உடற்பயிற்சி செய்தால் புற்றுநோய் பாதிப்பை தவிர்க்கலாமா?

செய்தி சுருக்கம்:
தினமும் நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் தீவிர உடலுழைப்பு செய்வது புற்றுநோய் பாதிக்கும் அபாயத்தை குறைக்கும் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. உடலுழைப்பில் ஈடுபடாதோருக்கும் உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு செய்வோருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை ஆய்வு செய்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
உடற்பயிற்சி செய்தல் மற்றும் உடலுழைப்பில் ஈடுபடுதலுக்கும் புற்றுநோய் பாதிப்புக்கும் இடையில் காணப்படும் தொடர்பை குறித்து நீண்டகாலமாக ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் குறித்த மருத்துவ சுகாதார பதிவேடுகளை ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் ஆய்வு செய்து இந்த முடிவை அறிவித்துள்ளனர். அதன்படி தீவிர உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பில் குறைந்த அளவேனும் ஈடுபடுகிறவர்களுக்கு குறிப்பிட்ட வகை புற்றுநோய்கள் தாக்கும் வாய்ப்பு 32 சதவீதம் வரை குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பின்னணி:
உடற்பயிற்சி செய்யாத பெரியவர்களுக்கு மார்பகம், பெருங்குடல், வயிறு, கருப்பை, உணவுக்குழல், சிறுநீர்ப் பை ஆகிய உறுப்புகளை புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குறுகிய காலத்தில் தீவிரமாக செய்யும் உடற்பயிற்சி மற்றும் உடலுழைப்பு இந்த ஆபத்தை தவிர்க்க உதவும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சராசரியாக 62 வயதுள்ளவர்களில் உடற்பயிற்சி செய்யாத 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் 6 முதல் 7 ஆண்டு காலத்திற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற்றுநோய் பாதிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். அவர்களுள் ஆயிரம் பேருக்கு உடற்பயிற்சியால் தவிர்க்கக்கூடிய வகையைச் சேர்ந்த புற்றுநோய் பாதித்திருந்ததாகவும் கூறுப்படுகிறது.
வில்பா
வில்பா எனப்படும் விகரஸ் இண்டர்மிட்டண்ட் லைஃப்ஸ்டைல் பிசிகல் ஆக்டிவிட்டி என்ற பதத்தை வாழ்வியல் உடல் செயல்பாடுகளில் குறுகிய இடைவெளி விட்டு தீவிரமாக ஈடுபடுதல் என்று புரிந்துகொள்ளலாம். அதாவது பேருந்தை பிடிப்பதற்கு ஓடுதல், வீட்டுவேலைகள் செய்தல், முகடு போன்ற உயரமான இடங்களுக்கு ஏறுதல் போன்ற செயல்பாடுகள் இதில் அடங்கும். இயல்பை விட வேகமாக நடத்தல், தோட்டத்தில் குழி தோண்டுதல், பொருள்களை சுமந்து செல்லுதல் போன்றவற்றை முழுவதும் வியர்வை வெளிவரும் அளவுக்கு இல்லாமல், சற்றே மூச்சுவிட சிரமம் ஏற்படும் வரைக்கும் தீவிரமாக செய்யலாம். குழந்தைகளோடு விளையாடுவதும் இவ்வகையிலேயே அடங்கும்.
குறுகிய இடைவெளியில் தீவிரமாக இப்பயிற்சிகளை வீட்டிலேயே செய்ய முடியும் என்பதால் இதற்கென பிரத்தியேகமாக உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இவை சாதாரண வேலைகள் என்பதால் அன்றாட பணிகளுள் இவற்றையும் பொருத்திக்கொள்ளலாம். தீவிரமாக இரண்டு நிமிடம் செய்து இடைவெளி விட்டு மீண்டும் செய்யலாம்.
தினமும் குறைந்தது மூன்றரை நிமிடங்கள் தீவிர பயிற்சிகளை செய்வது புற்றுநோய் பாதிக்கும் அபாயத்தை 18 சதவீதமும் 4.5 நிமிடங்கள் பயிற்சியானது நோய் பாதிப்பை 32 சதவீதம் குறைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
உடலுழைப்பால் தவிர்க்கக்கூடிய புற்றுநோய்கள்
சிறுநீர்ப் பை புற்றுநோய்: 2014ம் ஆண்டு 10 லட்சம் பேரிடம் செய்யப்பட்ட ஆய்வில் உடலுழைப்பு செய்வோருக்கு சிறுநீர்ப் பை புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 15 சதவீதமும், ஓய்வு நேரத்தில் பயிற்சி செய்வோருக்கு நோய் தாக்கும் வாய்ப்பு 13 சதவீதமும் குறைவு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மார்பக புற்றுநோய்: துடிப்பாக உடலுழைப்பு செய்யும் பெண்களுக்கு, உடலுழைப்பில் ஈடுபடாத பெண்களைக் காட்டிலும் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் பருவத்திற்கு முன்னரும் பின்னரும் உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு 12 முதல் 21 சதவீதம் வரை குறைவாகும்.
பெருங்குடல் புற்றுநோய்: 2016ம் ஆண்டு 126 ஆய்வுகளின் முடிவை ஆராய்ந்ததில் உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பில் ஈடுபடாதோரைக் காட்டிலும் உடற்பயிற்சி செய்வோரை பெருங்குடல் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 19 சதவீதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டது.
கருப்பை புற்றுநோய்: கருப்பையின் சுவரில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு குறித்த ஆய்வில் அதிக அளவு உடலுழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கு இப்புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமான உடல் பருமன் குறைவதோடு, நோய் பாதிக்கும் வாய்ப்பு 20 சதவீதம் குறைவதாகவும் தெரிய வந்துள்ளது.
உணவுக்குழல் புற்றுநோய்: 2014ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுப்பு ஆய்வில் உடற்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு உணவுக்குழல் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பானது 21 சதவீதம் குறைவு என்று முடிவு தெரிந்தது.
சிறுநீரக புற்றுநோய்: 2013ம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வின்படி ஓய்வு நேரத்தில் உடற்பயிற்சி செய்வோருக்கும் சிறுநீரக புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு 23 சதவீதம் குறைவு என்று காணப்பட்டது.
வயிற்று புற்றுநோய்: சுறுசுறுப்பாக உழைப்பவர்களுக்கு மந்தமாக இருப்பவர்களைக் காட்டிலும் நோய் பாதிக்கும் வாய்ப்பு 19 சதவீதம் குறைவு என்று 2016ம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வு கூறுகிறது.
பெரியவர்கள் மட்டுமன்றி சிறுவர்களும் தொலைக்காட்சி பார்த்தல், வீடியோ கேம் விளையாடுதல், கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துதல் ஆகிய நேரத்தை குறைத்து, விளையாட்டுகள் மற்றும் உடல் செயல்திறனை பாதுகாக்கும் வேலைகளில் ஈடுபடுவது புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் என்றும் ஆலோசனை கூறப்படுகிறது.
உடற்பயிற்சி எவ்வாறு பாதுகாக்கிறது?
உடற்பயிற்சியானது உடலில் பல உயிரியல்ரீதியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்வோருக்கு ஈஸ்ட்ரோஜன் போன்ற பாலுணர்வு சார்ந்த ஹார்மோன்கள் மற்றும் மார்பகம், பெருங்குடல் இவற்றில் புற்றுநோய் வளர்வதற்கு காரணமாகும் வளர்ச்சிக்கான காரணிகளின் அளவையும் குறைக்கிறது.
சில புற்றுநோய்களுக்கு இன்சுலினுடன் தொடர்பு இருக்கிறது. இன்சுலினின் அளவு அதிகமாகாமல் உடற்பயிற்சி கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. இன்ஃப்ளமேசன் என்னும் அழற்சியை குறைக்கிறது. நோய் தடுப்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. உணவு செரிமான குழலில் காணப்படும் செரிமான அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தையே மாற்றியமைக்கிறது. செரிமான மண்டலத்தில் உணவு செல்லும் வேகத்தை தாமதப்படுத்தி, செரிமான குழாயை பாதுகாக்கிறது. பலவித புற்றுநோய்களுக்கு உடல் பருமனுடன் தொடர்பு உள்ளது. தீவிர உடலுழைப்பில் ஈடுபட்டால் உடல் பருமனாவதை தடுக்கலாம்.
இந்த ஆய்வு கணக்கீட்டை சார்ந்தது என்றும், புற்றுநோய் ஏற்படும் காரணத்தையும் அதன் தாக்கத்தையும் நேரடியாக இது நேரடியாக வெளிப்படுத்துவதாக அர்த்தமாகாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.