fbpx
LOADING

Type to search

உடல் நலம் உலகம்

வறுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி புத்தக வாசிப்பினால் பாதுகாக்கப்படுமா?

சிறுவயது வறுமையால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபடும் எனவும் அவர்கள் கல்வியில் பின்தங்குவதற்கான முக்கியமான மற்றும் ஆபத்தான காரணியாக அது அமையும் எனவும் வெளிவந்திருக்கும் புதிய ஆய்வு முடிவுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

“கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை”, என்பாள் ஔவைப்பாட்டி. உண்மைதான்! சிறுவயதில் வறுமையில் வாடுவதைப் போன்ற ஒரு கொடுமை உலகில் வேறெதுவும் இல்லை. பசி, பிணி, பகை ஆகிய மூன்றும் இல்லாத நாடே நல்ல நாடு என்பார் வள்ளுவர். ஆனால் இவை மூன்றும் இல்லாத நாடுதான் ஏது? ‘உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால் அவரது மனித உரிமை மீறப்படுகிறது’ என்கிறார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோசப் ரெசின்கி. சிறு வயது முதலே வறுமைக்கு எதிராகப் போராடிய இவருடைய முயற்சியால்தான் உலக வறுமை ஒழிப்பு தினம் கடந்த 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி உருவாக்கப்பட்டது. வறுமை ஒழிப்பு தினம் உருவாக்கப்பட்டது சரிதான். ஆனால் வறுமை ஒழிந்ததா? இல்லையே. உலகில் 78 கோடி பேர் சராசரி வறுமைக்கோட்டுக்கும் கீழ் வாழ்கிறார்கள். அதிலும் தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில்தான் வறுமையில் வாழ்பவர்கள் அதிகம் என்று கூறப்படுகின்றது.

யுனிசெஃப் மதிப்பீட்டின்படி 356 மில்லியன் குழந்தைகள் மிகவும் வறுமையில் வாழ்கிறார்களாம். சுமார் ஒரு பில்லியன் குழந்தைகள் அதாவது உலக அளவில் இரண்டு குழந்தைகளில் ஒருவர் குறைந்தபட்ச வீடு, வழக்கமான உணவு மற்றும் சுத்தமான தண்ணீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கொண்டிருக்கவில்லையாம். உலகத்தை டிஜிட்டல் மயமாக்கத் தெரிந்த நமக்கு வறுமையை மட்டும் விரட்டத் தெரியவில்லை. அதுவும் நம்மை விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது.

உங்களுக்குத் தெரியுமா? கடுமையான வறுமையில் குழந்தைகள் வளர்வது அவர்களது மூளை வளர்ச்சியை மிக மோசமாகப் பாதிக்கும் எனவும், கல்வி கற்பதற்கு அந்த வறுமையே பாதகமாக அமையும் எனவும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் வறுமையில் வாடும் குழந்தைகளின் மூளையின் முன்பகுதி மற்றும் டெம்போரல் லோப்களின் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படுவதாகவும் அவை தெரிவிக்கின்றன.

கார்டெக்ஸ் எனப்படும் மூளையின் வெளிப்புற அடுக்கு பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையைக் கொண்ட குழந்தைகளுக்கு ஏழைக் குழந்தைகளை விடத் தடிமனாக உள்ளது என்று அந்த முடிவுகள் கூறுவது மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

வாஷிங்டன் யூனிவர்சிட்டி ஸ்கூல் ஆப் மெடிசின் நடத்திய ஆய்வின்படி வறுமையில் வளரும் குழந்தையின் மூளையின் வயரிங் பாதிக்கப்படலாம் எனத் தெரியவருகிறது. அவர்களின் மூளையில் நீர் மூலக்கூறுகள் குறைவான திசை இயக்கத்தைக் கொண்டுள்ளன எனவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது,

மேலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் செல்வத்திற்கும் அறிவுக்கும் இடையிலான தொடர்பு அதிகமாக இருப்பதாகவும் அவர்களது குடும்பத்தில் இருக்கும் தாய்மார்களுக்கு மாதம்தோறும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டால் குழந்தைகளின் மூளை ஆரோக்கியம் மேம்படும் எனவும் அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

வறுமை மூளையைப் பாதிக்கிறது என்பதற்குக் கூறப்படும் முக்கிய காரணிகள் எவையென்றால் மோசமான ஊட்டச்சத்தும் நிதிச் சிக்கல்களுமே. தவிர, பாதுகாப்பான இடம், விளையாடுவதற்கான வசதிகள், கணினிகள் மற்றும் பிற கல்வி சாதனங்களை அணுகுதல் ஆகியவற்றில் ஏற்படும் குறைகளும் இதற்குக் காரணங்களாக அமைகின்றன.

ஆக, அடிப்படை அறிவாற்றல் திறன்களை வறுமை மிகவும் பாதிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள ஒரு தாய்க்குப் பிறக்கும் குழந்தையானது குறைந்த அறிவாற்றல் திறன் கொண்டதாகவே இருக்கும் மற்றும்  அது முதிர் வயது வரை நீடிக்கும் என்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் அறிக்கையின்படி வறுமை ஒரு குடும்பத்தை உடனடியான தேவைகள் மற்றும் அச்சுறுத்தல்களை நோக்கியே பயணிக்க வைக்கிறது எனவும் அவர்கள் எதிர்காலத்தை விட நிகழ்காலத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எனவும் எந்தவிதமான இக்கட்டான சூழ்நிலைகளுக்கும் தங்களை உட்படுத்திக் கொள்வதை வெறுக்கிறார்கள் எனவும் தெரிய வருகிறது. மேலும் ஏழைக் குழந்தைகள் போதிய பொருளாதார வசதியின்மையால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் எனவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த அக்குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைச் சமாளிக்கக் கூடிய வழிமுறைகள் குறைவாக இருப்பதாகவும், அவர்கள் தன்னம்பிக்கை இழந்தவர்களாகக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

 வறுமையின் இந்த எதிர்மறையான விளைவுகளுக்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என ஆராய்ச்சி செய்தபோது கிடைத்த முடிவுகள் வேடிக்கையாகவும் வியப்பாகவும் உள்ளன. குழந்தைப் பருவத்தில் புத்தகங்கள் வாசிப்பதில் மகிழ்ச்சி கொள்ளும் பிள்ளைகளுக்குச் சிறந்த அறிவாற்றலும், மன ஆரோக்கியமும், கல்வி பயிலும் திறனும் கிடைப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

மேலும் வாசித்தல் பழக்கம் அவர்களின் மதிப்பெண்களுடன் நேரடித் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன. சமூகப் பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் வாசிப்பதில் இன்பம் காணும் குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்களாம்.

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வாசிப்புப் பழக்கமானது வறுமையின் விளைவாக மூளையில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்ப்பதற்கு மிக முக்கியமான காரணியாக இருக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுவதனால், பெற்றோர்களே! பொருளாதாரப் பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தாலும் உங்கள் பிள்ளைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுங்கள். வறுமை குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களைக் கொள்ளையடிக்காமல் இருக்க அவர்களிடையே மகிழ்ச்சிகரமான வாசிப்புத்திறனை வளர்த்துவிடுங்கள்.

தொடர்புடைய பதிவுகள் :

புதிய மேப் விவகாரம், சீனாவிற்கு ஏன் இந்த வேலை?
உலகில் முதன்முறையாகப் பெண்ணின் மூளைக்குள் மலைப்பாம்பின் ஒட்டுண்ணி உயிருடன் கண்டுபிடிப்பு
உலகப்போரில் வீசிய வெடிகுண்டுகள், தோண்டத் தோண்ட அச்சுறுத்தல்கள்!
வர்த்தகம் மற்றும் பொருளாதார அளவுருக்களில் இந்தியா சீனாவை விட 16.5 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது: திடுக்க...
வழுக்கை விழுந்த ஆண்கள் ஆண்மை மிக்கவர்களா? - அமெரிக்க மருத்துவர் முடி உதிர்தலுக்கும் செக்ஸ் ஆசைக்கும்...
தினசரி இந்த மூன்று உடற்பயிற்சிகளை பின்பற்றினால் போதும் - படுக்கையில் ஆண்கள் எளிதில் சாதிக்கலாம். உறு...
அதிகச் சம்பளம் வாங்குபவர்கள் புத்திசாலிகளாக இருப்பதில்லையா? ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?
அதிகம் புரோட்டீன் வேணுமா? பிக்கி சோய் சாப்பிடலாம்
எல்லோரையும் அனுமதிக்க முடியாது! பிரிக்ஸ் (BRICS) நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினராகும் விதிகளை கடுமைய...
இந்தியாவின் ரஷ்யாவில் இருந்தான எண்ணெய் இறக்குமதி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *