ஹரியானா மாநிலத்தில் வெகுவாக குறைந்து வரும் பெண்களின் பிறப்பு விகிதம் – 1000 ஆண்களுக்கு 900 த்திற்கும் குறைவான பெண்களே உள்ளனர்.


செய்தி சுருக்கம்:
சமீபத்தில் வெளியிடப்பட்ட நிதி ஆயோக் (NITI Aayog) அறிக்கையின்படி இந்தியாவில் 2012-2014 காலகட்டத்தில் இருந்த 1000 ஆண்களுக்கு 906 பெண்கள் என்ற பிறப்பு விகிதம் 2013-2015 காலகட்டத்தில் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் என்ற அளவில் சரிந்தது. இந்தியாவின் 17 மாநிலங்களில் பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இதுவரையிலும் பெண்களின் பிறப்பு விகிதம் ஆண்களுக்கு இணையாக இருந்தது இல்லைதான், எனினும் தற்போது மிகவும் குறைந்து இருப்பதாக சொல்கிறது நிதி ஆயோக், அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 53 புள்ளிகள் குறைந்துள்ளதாக தெரிகிறது.
இந்த வேறுபாடானது நாட்டின் இளைஞர் வளத்தையும் எதிர்காலத்தில் திருமணம் ஆகாத ஆண்களின் எண்ணிக்கை உயர்வதற்கும் காரணமாகி விடக்கூடும். இது இந்திய நாட்டில் புதிதாக நிகழும் ஒன்றல்ல, இதுவரை நிகழ்த்தப்பட்ட அனைத்து கணக்கெடுப்புகளின் போதும் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கு எதிராக பிறக்கும் பெண்களின் பிறப்பு விகிதம் ஒவ்வொரு முறையும் குறைந்தே இருந்து வருகிறது, ஏனெனில் இந்தியர்கள் அதிகமாக ஆண் குழந்தைகளை விரும்புவதும், அதற்கான சூழ்நிலையை உருவாக்கி கொள்வதாலும் இயற்கையாகவே பெண்களின் பிறப்பு விகிதம் இந்தியாவில் குறைந்த அளவே உள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
ஹரியானா மாநிலத்தில் ஆண் பெண் பிறப்பு விகிதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் குறைந்துள்ளது. Rohtak, Mohindergarh, Sonipat, Karnal, Charkhi Dadri, Kaithal, Bhiwani மற்றும் Gurugram ஆகிய ஹரியானாவின் எட்டு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 1000 ஆண்களுக்கு 900 த்திற்கும் குறைவான பெண்களே பிறந்துள்ளனர். ஹரியானாவில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வருகின்ற அல்ட்ரா சவுண்ட் சென்டர்களை தடுக்க மாநில அரசின் நல்வாழ்வுத்துறை எத்தனை முயற்சிகள் செய்தும் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்த சென்டர்களில் பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கருவில் இருக்கும் போதே கண்டறிந்து கூறுகின்றனர், இதற்கு 30000 முதல் 40000 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். மேலும், ஹரியானாவில் நிறைய தனியார் மருத்துவ மனைகளும் “Jhola Chhap” எனப்படும் நடமாடும் மருத்துவர்களும் 80000 முதல் ஒரு லட்சம் வரை கட்டணம் வசூலித்துக் கொண்டு பெண் சிசுவை கருவிலேயே அழிக்கும் வேலைகளை சட்டத்திற்கு புறம்பாக செய்து வருகின்றனர். இதுவரையிலும் மாநில அரசு இந்த காரியங்களில் ஈடுபட்டு கொண்டிருந்த பல நபர்களையும், அல்ட்ரா சவுண்ட் நிலைய முதலாளிகளையும் கைது செய்துள்ளது.
“Beti Bachao – Beti Padao” என்ற முழக்கத்துடன் ஹரியானா அரசு பானிபட்டில் 2015 இல் ஒரு கருத்தரங்கை நிகழ்த்தியது. பெண்களின் பாதுகாப்பையும் பெண்களின் படிப்புரிமையையும் முன்னிறுத்தி மக்கள் மனதில் பெண் குழந்தைகள் மீதான நம்பிக்கையின்மையை குறைக்க முயன்றனர். ஆயினும் 2019 இல் 1000 ஆண்களுக்கு 923 பெண்கள் என்றிருந்த விகிதாச்சாரம் 2022 இல் 1000 ஆண்களுக்கு 906 பெண்கள் என்பதாக குறைந்துள்ளது. Ultrasonography யின் பயன்பாடும், பெண் சிசுவை கருவிலேயே கலைப்பதும் பங்களாதேஷ் நாட்டில் முதன் முதலில் பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் நடைமுறைக்கு வந்தது. இதைதொடர்ந்து நம் இந்திய அரசின் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் Ultrasonography முறைக்கு கடுமையான தடைகளை விதித்தது. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உயர்நீதிமன்றம் கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிய இந்தியாவில் தடை விதித்து சட்டம் இயற்றியது. இதன் மூலமாக கருவிலிருக்கும் பெண் குழந்தைகளும் கருவுற்று இருக்கும் பெண்களும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க அரசு முயற்சி செய்தது. அரசின் இத்தனை கட்டுப்பாடுகளையும் தாண்டி நம் நாட்டில் குழந்தைகளின் பாலினத்தை முன்னரே கண்டறியும் வழக்கம் இன்னும் சாதரணமாக நிலவி வருகிறது.
