இலங்கையிலிருந்து பெருமளவில் வெளியேறும் மருத்துவப் பணியாளர்கள்! உள்நாட்டில் மருத்துவ சேவைகள் பாதிப்பு..

2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியானது, ஏற்கனவே கொவிட்-19 தொற்றுநோயின் சவால்களுடன் போராடிக்கொண்டிருந்த இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அரசியல் பிரச்சினைகள் ஆகியவை காரணமாக மருத்துவ சேவைகள் துறையும் கடும் போராட்டத்தைச் சந்தித்தது.
இந்த காலகட்டத்தில் நாட்டில் ஏற்பட்ட பணவீக்கம், சம்பளக் குறைப்பு, கட்டண உயர்வு மற்றும் பிற சிக்கன நடவடிக்கைகளால் சுகாதாரப் பணியாளர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக இலங்கையைச் சேர்ந்த மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகரித்தது. இதை யாரும் குறை சொல்வதற்கில்லை. ஆனால் இவ்வாறு பெருமளவில் மருத்துவப்பணியாளர்கள் வெளியேறியதால் உள்நாட்டில் மருத்துவ மற்றும் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இலங்கை சுகாதார அமைச்சரின் அறிக்கை!
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம், இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முறையான அனுமதியின்றி வெளிநாட்டு வேலைகளுக்காக இடம்பெயர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் பிளாக் லிஸ்டில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர்களின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த அறிக்கை இலங்கை சுகாதாரத் துறையில் உள்ள தொழிற்சங்கங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பைப் பெற்றது. மருத்துவ நிபுணர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் : “அமைச்சரின் அறிக்கைகள் இலங்கை மருத்துவ நிபுணர்களின் தொழில்முறை கண்ணியம் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளை கடுமையாக மீறுவதாக AMS கருதுகிறது.” என்று குறிப்பிட்டது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் (GMOA) அமைச்சரின் அறிக்கைகள் தொழிலாளர்களின் உரிமை மீறல் என குற்றம் சாட்டியது.
இந்நிலையில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தனது அறிக்கையில், “வெளிநாட்டு மருத்துவர்கள் இலங்கைக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கும் விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும்” என்றார்.
இதுபோன்ற அறிக்கைகள் மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் மேலும் சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில்தான், பிற நாடுகளுக்குச் செல்லும் சுகாதாரப் பணியாளர்களின் குறைகளை ஆராய, சுகாதார அமைச்சகம் சமீபத்தில் ஒரு குழுவை நியமித்தது.
இலங்கையில் இருந்து வெளியேறியோர் எத்தனை?!
2020 ஆண்டு வருடாந்திர ஹெல்த் அறிக்கையின்படி, இலங்கையின் மருத்துவத் துறையானது 150,273 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இதில் 2730 மருத்துவ நிபுணர்கள், 21,450 மருத்துவர்கள், 1564 பல் மருத்துவர்கள், 46,385 நர்சுகள், 8525 மருத்துவச் செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ நிபுணர்கள்.
இந்த மருத்துவப் பணியாளர்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, பொது சுகாதாரத்தில் இலங்கையின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்குப் பின்னால் முக்கிய காரணியாக உள்ளது. இது இலங்கையிலும் உலகிலும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதே காரணங்களுக்காக, சர்வதேச மருத்துவ மற்றும் சுகாதாரச் சந்தையில் அவர்களுக்கு அதிக தேவை உள்ளது. இதனால, வெளிநாட்டு வேலைகளுக்கான அவர்களின் இடம்பெயர்வு கடந்த சில தசாப்தங்களாக மெதுவாகவும் சீராகவும் நடந்து வருகிறது.
2012 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 1980 மற்றும் 2009 க்கு இடையில் நாட்டின் மருத்துவ நிபுணர்களில் 11 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, 2022 ஆம் ஆண்டில் ஆலோசகர்கள் உட்பட சுமார் 700 மருத்துவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்ததாக அண்மையில் தெரிவித்திருந்தார்.
GMOA வின் பேச்சாளர் சம்மில் விஜேசிங்க 125 ஆலோசகர்கள் உட்பட 477 மருத்துவர்கள் ஜனவரி மற்றும் ஆகஸ்ட் 2022 க்கு இடையில் வெளிநாட்டு வேலைகளுக்காக இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் சுகாதார முகாமைத்துவத்தில் நிபுணரான திலீப் டி சில்வா, 2022 இல் சுகாதார நிபுணர்களின் இடம்பெயர்வு அதிகரிப்பு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அதிவேகமானது என்று ஒப்புக்கொண்டார். டி சில்வாவின் கூற்றுப்படி, வருடாந்தம் சுமார் 280 முதுகலை பட்டதாரி பயிற்சியாளர்கள் தங்கள் சிறப்புப் பயிற்சியை நிறைவு செய்வதற்காக வெளிநாடு செல்கின்றனர். அவர்களில் சுமார் 250 பயிற்சியாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆலோசகர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை 2022 இல் 105 ஆகக் குறைந்தது, வெளிநாட்டிற்குச் சென்றவர்களில் பெரும்பாலோர் அங்கேயே உள்ளனர். சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், மருத்துவ நிபுணர்களின் சங்கத்தைச் சேர்ந்த அசோக குணரத்ன, தற்போதைய போக்கின் அடிப்படையில், இலங்கையில் 2024-25 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட ஆலோசகர் வெற்றிடங்களில் 50 சதவீதமே நிரப்பப்படும் என்று குறிப்பிட்டார்.
வெளிநாடு செல்லும் மருத்துவப் பணியாளர்களை கண்கானிக்க முடியாத நிலை!
மருத்துவப் பணியாளர்களின் வெளியேற்றம் குறித்த வரையறுக்கப்பட்ட தரவுகள் கிடைப்பதில் பிரச்சனைகள் உள்ளன.
வெளிநாட்டு பணிக்கென்று விண்ணப்பிக்கும் சுகாதாரப் பணியாளர்களின் பதிவேடுகளை சுகாதார அமைச்சகம் பராமரித்து வந்தாலும், பலர் குறுகிய கால விடுப்பு எடுக்கிறார்கள், ராஜினாமா செய்கிறார்கள் அல்லது இடம்பெயர்ந்து செல்லும் நோக்கத்துடன் தங்கள் பதவிகளை உதறிச் செல்கின்றனர்.
இதனால் உண்மையான எண்ணிக்கையைக் கண்காணிப்பது கடினம். சுகாதார அமைச்சில் கிடைக்கும் தரவுகளைப் பகிர்வது தொடர்பான சிக்கல்களும் உள்ளன.
பல புள்ளிவிவரங்கள் இலங்கையின் மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் இடம்பெயரும் எண்ணம் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன.
வெளிநாடுகளில் அதிகரிக்கும் இலங்கையரின் விண்ணப்பங்கள்!
கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆஸ்திரேலிய மருத்துவ கவுன்சில் (AMC) தொழில்முறை மற்றும் மொழியியல் மதிப்பீட்டு வாரியத் தேர்வு போன்ற சர்வதேச மருத்துவ-உரிமப் பரீட்சைகளுக்கு இலங்கை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
AMC இன் வருடாந்த அறிக்கைகளின் தரவுகளின் அடிப்படையில், AMC சர்வதேச போர்ட்ஃபோலியோக்களுக்கான இலங்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் மூன்று மடங்கு அதிகமாக அதிகரித்துள்ளது.
2020-21 காலகட்டத்தில் 222 ஆக இருந்து 2021-22 காலகட்டத்தில் 725 ஆக அதிகரித்துள்ளது. 2021-22 காலகட்டத்தில், உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், AMC போர்ட்ஃபோலியோக்களுக்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
படிப்பது இலங்கை மக்களின் பணத்தில், சேவை மட்டும் வெளிநாட்டுக்கா என்ற விமர்சனம்!
இத்தகைய விமர்சனம் ஏறக்குறைய எல்லா வளரும் நாடுகளைச் சேர்ந்த மருத்துவப்பணியாளர்களுக்கும் உள்ளது. அவர்களின் கல்வி மற்றும் பயிற்சியில் இலங்கை கணிசமான முதலீடுகளை செய்த பின்னர், மற்ற நாடுகளில் சேவை செய்ய முடிவெடுப்பதற்காக மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறார்கள்.
இருப்பினும், பிற நாடுகளுக்கு குடிபெயரும் மருத்துவப் பணியாளர்கள் தங்களுடைய நிலையான வேலையைக் காலி செய்ய வேண்டும், தங்கள் வீடுகள் மற்றும் குடும்பங்களை விட்டு வெகுதூரம் செல்ல வேண்டும். வேலைப் பாதுகாப்பின்மை, கலாச்சார மாற்றம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றால் புலம்பெயர்ந்த மருத்துவப் பணியாளர்கள் அதிகரித்த மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் மறுக்க இயலாது. வெளிநாட்டு வேலை என்பதும் ஒன்றும் மலர்ப்படுக்கை அல்லவே.
இரண்டு வருட ஒப்பந்தத்தில் சிங்கப்பூருக்குச் செல்லும் ஒரு நர்சிங் அதிகாரி கூறுகையில், “வெளிநாட்டில் வேலை செய்வதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லாமல் இருந்தது. கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருந்தது, அதுவே அந்த எண்ணத்தை தீவிரமாகச் சிந்திக்கத் தூண்டியது. இப்போது நான் பணிபுரியும் கிளினிக்குகளில் கடுமையான பற்றாக்குறை உள்ளது. சிங்கப்பூரில் எனது அனுபவத்தைப் பொறுத்து, எனது குழந்தைகளுடன் நிரந்தர இடம்பெயரலாம என்று ஆலோசித்து வருகிறேன்.” என்றார்.
உள்நாட்டு மருத்துவ சேவையை காக்கும் கட்டுபாடுகள் இலங்கைக்கு பொருந்தவில்லை!
உலக சுகாதார அமைப்பின் “சர்வதேச சுகாதாரப் பணியாளர் ஆட்சேர்ப்பு குறித்த நடைமுறைக் குறியீடு” ஏற்கனவே மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு மருத்துவப் பணியாளர்களை பணியில் அமர்த்துவதை திட்டவட்டமாக தடை செய்தாலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இத்தகைய ஆட்சேர்ப்பு இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான “WHO சுகாதார பணியாளர் ஆதரவு மற்றும் பாதுகாப்புப் பட்டியல்” இன் கீழ் இலங்கை சேர்க்கப்படாததால், மிக அழுத்தமான சுகாதார-தொழிலாளர் பிரச்சினைகளைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை இல்லை. (எடுத்துக்காட்டாக, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் இரண்டும் இந்த பட்டியலில் உள்ளன). ஆகையால், இலங்கையிலிருந்து சர்வதேச ஆட்சேர்ப்புகளுக்கு எந்த தடையும் இல்லை.
உள்நாட்டு ஆரோக்கியம் ஆட்டம் கண்டுள்ளது!
கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களை இழப்பது நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பு சேவை வழங்கலைப் பாதிக்கிறது. 2019 இல், பொருளாதார நெருக்கடிக்கு முன்னரும் கூட, மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், தாதிகள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருந்தாளுநர்களின் செறிவைக் கொண்டு கணக்கிடப்படும் இலங்கையின் சுகாதாரப் பணியாளர்கள் அடர்த்தி, உலகளாவிய வரம்பில் 70 சதவீதமாக மட்டுமே இருந்தது.
மருத்துவ அதிகாரிகளைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கையில் 1000க்கு 1.2 என்ற தேசிய மருத்துவர்-நோயாளி விகிதம் உள்ளது, இது 1000க்கு 1 என்ற WHO பரிந்துரைக்கு அருகில் இருந்தாலும், அவர்களின் உள்நாட்டு தேவை மாற்றும் பூர்த்தியில் நாடு குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளது.
உதாரணமாக, தலைநகர் கொழும்பு நகரானது நுவரெலியா, அம்பாறை மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களை விட நான்கு மடங்கு அதிகமான ஆலோசகர் மற்றும் நோயாளி விகிதத்தைக் கொண்டிருக்கிறது. மருத்துவப் பணியாளர்களின் இடம்பெயர்வின் தாக்கம் இந்தப் பகுதிகளில் மருத்துவ, சுகாதாரத் துறைகளால் கடுமையாக உணரப்படும்.
மருத்துவப் பணியாளர்கள் மட்டுமல்ல, மருத்துவக் கல்வியும் கேள்விக்குள்ளாகியுள்ளது!
மருத்துவப் பணியாளர்களின் இடம்பெயர்வினால் பாதிக்கப்படுவது நோயாளிகள் மட்டுமல்ல. இதனால் மருத்துவக் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தின் குழந்தைகள் பிரிவு அதன் கல்வி ஊழியர்களின் இடம்பெயர்வு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது ஒரு சரியான உதாரணம்.
பல்வேறு மருத்துவ பீடங்களில் முன்-மருத்துவ, பாரா-கிளினிக்கல் மற்றும் மருத்துவ துறைகளில் இருந்து அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் மூத்த விரிவுரையாளர்களின் கணிசமான இடம்பெயர்வு உள்ளது.
இந்த இழப்புகள் இலங்கையில் உருவாகும் மருத்துவ பட்டதாரிகளின் தரத்தைக் கடுமையாக பாதிக்கப்படும்.
தீர்வுதான் என்ன?
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் சுகாதாரத் துறை தொடர்ச்சியான பட்ஜெட் வெட்டுக்களை எதிர்கொண்ட போதிலும், பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் நலனில் அக்கறை கொண்டு எது நாட்டின் தலையாய தேவை என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்ய வேண்டும்.
மருத்துவப் பணியாளர்கள் போதிய வருமானம் மற்றும் பணிப்பாதுகாப்பு காரணமாக இடம்பெயர்வதை குற்றம் கூற இயலாது. அவர்களுக்குத் தேவையானவற்றை உள்நாட்டில் உருவாக்கித் தருவதன் மூலமாக மட்டுமே நாட்டின் உயிர்நாடியான மருத்துவத் துறையை உயிர்ப்போடு வைத்திருக்க இயலும்.
வேறு எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்ய இயலும். மருத்துவர்களையும், செவிலியர்களையும் வேறு நாடுகளில் இருந்து பெற இயலாது. அது உண்மையில் செலவுகளை பலமடங்கு அதிகரிப்பதில்தான் போய் முடியும்.