போலி செய்திகளும்; மனித நம்பிக்கையும்

செய்தி சுருக்கம்:
செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கும் போலித் தகவல்களை மனிதர்கள் எளிதாக கண்டுபிடிக்க முடிவதில்லை என ஒரு ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
பொய்களை எளிதாக நம்பிவிடும் இந்த மனித சமூதாயம் உண்மைகளை புறந்தள்ளி பல குழப்பங்களுக்கு ஆளாகிறது. ஃபோட்டோஷாப், எடிட்டிங் போன்ற கருவிகளைக்கொண்டு உருவாக்கும் இந்த போலி பிம்பங்கள் எப்பாடுபட்டவது கண்டுபிடித்துவிடலாம், ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் போலிகளை நம்பித்தான் ஆகவேண்டும் என்ற நிலமை உள்ளது. இதை ஆய்வு செய்து நிரூபணம் செய்துள்ளனர்.
பின்னணி:
‘ஆர்டிபிசியல் இண்டெலிஜன்ஸ்’ என்னும் செயற்கை நுண்ணறிவு நுட்பம் மனிதகுலதிற்கு மற்றொரு கருவி தான். அதை சரியாகப் பயன்படுத்துவதும், தவறாகப் பயன்படுத்துவதும் மனிதனின் எண்ணத்தில் தான் இருக்கிறது.
அடிப்படையில் இந்த A.I தொழில்நுட்பத்தை மனித மூளையுடன் ஒப்பிடலாம். தனக்கு சொல்லிக்கொடுப்பதை ஒரு குழந்தை எவ்வாறு கற்றுக்கொண்டு அதை செய்கிறதோ அது போல தான் இந்த தொழில்நுட்பமும் வடிவமைக்கப்படுகிறது. இதற்கு பல கோடி தரவுகளை தகவல்களாக உட்செலுத்துகிறார்கள். அவையனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு தான் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களைத் தருகிறது.
ஆர்டிபிசியல் இண்டெலிஜன்ஸ் ஒரு அணுகுண்டு என உலகின் தலைசிறந்த முதலீட்டாளர் வாரன் பஃப்பட் கூறியுள்ளார்.
ஏ.ஐ அசாத்திய திறமை வாய்ந்தது. மனிதன் செய்யும் வேலையை இது சுலபமாக செய்துவிடும். எடுத்துக்காட்டிற்கு இந்த கட்டுரையை எழுத எனக்கு மூன்று மணிநேரம் ஆகிறது என்றால், ஆர்டிபிசியல் இண்டெலிஜன்ஸ் இதை மூன்று நிமிடங்களில் எழுதிவிடும். இதுபோல எண்ணற்றத் துறைகளில் பல வேலைகளை செய்ய இது பயன்படுகிறது. ஆனால் இதை வைத்து தவறான செயல்களை செய்துவிடுவார்களோ என்று அஞ்சி தான் வாரன் பஃப்பட் இதை அணுகுண்டு என்று கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பொய்யானது உண்மையைவிட ஆறு மடங்கு வேகமாக பரவுகிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. சில போலி செய்திகள் அப்பட்டமாக போலி எனத் தெரிந்துவிடும். எடுத்துக்காட்டிற்கு இந்த பாம்பு புகைப்படத்தை 25 நபருக்கு ஷேர் செய்தால் அடுத்த இரண்டு நாட்களில் உங்களுக்கு ஒரு நல்லது நடக்கும் என போட்டிருக்கும். இவை பெரும் ஆபத்தில்லா போலிகள். நிறைய பேர் பகிர வேண்டும் என செய்யும் ஒரு யுக்தி தான்.
ஆனால் சில போலி செய்திகள் அப்படி சாதாரணமாவை அல்ல. எடுத்துக்காட்டிற்கு அரசியல் தலைவர்களின் புகைப்படத்தைப் போட்டு அவர் கூறியது போல எடிட் செய்யப்பட்டு பரப்பப்படும் தகவல்கள் சமூகத்திற்குள் ஒரு குழப்பத்தை உண்டாகும். சில நேரங்களில் அது ஒரு பெரிய பிரச்சனையாகக் கூட மாற வாய்ப்புள்ளது.
இதுவே இரு நாட்டின் அரசியல் தலைவர்களை வைத்து போலி செய்திகள் போட்டார்கள் என்றால் அது ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கே ஆபத்தாக முடியும். இதனால் தான் போலிச் செய்திகள் சமூக வலைதளத்தின் சாபக்கேடு என்று பயனாளர்கள் கூறுகிறார்கள்.
ஆய்வு
மனிதன் உருவாக்கும் போலி செய்திகளை மிக எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். ஆனால் ஏ. ஐ உருவாக்கும் பொய்யான செய்திகள் மிக எளிதில் அடையாளம் காண முடிகிறதா என ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
ஜூரிச் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக பணியாற்றும் கியோவன்னி ஸ்பிதாலே மற்றும் பெடரிக்கோ ஜெர்மானி இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதாவது சாட் ஜிபிடி என்று சொல்லப்படும் ஏ. ஐ தொழில்நுட்பம் ஒரு ஆயுதமாக கையாளப்படுமா என்ற தலைப்பில் இந்த ஆய்வை நடத்தினர். அதன் முடிவு மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது என்று அந்த ஆய்வின் முடிவில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தடுப்பூசி, காலநிலை மாற்றம், 5G தொழில்நுட்பம், பரிணாம வளர்ச்சி கோட்பாடு போன்ற சென்ஸிட்டிவ் ஆன தலைப்புகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 92 சதவீத நபர்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட போலித் தகவலை கண்டறிந்தனர். மாறாக அவர்களால் ஒரு ஏ. ஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கிய தகவலின் போலித்தன்மையை அறிந்துகொள்ள முடியவில்லை. அதாவது மனிதர் உருவாக்கிய போலியை விட 37.5% நுட்பமாக இந்த டெக்னாலஜி உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்கள் எழுதும் உள்ளடக்கதைவிட செயற்கை நுண்ணறிவால் எழுதப்படும் தகவல்கள் ஏன் மிகுந்த நம்பிக்ககியூட்டுகிறது என்றால், அது எழுதிய விதம் தான் காரணம். எந்த வித பிழையும் இல்லாமல் ஒரு திறமைமிக்க ஆய்வாளர் எழுதியது போல அதனைப் படிக்கும் போது தோன்றியுள்ளது. இதனால் தான் மக்களால் இதனை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை.
எழுது வடிவிலான தகவல் மட்டுமல்லாமல், வீடியோ, ஆடியோ என அனைத்து தளங்களிலும் போலித் தகவல்கள் பரவியுள்ளது. ‘டீப் ஃபேக் டெக்னாலஜி’ கொண்டு உருவாக்கப்படும் வீடியோக்கள் தத்ரூபமாக உண்மையான நபர் பேசுவதைப் போலவே சிதரிக்கும் தன்மையுடையது. இதனால் தான் தற்போது பல ‘ஃபேக்ட் செக்’ செய்யும் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. கிடைக்கும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிவது தான் அவர்களின் பணி.
இதுமட்டுமல்லாமல், பல தன்னார்வ நிறுவனங்களும், அரசுத் துறைகளும் இந்த போலிச் செய்திகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த சமயத்தில் இப்படி ஏ.ஐ கொண்டு பொய்த் தகவல்களை பரப்பினால் எவ்வாறு அதனை முறியடிப்பது என்ற புதிய கவலை எழுந்துள்ளது.