முக வீக்கம் காரணம் என்ன?

அலர்ஜி, சைனஸ் தொற்று, அல்லது காயம் போன்ற பல்வேறு விஷயங்களால் முகத்தில் வீக்கம் ஏற்படலாம். எனவே முகவீக்கத்திற்கு அதற்கான காரணத்தைக் கண்டறிவது முக்கியம், இதன் மூலம் நீங்கள் சரியான சிகிச்சையை பெறலாம்.
முகம் வீக்கம் சளிச்சுரப்பிகளாலும் ஏற்படலாம், சளி பிடித்தால் அது பொதுவாக உமிழ்நீர் சுரப்பிகளை பாதிக்கும். சளி என்பது மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து உமிழ்நீர் அல்லது சுவாசத் துளிகள் மூலம் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். எடிமா (திரவத்தைத் தக்கவைத்தல்) காரணமாக முகம் வீக்கம் ஏற்படலாம்.
முகம் வீக்கம் சைனசிடிசாலும் ஏற்படலாம். சைனஸ் என்பது கன்னங்கள், நெற்றியின் பின்புறம் மற்றும் மூக்கின் இருபுறமும் அமைந்துள்ள சைனஸ் குழிவுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறிப்பதாகும்.இது ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். ஆனாலும், இதன் மூலம் தீவிரமான முக வீக்கம் ஏற்படாது என்றாலும் தலைவலி, சுவாச நோய்த்தொற்று போன்றவை ஏற்படும்.
வளர்சிதை மாற்றத்திற்கு முக்கியமான ஹார்மோன் தைராய்டு ஹார்மோன் தான். கழுத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி செயலிழந்து, போதுமான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யாமலோ அல்லது அதிக அளவில் உற்பத்தி செய்தாலோ முகத்தில் வீக்கம் ஏற்படும்.
அதுமட்டுமின்றி, கை மற்றும் கால்களில் வீக்கம், எடை அதிகரிப்பு, சோர்வு, மூட்டுவலி, முடி உடைதல், தசை பலவீனம், வேகமான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மனநிலை மாற்றங்கள், எடை இழப்பு மற்றும் தூக்கப் பிரச்சனைகள் கூட தைராய்டு பிரச்சனையின் அறிகுறிகள் தான்.
நன்றாகத் தூங்கி எழுந்த பிறகு கண்கள், இமைகள், உதடுகள் வீக்கம் சிலசமயம் முகமே வீங்கியது போன்று தோற்றமளிப்பதற்கான காரணம் என்ன?
நாம் விழித்திருக்கும்போது அடிக்கடி கண்களை இமைக்கிறோம், அசைக்கிறோம். இமைகளை இறுக்கமாக மூடித் திறக்கிறோம். பல்வேறு காரணங்களால் நாம் இப்படி அடிக்கடி செய்கிறோம். அப்படியே முகத் தசைகளையும் நாம் பல வகையில் அடிக்கடி அசைக்கிறோம் (அதாவது சாப்பிடுவது, உணவை மெல்வது வாயைத் திறந்து மூடுவதுபோல).
ஆனால் நாம் தூங்கும்போது பெருமபாலான இந்தச் செயல்கள் நடைபெறுவதில்லை.தசை இயக்கச் செயல்பாடுகள் குறைகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தூக்கம் நீடித்தால் சுவாசம் மெதுவாக இருக்கும். மெதுவாகக் காற்று உள்ளிழுக்கப்படும். இப்படி தசை இயக்கம் இல்லாத காரணத்தால் முகத்தில் ரத்த நாளங்கள் பெரிதாகிவிடுகின்றன. தோலுக்குக் கீழே உள்ள இடைவெளிகளில், செல்களில் நிண நீர் தேங்கிவிடுகிறது. எனவே கண்களும் உதடுகளும் வீங்கியது போன்றிருக்கின்றன.
போதுமான தூக்கம் இல்லையென்றாலும் கண்களுக்கு கீழ் இருக்கும் இரத்த நாளங்கள் விரிவடைந்து, திரவத்தை வெளியிடலாம். இதனால் தான், கண்ணும் கண்ணை சுற்றியுள்ள பகுதிகளும் வீங்கி காணப்படும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்குவது தான் முறையான தூக்கம். இதை கடைப்பிடித்தால் முக வீக்கத்தை தவிர்க்க முடியும். மேலும், தூங்கும் போது தலையை உயர்த்தி வைத்தபடி தூங்குவது நல்லது.
உடலின் தண்ணீர் அளவானது சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், உடம்பில் சோடியம் அதிகமாக ஆரம்பித்துவிடும். இப்படி நடப்பதால் தான் முகம் மற்றும் கண்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதனை தடுக்க, நாம் தினந்தோறும் அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும். இது நமது உடலில் உள்ள வேதிப் பொருள்களை சமநிலையில் வைத்திருக்கவும் உதவும். நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் சோடியம் அதிகமாக இருந்தால் முக மற்றும் கண்களில் வீக்கங்கள் காணப்படும். ஒரு நாளைக்கு 2,300 மில்லி கிராம் சோடியத்தை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்வது இந்த பிரச்னைக்கு மற்றொரு தீர்வாகும்.
சிலர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பர். மேலும், இவர்களின் கண்கள் வீங்கியே காணப்படுவதற்கு காரணம் மதுவானது இரத்த நாளங்களை விரிவடையச் செய்து முகம் மற்றும் கண்களை வீங்க வைக்கிறது. இதனை தடுக்க மது அருந்த கூடாது. அப்படியே அருந்தினாலும் தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது.
அதிக வயதானவர்களுக்கு கண்கள் அதிகமாக வீங்கி இருக்கும். இதற்கு காரணம் கொலாஜின் எலாஸ்டின் போன்ற திரவங்கள் வயதானதும் குறைவாகவே சுரக்கும். இதனால் இரத்த தசைநார்கள் மெலிந்து கண் வீக்கத்தை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான ஒருவருக்கு, தூங்கி எழுந்த சில நிமிடங்களில் முக வீக்கம் நீங்க வேண்டும். ஆனால், சிறு நீரகக் கோளாறு, இதயக் கோளாறு முதலிய பிரச்சினைகள் இருந்தால், சில மணி நேரங்களுக்கு முகமி வீங்கியது போன்றிருக்கும்.
உங்கள் முகத்தில் உள்ள காயம் காரணமாக வீக்கம் ஏற்பட்டிருந்தால், அந்த இடத்தில் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது வீக்கத்தைக் குறைக்க உதவும்.
அதேபோல் அலர்ஜியால் ஏற்படும் வீக்கத்தை போக்க ஆண்டிஹிஸ்டமின் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, முக வீக்கத்தைக் குறைக்க தூங்கும்போது தலையணையை உயர்த்தி வைத்து உறங்கவும்.
மிக முக்கியமாக மரபியல் வழியாக இந்த கண் மற்றும் முக வீக்கமானது ஏற்படுகிறது. இருந்தாலும் இதனை தடுக்க ட்டர்மல் ஃபில்லர்ஸ் முறையும் பிளாஸ்டிக் சர்ஜரி முறையும் கையாளப்படுகிறது.
காயம் அல்லது ஒவ்வாமை காரணமாக முகத்தில் வீக்கம் ஏற்படவில்லை, வேறு காரணமும் உங்களால் கண்டறிய முடியவில்லை எனில் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கேற்ற சிகிச்சையை பெற்று முக வீக்கத்தில் இருந்து விடுபடலாம்.