இந்த சம்பவங்களை பற்றிய ஆய்வறிக்கையானது, அரசின் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகள் இருந்த போதிலும் ஹரியானா மாநிலத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் சட்டத்திற்கு புறம்பாக Ultrasound நிலையங்களும், தனியார் மருத்துவ மனைகளும் இந்த தொழிலில் இன்னமும் ஈடுபட்டு வருகின்றன என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இப்படிப்பட்ட பெண் சிசு கருக்கலைப்பு என்பது அங்கு முக்கிய வியாபாரமாக இடைத்தரகர்கள் மூலமாக நடந்தேறி வருகிறது. ஹரியானா மட்டுமன்றி அதன் அருகாமை மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இவர்களின் ஆதிக்கம் நீள்கிறது. பெரிய எண்ணிக்கையை கொண்ட “Jhola – Chhap” மருத்துவர்கள் இப்படிப்பட்ட சட்டத்திற்கு புறம்பான காரியங்களை கிராம பகுதிகளில் இன்றளவும் செய்து வருகின்றனர். பல இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்தும், நடமாடும் Ultrasound கருவிகளை கொண்ட வாகனங்கள் மூலமாகவும் இந்த காரியங்களை செய்து வருகின்றனர். இவர்களுக்கு துணையாக ஹரியானா மாநில ஏஜெண்டுகள் செயலாற்றி வருகின்றனர். இவர்களின் மூலம் பெண் சிசுவை கருவில் சுமந்து கொண்டிருக்கும் பெண்களின் குடும்பத்தாரிடம் பேசி அவர்கள் மனதை மாற்றி கருக்கலைப்பு சம்பவங்களை வியாபார நோக்கத்தில் செய்து வருகின்றனர்.
பின்னணி:
சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, ஆண் பெண் பிறப்பு விகிதமானது Jind மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 945 பெண்களும், Sirsa மற்றும் Fatehabad மாவட்டங்களில் 1000 ஆண்களுக்கு 931 பெண்களும் இருப்பதாக தெரிய வருகிறது. அதேசமயம் Kurukshetra மற்றும் Jhajjar மாவட்டங்களில் இந்த விகிதாச்சார வேறுபாடானது 1000 ஆண்களுக்கு 893 முதல் 931 பெண்கள் என்று இருக்கிறது.
ஹரியானாவின் ஏழு மாவட்டங்களில் ஆண் பெண் பிறப்பு விகிதத்தில் பெண்களின் பிறப்பு உயர்ந்தும், 15 மாவட்டங்களில் பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்தும் காணப்படுகிறது, சென்ற வருடத்தை காட்டிலும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. மாநில அரசின் நல்வாழ்வுத் துறை 2022 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பில் ஏழு மாத கால இடைவெளியில் மொத்தம் 2,93, 926 குழந்தைகள் பிறந்துள்ளன, அதில் 1,54,222 ஆண் குழந்தைகளும் 1,39,703 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன.
Fatehabad, Rohtak, Charki Dadri, Gurugram, Kaithal, Karnal, Bhiwani, Nuh, Panchkula, Narnaul மற்றும் Palwal ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பெருமளவு பெண்கள் பிறப்பு குறைந்துள்ளது என ஆய்வறிக்கை கூறுகிறது. ஆண் குழந்தைகள் தான் பெண்களை விட அதிகமாக சம்பாதித்து தருவார்கள் என்பதும், கடைசி காலங்களில் பெற்றோர்களை ஆண் குழந்தைகள் தான் சிறப்பாக கவனித்து கொள்வர் என்ற போலி நம்பிக்கைகளும் தான் இது போன்ற பெண் சிசு கொலைகள் அதிகரித்ததற்கான காரணம் என்கிறது அரசு தரப்பு. மேலும் பெண் குழந்தைகளை வளர்ப்பதும், வரதட்சனை குடுத்து திருமணம் செய்து வைப்பதும் செலவுகளை உருவாக்கும் என்பதும், பெண் குழந்தைகள் படிப்பதற்கும் வேலைக்கு செல்வதற்கும் குறைந்த அளவிலேயே வாய்ப்புகள் இருப்பதாலும் பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதுபோன்ற தவறான கொள்கையை கொண்ட பெற்றோர்கள் மற்றும் ஆண் வாரிசு வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஆகியவற்றால் இத்தகைய கொடுமைகள் கருவுற்ற பெண்களுக்கும் கருவில் இருந்து இன்னமும் வெளிவராத பெண் சிசுக்களுக்கும் நடக்கின்றன. இதை தடுக்க அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது.