல் ஆறுதலாக விளங்குவதோடு, கணவன் – மனைவி உறவையும் வலுப்படுத்தும். குழந்தையும் பெற்றோரின் அணுக்கத்தில் பாதுகாப்பாக உணரும்.

பின்னணி:

பிறந்தது முதல் ஒரு மாதம் வரையிலான குழந்தைகள் சிசுக்கள் (நியூ பார்ன்)என்றும் ஒரு மாதத்திலிருந்து ஓராண்டு வயது வரையிலான குழந்தைகள், பச்சிளங்குழந்தைகள் (இன்ஃபேன்ட்) என்றும் அழைக்கப்படுவர்.
தாய்ப் பாலூட்டுதல் மற்றும் சிசுவின் உறக்கம் ஆகியவை அமெரிக்காவின் தேசிய சுகாதார குறியீடுகளில் முக்கியமானவையாக இருப்பதால் அந்த இரண்டும் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற தந்தையரில் மூன்றில் ஒரு பங்கினருக்கு குழந்தைகளை படுக்க வைப்பது குறித்து போதுமான அறிதல் இல்லை என்பது தெரிய வந்தது.

தாய்ப்பால்:

பொதுவாக குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப் பாலூட்டுதலை ஆரம்பிப்பது சிறந்தது. இது நோய்த்தொற்றிலிருந்தும் உயிரிழக்கும் அபாயத்திலிருந்தும் குழந்தையை காப்பாற்றும். தாய் பாலூட்டுவது பால் சுரப்பை அதிகரிக்கும். குழந்தை பிறந்த முதல் சில நாள்கள் தாய்ப்பால் தங்க நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் பிறந்த குழந்தைக்கு இன்றியமையாத தேவையான ஊட்டச்சத்துகளும், நோய்த்தடுப்புக்கான சத்துகளும் அடங்கியிருக்கும். தாய்ப் பாலூட்டுதல், குழந்தைக்கும் தாய்க்கும் இடையே உணர்வுரீதியான பந்தத்தை வலுப்படுத்தும்.

தாய்ப்பால், குழந்தைக்கு மிகவும் ஏற்ற உணவாகும். அது பாதுகாப்பானது; சுத்தமானது. குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய பல பொதுவான நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய எதிர்உயிரிகள் தாய்ப்பாலில் உள்ளன.

குழந்தை பிறந்த ஆரம்ப மாதங்களில் குழந்தைக்குக்கு தேவையான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துகளை தாய்ப்பால் தருகிறது. ஆறு மாதம் கடந்த குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துகளில் பாதிக்கு மேலான அளவு தாய்ப்பாலிலிருந்தே கிடைக்கிறது. முதல் வயது நிரம்பி, இரண்டாம் ஆண்டில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தில் மூன்றில் ஒரு பங்கை தாய்ப்பால் அளிக்கிறது.

தாய்ப்பாலும் எதிர்கால நன்மையும்:

தாய்ப் பால் பருகும் குழந்தைகள் புத்திக்கூர்மை தேர்வுகளில் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்படுகின்றனர். உடல் எடை கூடுதல், பருமன் மற்றும் வயதாகும்போது நீரிழிபு பாதிப்புள்ளாகுதல் ஆகியவற்றுக்கான வாய்ப்பு குறைவு.
தாய்ப் பால் கொடுக்கும் தாய்மாருக்கு மார்பக மற்றும் சினைப்பை புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைவு.
தங்கள் குழந்தையின் தாய், தாய்ப் பாலூட்டுவதை விரும்பும் தந்தையரில் 95 சதவீத தந்தையர், தங்கள் மனைவி பாலூட்ட ஆரம்பிக்கும் காலத்தை குறித்தும், 78 சதவீத தந்தையர், எட்டு வாரங்கள் கடந்தும் தாய்ப் பாலூட்டுவதை குறித்தும் குறைபட்டுக்கொள்கின்றனர். மனைவி பாலூட்டுவதை விரும்பாத கணவர்களுள் 69 சதவீதத்தினர் பாலூட்டுதலை ஆரம்பிப்பதைக் குறித்தும், 33 சதவீத தந்தையர், தங்கள் மனைவி எட்டு வார காலம் கடந்தும் பாலூட்டுவது குறித்தும் குறை தெரிவிக்கின்றனர்.

மனைவி பாலூட்டும் காலத்தில், அவர்கள் உரிய நேரத்தில் சாப்பிடுவதற்கும், பாலூட்ட வசதியான இடம் அமைவதற்கும், பாலூட்ட ஓய்வு கிடைக்கும்படி வீட்டு வேலைகளில் உதவுதல் ஆகியவற்றை கணவர் செய்து குழந்தை வளர்ப்பில் பங்களிக்கலாம்.

குழந்தை உறங்கும் நிலை:

பச்சிளங்குழந்தை திடீர் மரணமடைதல் என்னும் பாதிப்பு (சிட்ஸ் – எஸ்ஐடிஎஸ்) அமெரிக்காவில் காணப்படுகிறது. ஆண்டுதோறும் 3,400 சிசுக்கள் திடீர் மரணமடைவதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், குழந்தையை தவறான முறையில் உறங்க வைத்தலும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இதை தவிர்க்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
குழந்தையின் முதுகு படுக்கையில் படும்படி படுக்க வைக்கவேண்டும். முகங்குப்புற அல்லது பக்கவாட்டில் படுக்க வைப்பது மூச்சு திணறல் ஏற்படச் செய்யும்.

குழந்தை தூங்குவதற்கென பிரத்தியேகமாக உள்ள கிரிப், பேசினெட் மற்றும் பெட்சைடு ஸ்லீப்பர் எனப்படும் சிறு தொட்டில் படுக்கைகளை பயன்படுத்தவேண்டும். மூத்த பிள்ளைகள் மற்றும் செல்லப் பிராணிகளுடன் ஒரே படுக்கையில் பச்சிளங்குழந்தைகளை படுக்க வைக்கக்கூடாது.

குழந்தைகள் படுக்கும் இடமானது மெத்தை, போர்வை மற்றும் விளையாட்டுப் பொருள்கள் இல்லாமலும், அசையாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மிகவும் மென்மையான படுக்கையில் குழந்தையை படுக்க வைக்கக்கூடாது. மென்மையான படுக்கைகள் சொகுசுக்காக அழுந்தும்படி செய்யப்பட்டிருக்கும். அவற்றில் படுத்தால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் ஆபத்து உண்டு.

தாய்ப்பாலூட்ட மனைவிக்கு உதவுவதுடன், குழந்தையை உரிய முறையில் படுக்க வைப்பதிலும் கணவர் உதவலாம். இது குழந்தை பராமரிப்பில் மிகவும் முக்கியமாகும். தாயின் அன்போடு தந்தையின் அன்பும் கிடைக்கும்போது குழந்தை அன்பை உணர கற்றுக்கொள்கிறது. வளரும்போது தானும் மற்றவர்களிடம் அன்பு காட்ட இது உதவும். குழந்தையை பராமரிப்பது என்பது பெற்றோர் என் பொறுப்பை மனைவியோடு உள்ளன்போடு பகிர்ந்து கொள்வது என்பதை கணவர் உணர வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள் :

ஓரல் செக்ஸ் (வாய்வழிப் புணர்ச்சி) கேன்சருக்கு வழிவகுக்கிறதா? உலகம் முழுவது இப்படி வாயால் கெட்டவர்கள்...
உங்கள் துணை மீது அதிக அக்கறை செலுத்துங்கள் - அப்புறம் பாருங்கள் உங்கள் செக்ஸ் வாழ்க்கை எப்படி மாறுகி...
வெப்பமா? குளிரா? செக்ஸ் உணர்வை அதிகரிக்க எந்த சூழல் பொருத்தமானது..?! 
நிலவின் தென் துருவத்தில் இரவு தொடங்கியது - பிரயாணக்களைப்பு தீர 18 நாட்கள் ஓய்வெடுக்க போகும் சந்திராய...
இனிப்பதெல்லாம் இனிப்பல்ல! செயற்கை இனிப்பூட்டிகள் புற்றுநோயை உண்டாக்கலாம் - ஆய்வு முடிவு!!
பாதுகாப்பான காற்று மாசு அளவென்பது ஒரு மாயை! எல்லாமே மூளைக்கு தீங்குதான்!!
மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் குட்டித்தூக்கம் - ஆய்வு முடிவு!
‘AI டெக்னாலஜியால் தேர்தல் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பு ஆட்டம் காணப்போகிறது!’ - பில் கேட்ஸ் எச்சரிக்கை...
செவ்வாய் கிரகத்தில் இருந்துநேரடி ஒளிபரப்பு!
பெண்களுக்கு உச்சக்கட்ட இன்பம் சாத்தியமா?
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *