இ-சிகரெட் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு 30 நாட்களில் கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்படும்! எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்!

இ-சிகரெட்டைப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு முப்பதே நாட்களில் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆன்லைன் ஆய்வுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற நான்கு வருடத் தரவுகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவை அறிவித்துள்ளார்கள். இந்த ஆய்வு ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் விரிவான புற்றுநோய் மையம் மற்றும் தெற்கு கலிபோர்னியா ஸ்கூல் ஆப் மெடிசின் ஆகியவற்றிலுள்ள புகையிலை ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்களால் நிகழ்த்தப்பட்டது. இதில் இளைஞர்களின் இ-சிகரெட் பயன்பாடு அவர்களுடைய சுவாசப் பிரச்சினைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு தொடங்கி நிகழ்த்தப்பட்ட இந்த ஆன்லைன் ஆய்வில், தெற்கு கலிபோர்னியாவின் சராசரியாக 17.3 வயதுடைய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆராய்ச்சியாளர்களால் கண்காணிக்கப்பட்டு, அவர்களது இ-சிகரெட் பயன்பாடு, கஞ்சா பயன்பாடு மற்றும் சுவாசப் பிரச்சினைக்கான அறிகுறிகள் ஆகிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் 23 சதவீதம் பேர் ஆஸ்துமா பற்றிய அவர்களது வரலாற்றைக் குறிப்பிட்டிருந்தார்கள். அதன்பின்னர் 2015 , 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டும் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றன. இதில் குறைந்தபட்சம் 30 நாட்கள் தொடர்ந்து ஒரே இ-சிகரெட் தயாரிப்பைப் பயன்படுத்தியவர்கள் 81 சதவீதம் பேர் வீஸ் எனப்படும் சுவாசப் பிரச்சினை அறிகுறியைக் கொண்டிருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் 78 சதவீதமும் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி ஏற்படும் அபாயம் 50 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. இவை மிக முக்கியமான நுரையீரல் தொற்றுகள் மற்றும் இவை நெஞ்செரிச்சலையும் வீக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியவை. அதேவேளை, இளைஞர்களிடையே இ-சிகரெட் மற்றும் கஞ்சா பயன்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் கட்டுப்படுத்தியபோது அவற்றின் பயன்பாட்டுக்கும் சுவாசப் பிரச்சினைகளுக்குமுடனான தொடர்பு குறைந்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது.
இ-சிகரெட் என்பது எலக்ட்ரானிக் நிக்கோட்டின் டெலிவரி சிஸ்டம்ஸ் எனப்படுகிறது. இந்த வகை சிகரெட்டுகளில் புகையிலைக்குப் பதிலாக ஆவியாகும் தன்மையுடைய ஒரு திரவக் கரைசலின் வேதிப் பொருள்கள் மற்றும் நிக்கோட்டின், புரோப்பலின், கிளைக்கால் உள்ளிட்ட மூலப்பொருட்கள் உள்ளன. இது பேனா, குழல், சிகரெட், பென்டிரைவ் போன்ற வடிவங்களில் சந்தையில் கிடைக்கும். ஆன்லைனிலும் இவ்வகையான சிகரெட்டுகள் கிடைக்கப்பெறுகின்றன. பேனா போல் உள்ள இ-சிகரெட்டில் பேட்டரி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இ-சிகரெட்டை வாயில் வைத்து ஒருவர் உள்ளே இழுக்கும்போது அதிலுள்ள கரைசல் ஆவியாக மாறி புகை வெளிவரும். அப்போது அதைப் பயன்படுத்துபவர் நிக்கோடினை உள்ளே முகர்வார். நிக்கோட்டின் புகையை உள்ளிழுத்து வெளிவிடும்போது புகைப்பிடிக்கும் போது கிடைக்கும் அதே உணர்வைப் பெறுவார்கள் அதைப் பயன்படுத்துபவர்கள். இந்த நிலை வேப்பிங்என்று அழைக்கப்படுகிறது. இ-சிகரெட் அதிக வலுவாக இருக்கும் பட்சத்தில் நிக்கோட்டின் வேகமாக உடம்பிற்குள் செல்லும். அது உடலுக்கு மிகவும் ஆபத்தானதாகும். இவற்றில் கலந்திருக்கும் வேதிப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இ-சிகரெட் பயன்படுத்துபவர்களில் 61 சதவீதம் பேர் 15-லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பாக இந்திய மக்கள் தொகையில் இருபத்தேழு சதவீதம் மக்கள் புகையிலையை ஏதோ ஒரு வடிவில் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. உலக அளவில் புகையிலையைப் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாம் இடத்திலிருப்பது வேதனைக்குரிய விஷயம்.
இந்த இ-சிகரட்டின் பிறப்பிடம் எது தெரியுமா? சீனாதான். ஹான் லீ என்னும் சீனர்தான் 2003 ஆம் ஆண்டு இவ்வகையான சிகரெட்டுகளை முதன்முதலில் கண்டுபிடித்தார். கடந்த 2004ஆம் ஆண்டில் சீனச் சந்தைகளில் இ-சிகரெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பின்னர் இதற்குக் கிடைத்த வரவேற்பால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. மற்ற நாடுகளும் தயாரித்த போதும் சீனாவே இன்றும் இ-சிகரெட் விற்பனையில் முன்னணியில் உள்ளது. மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டே இ-சிகரெட் இந்தியாவில் விற்பனையாகிறது. சிகரெட்டின் ஆபத்து குறித்து 2014ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் ஆய்வறிக்கையை அளித்து உலக நாடுகளை எச்சரித்தது. அதில் உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பது என்ன தெரியுமா? இ-சிகரெட்டைப் பயன்படுத்துபவர்களை விட அவற்றைப் பயன்படுத்தாதவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் அதாவது சாதாரணப் பொதுமக்களே பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறியிருப்பதுதான் அனைத்து நாடுகளையும் திடுக்கிட வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இ-சிகரெட்டுக்குத் தடை விதித்தன.
இ-சிகரெட்டைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்குத் தலைவலி, தொண்டை எரிச்சல், நுரையீரலில் புண்கள், வீக்கம், இருமல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும் என்றும் இவ்வகையான சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் பேட்டரி சூடாகிச் சில சமயங்களில் வெடிக்கவும் வாய்ப்பு உண்டு என்றும் கூறப்படுகின்றது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, இந்திய மக்கள் தொகையில் சுமார் 27 சதவீதம் பேர் புகையிலையை ஏதோ ஒரு வகையில் பயன்படுத்துகின்றனர். அதோடு, புகையிலைப் பயன்பாட்டால் இந்தியாவில் ஆண்டுக்கு 12.4 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். இந்தியாவின் புகையிலைச் சந்தையானது உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று என்பதால் உலக நாடுகளின் கவனம் இந்தியச் சந்தையை நோக்கித் திரும்புவதில் ஆச்சரயமில்லைதான். எனினும், இ-சிகரெட் விளம்பரங்களை முழுமையாகத் தடை செய்வதோடு, அதன் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும் இந்தியாவில் இளைஞர்கள் இ-சிகரெட்டை அதிகம் பயன்படுத்தி வருவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக மிக அவசியம் என்று அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.