ஆளில்லா ‘ட்ரோன்’ விமானங்கள், அமெரிக்கா இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம் ஏன்?

செய்தி சுருக்கம்:
அமெரிக்காவிடம் இருந்து 31 ஆளில்லா ட்ரோன் விமானங்களை இந்தியா வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இப்பணிகள் வரும் ஜூலை முதல் துவங்க இருக்கிறது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பாதுகாப்புப் பணியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் இந்திய ராணுவமும் அதனை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் படி அமெரிக்காவிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் இந்த ட்ரோன்கள் வாங்கப்படுகிறது. முக்கியமாக எல்லை ரோந்துப் பணியில் இவ்வகை விமானங்களை பயன்படுத்தப்படுகிறது.
பின்னணி:
உலகில் பல நாடுகளில் எல்லைப் பிரச்சனைகள் இருந்தாலும், சில நாடுகளில் எல்லைப் பகிர்தல் மிகவும் அமைதியான முறையில் இருக்கிறது. எடுத்துக்காட்டிற்கு, பல ஐரோப்பிய நாடுகளில் ஒரே ஒரு கோடுதான் தான் இரு நாடுகளைப் பிரித்திருக்கும். இந்தப் பக்கம் நின்றால் ஒரு நாடு, இரண்டடி தாண்டி நின்றால் வேறொரு நாடு அவ்வளவு தான். இந்தளவில் தான் எல்லை வித்தியாசம் இருக்கும். ஆனால் சில நாடுகளுக்கு எல்லை என்பது ஒரு போர்க்களமாக இருக்கிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக இந்தியாவைக் கூறலாம். இந்தியாவுடன் பல நாடுகள் சகோதரத்துவுடன் நடந்துகொண்டாலும் எல்லைப் பிரச்சனை என்று வரும்போது வடக்கே சீனாவும், மேற்கே பாகிஸ்தானும் இந்தியாவிற்கு ஒரு அச்சுறுதலாகவே இருந்து வருகிறது. இதனை சமாளிக்கவே ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் ராணுவ செலவீனங்களுக்கு அதிகமான தொகை ஒதுக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டியில் மட்டும் 13.18% ராணுவத் தேவைகளுக்கு ஒதுக்கியுள்ளது நிதி அமைச்சகம். இது இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளுக்கு ஒரு பாதுகாப்பு முதலீடு என்றாலும் வறுமையில் வாடும் மக்களின் மத்தியில் இது ஒரு சாபமே.
முப்பெரும் படைகளான கப்பல் படை, விமானப் படை மற்றும் ராணுவப் படைக்கு தளவாடங்களை வாங்குவது, புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது, எல்லைப் பாதுகாப்பில் பணியாற்றும் வீரர்களுக்கு சம்பளம் வழங்குவது, ஓய்வூதியம் அளிப்பது என வருடா வருடம் செலவீனங்கள் அதிகமாகிக் கொண்டே தான் செல்கிறது. மக்களின் நலனைக் காட்டிலும் ராணுவத் தேவைகள் முக்கியமா? என பல அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பினாலும். ஆம் என்ற பதிலைத் தான் கூறமுடிகிறது.
இந்திய வரலாற்றில் நடந்த ஒரு பாகப் பிரிவினை தான் இது அனைத்திற்கும் காரணமாக அமைகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில், இந்திய தேசத்தை இரு நாடுகளாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பிரிட்டிஷ் அரசிடம் வைக்கப்பட்டது. அதன்படி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் இந்தியாவை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரித்தார். இதற்கு அவர் மிகவும் குறுகிய காலத்தையே எடுத்துக்கொண்டர். இந்தப் பிரிவினையால் பல ஆயிரம் உயிர்கள் பலியாகின. இதனைத் தொடர்ந்து காஷ்மீர் என்னும் இடத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் சொந்தம் கொண்டாடியது. அப்போது காஷ்மீரை ஆட்சி செய்த ராஜா ஹரி சிங் என்பவர் காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு சம்மதித்தார். அன்று துவங்கிய எல்லைப் பிரச்சனை இன்று வரை தொடர்கிறது. இருநாடுகளும், தங்கள் எல்லையை காப்பதற்கும், விரிவாக்குவாதற்கும் தொடர்ச்சியாக போராடி வருகிறது.
இந்த எல்லைப் பிரச்சனையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்னும் முறையில், சீனா பாகிஸ்தானிற்கு ஆதரவு அளித்து வருகிறது. ராணுவ உள்கட்டமைப்பிற்கு நிதி வழங்குவது, தளவாடங்களை தயாரித்துக் கொடுப்பது, என பல உதவிகளை சீனா பாகிஸ்தானிற்கு செய்து வருகிறது. மேற்கே பாகிஸ்தான் பிரச்சனை என்றால் வடக்கே சீனாவின் எல்லை ஆதிக்கம் தினம்தோறும் அதிகமாகிக்கொண்டு வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் சிறு குறு கிராமங்களை உருவாக்கி எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே வருகிறது சீனா. இதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுக்கவே உலகின் பல்வேறு நாடுகளிடம் இருந்து சிறந்த தொழில்நுட்பம் கொண்ட புதிய ராணுவ உபகரங்களை இந்தியா இறக்குமதி செய்து தன்னை பலப்படுத்திக்கொள்கிறது.
இரண்டு வருடத்திற்கு முன்னர் 36 ரஃபேல் போர் விமாங்களை ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து அதனை இந்தியா விமானப்படையில் இணைத்தது. தற்போது அமெரிக்காவுடன் செய்த ஒப்பந்தத்தின் படி முப்பத்தியோரு ஆளில்லா ட்ரோன் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இந்தியாவின் எல்லையானது மிகவும் பரந்து விரிந்துள்ளது ஆகையால் அதை இருபத்தினாங்கு மணி நேரமும் காவல் காக்க ஏதுவாக இந்த நவீன ட்ரோன்கள் பயன்படும் என்று ராணுவத் தலைமைத் தளபதி கூறியுள்ளார்.
‘ஹண்டர் கில்லர்’ எனப்படும் MQ-9B ட்ரோன்கள் மிகவும் அதிநவீன தொழில்நுட்ப மேம்பாடுகள் கொண்ட ஆளில்லா விமானமாகும். இது சுமார் நாற்பது மணி நேரம் வரை பறக்கும் திறன் கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 40,000 அடிகள் வரை பறக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இது வானில் பறந்தபடியே குண்டை செலுத்தி தரையில் இருக்கும் ‘டார்கெட்டை’ துல்லியமாக தாக்கும் திறன்கொண்ட விமானமாகும். சீனாவின் ஆளில்லா விமாங்களை விட இந்த ரக விமானங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை ஆகும். இந்த வகையில் 31 விமானங்களை தயாரித்து கொடுப்பதாக அமெரிக்கா அரசு இந்தியாவிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. அடுத்த மாதம் முதல் இதன் கொள்முதல் துவங்கப்படும், முழுவதுமாக ஆறு முதல் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்தையும் இந்தியாவிற்கு ஒப்படைக்க கையெழுத்தாகியுள்ளது.