ஐரோப்பாவில் 61,000 பெயரைக் கொண்ட கோடை வெப்பம்! உலக வெப்பமயமாதலின் கோர முகம்!!

செய்தி சுருக்கம்:
ஐரோப்பாவில் கடந்த கோடைக் காலத்தில் வெப்பத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த கோடையில் 60,000 அதிகமான மக்கள் வெப்பத்தால் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
2022 மே 30 முதல் செப்டம்பர் 4 ரை ஐரோப்பாவில் வெப்பம் தொடர்பான காரணத்தால் 61,672 பேர் இறந்துள்ளனர். இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.
வெப்பம் தொடர்பான இறப்புகளில் நேரடியாக வெப்பத்தாக்குதலால் ‘ ஹிட் ஸ்ட்ரோக்’ மூலம் இறப்பவர்கள் மிகவும் குறைவு. மாறாக அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களின் மீது இந்த வெப்பம் பெரும் ஆதிக்கத்தை செலுத்துகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு இறப்பு சம்பவிக்கிறது.
2022 ஜூலை 18 முதல் 24 தேதி வரை ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை வீசியது. அதில் 11,637 பேர் இறந்தனர். நீரிழிவு நோய் மற்றும் இதய பாதிப்புகளால் நோயற்றவர்கள் இத்தகைய வெப்ப அலையில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
இத்தகைய நோயாளிகளால் சகஜமாக சுவாசிக்க முடியாது. இதயம் மெல்ல மெல்ல செயலிழக்கத் தொடங்கும். கொஞ்சம் கொஞ்சமாக அந்த நோயாளி இறக்க தொடங்குவார்.
பின்னணி:
பொதுவாக பூமியானது 1.1 செல்சியஸ் அதிகமாக வெப்பமாகியுள்ளது. ஆனால் ஐரோப்பாவில் வெப்பநிலை உலக சராசரியை விட இரண்டு மடங்கு வேகமாக உயர்ந்துள்ளது. மேலும் மேலும் பூமியை சூடாக்கும் வாயுக்களை வெளியிட்டவாறு இருந்தால் இந்த வெப்ப அலை பாதிப்பு மிக மோசமானதாக மாறக்கூடும்.
பெர்ன் பல்கலைக்கழகத்தின் காலநிலை மற்றும் சுகாதார ஆராய்ச்சி குழுவின் தலைவரான அனா மரியா கூறுகையில் உண்மையான இறப்பு எண்ணிக்கை ஆய்வு முடிவை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பா முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகள் ஆண்களை விட பெண்கள், குறிப்பாக வயதான பெண்கள் அதிக அளவில் இறப்பதை காட்டுகின்றன.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆய்வு நிறுவனம் கூறுகையில், இயற்கையை அழிப்பதால் ஏற்பட்ட மாசு மற்றும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் விளைவுகள் இந்த இறப்பு எண்ணிக்கையை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
செஞ்சிலுவை சங்கத்தின் காலநிலை மையத்தின் செயல் இயக்குனர் ஜூலி அருகி ஒரு கூறுகையில் அண்டை வீட்டாரையும் அருகில் தனியாக வசிப்பவர்களையும் கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள இரண்டாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் ஒன்றிணைந்து புவி வெப்பமடைதலைத் தடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறிவிட்டதாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர்.
உண்மையில் இந்த புவி வெப்பமடைதல் பிரச்சனையில் நாம் உலக மக்கள் அனைவர் மீதும் புகார் அளிக்க வேண்டியதுதான். பொறுப்பற்ற முறையில் எரிபொருளை பயன்படுத்துதல், அதிகமான பிளாஸ்டிக் குப்பைகளை பொதுவெளியில் வீசி எறிதல், கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பற்றி எந்த விதமான அறிவும் அற்று இருத்தல் போன்றவையே இன்றைக்கு தலையாய குற்றச்சாட்டுகளாகக் கருதப்பட வேண்டும்.