விவேக் ராமசாமி என்னுடைய இசையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்: ராப் ஸ்டார் எமினெம்

“அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் தலைவர் வேட்பாளர் விவேக் ராமசாமி தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எனது இசையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்”, என்று ராப் சூப்பர்ஸ்டார் எமினெம் கோரியுள்ளார்.
இசை நிறுவனமான பிஎம்ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் எமினெம்மின் இசையைப் பயன்படுத்துவதற்கான உரிமத்தை இனி விவேக் ராமசாமியின் பிரச்சாரத்திற்கு வழங்க மாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து விவேக் ராமசாமி, மார்ஷல் மாதெர்ஸ் III என்ற இயற்பெயரைக் கொண்ட எமினெம்மின் கோரிக்கைக்கு மதிப்பளித்து தனது பிரச்சார நடவடிக்கைகளில் அவரது இசையை இசைப்பதை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சாரத்துக்குப் பிரபல இசைக் கலைஞர்களின் பாடல்களைப் பயன்படுத்துவதும் பின்னர் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் அல்லது இசை நிறுவனங்களிடம் இருந்து பாடல் தேர்வுகள் தொடர்பாகக் கடிதங்களைப் பெறுவதும் பின்னர் அந்தப் பழக்கத்தைக் கைவிடுவதும் அமெரிக்க அரசியலில் ஒரு பாரம்பரியமாகிவிட்டது. 1984 ஆம் ஆண்டில், பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் அப்போதைய ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைத் தனது பாடலான “பார்ன் இன் தி யுஎஸ்ஏ”வைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தத் திட்டமிட்டதற்காக எதிர்த்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இசைக் கலைஞர்களான அடீல், ஏரோஸ்மித், ரோலிங் ஸ்டோன்ஸ் மற்றும் ரெம் ஆகியோரால் அவர்களின் இசையை அவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தியபோது கண்டிக்கப்பட்டார். நீல் யங் “ராக்கிங் இன் தி ஃப்ரீ வேர்ல்ட்” மற்றும் “டெவில்ஸ் சைட்வாக்” ஆகியவற்றைப் பயன்படுத்தியதற்காக டிரம்ப் மீது வழக்குத் தொடர்ந்தார். இருப்பினும், சட்டப்பூர்வமாக, அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு எப்போதும் கலைஞர்களிடமிருந்து இதற்கான நேரடி அனுமதி தேவையில்லை. அவர்களின் பிரச்சாரங்கள் பிஎம்ஐ மற்றும் ஆச்கப் போன்ற இசை உரிமை அமைப்புகளிடமிருந்து உரிமப் பொதிகளை வாங்கலாம், இது அரசியல் பேரணிகளுக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான பாடல்களுக்கு சட்டப்பூர்வ அணுகலை வழங்குகிறது. இருப்பினும், அந்தப் பட்டியலில் இருந்து தங்கள் இசையை நீக்க கலைஞர்களுக்கு உரிமை உண்டு. ரோலிங் ஸ்டோன்ஸ் அவ்வாறுதான் செய்திருக்கிறது, தற்போது விவேக் ராமசாமியின் லூஸ் யுவர்செல்ஃப் இசை பற்றிய வெளிப்படையான முன்னறிவிப்பை எதிர்த்த எமினெம் தனது இசையைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துவரும் இந்த விவேக் ராமசாமி குறித்து சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், “விவேக் ராமசாமி எனக்குப் பிடித்தமானவர். அவரைப் பற்றிச் சொல்ல நல்ல விஷயங்களே இருக்கின்றன. சமீபத்திய அதிபர் வேட்பாளர் தேர்தலில் அவர் சிறப்பாகச் செயல்பட்டார். என்னைப் பற்றியும், என் நிர்வாகம் குறித்தும் அவர் நல்ல விஷயங்களை மட்டும் சொல்லக்கூடியவர். அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார்” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். சமீபத்தில் விவேக் ராமசாமியுடனான நேர்காணல் ஒன்றை, அமெரிக்க ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சன், எக்ஸ் தளத்தில் பதிவிட்டதையடுத்து, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், விவேக் ராமசாமியை ‘மிக நம்பிக்கைக்குரிய வேட்பாளர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அது சரி யார் இந்த விவேக் ராமசாமி? வாருங்கள் விரிவாக அறிந்துகொள்வோம்.
அமெரிக்க அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை, முதலில் அங்குள்ள இரண்டு கட்சிகளும் அதிபர் வேட்பாளருக்குத் தனித்தனியே தேர்தல் நடத்தும். இதில் வெற்றிபெறும் நபர்களே அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னிறுத்தப்படுவர். அந்த வகையில் இப்போது ட்ரம்ப்புக்கு நிகராக முன்னிறுத்தப்படும் இந்த விவேக் ராமசாமி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் கேரள மாநிலம், பாலக்காட்டுக்கு அருகிலுள்ள வடக்கஞ்சேரியைப் பூர்வீகமாகக்கொண்டவர்கள். கேரளாவில் இன்ஜினீயரிங் படிப்பை முடித்த விவேக்கின் தந்தை வி.ஜி.ராமசாமி, பணி நிமித்தமாக அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். விவேக் தனது இளங்கலை பயோலஜி பட்டப்படிப்பை பிரசித்திபெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். அதன் பிறகு, 2010-2013 ஆகிய காலகட்டங்களில், யேல் சட்டப் பள்ளியில் சட்டப் படிப்பையும் படித்து முடித்தார். சட்டப் படிப்புக்குப் பிறகு டேவிஸ் போல்க், வார்டுவெல் என்ற சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர், 2014-ம் ஆண்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் மருந்து வளர்ச்சியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். 2.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமாக நிதியைத் திரட்டியிருக்கும் இந்த நிறுவனத்தின்கீழ் பல துணை நிறுவனங்கள் செயல்படுகின்றன. 2015-ம் ஆண்டு விவேக் ராமசாமியின் மருந்து மேம்பாட்டுப் பங்களிப்பு பற்றி புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழ் அட்டைப்படத்துடன் கட்டுரை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் மிகப்பெரிய பயோடெக் தொழிலதிபர் எனும் நிலைக்கு உயர்ந்தார். அமெரிக்க மருத்துவத்துறைகளில் முன்னணித் தொழிலதிபராக வலம் வரும் விவேக் ராமசாமியின் மொத்தச் சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. ‘பழைமைவாதி’ என்று தன்னைத் தானே விவரிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமிக்கு, 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போதுதான் அரசியல் மீதான ஆர்வம் தொற்றிக்கொண்டுள்ளது. அமெரிக்க அரசியலில் இவருடைய ஆட்டம் எப்படி அமையப்போகிறது என அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் அவர் மீதான இந்த இசைச் சர்ச்சை மிகுந்த கவனம் பெற்றுள்ளது.