இந்தியாவின் முதல் ட்ரோன் போலீஸ் படைப்பிரிவு தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது – இன்றுமுதல் செயல்பாட்டிற்கு வந்தது.

செய்தி சுருக்கம்:
தமிழக காவல் துறையின் புதிய பிரிவாக ட்ரோன் போலீஸ் படைப்பிரிவின் துவக்கவிழா சென்னை அடையாறில் உள்ள பெசன்ட் நகர் அவென்யூவில் இன்று (29-062023) வியாழக்கிழமை நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் DGP திரு C சைலேந்திர பாபு மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரு சங்கர் ஜிவால் இருவரும் தலைமை தாங்கினர்.
3.6 கோடி மதிப்பு வாய்ந்த டெக்னிகல் உபகரணங்களை கொண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக “சென்னை பெருநகர ட்ரோன் காவல் பிரிவு” என்னும் சிறப்பு காவல் படை தமிழ்நாட்டில் இன்று தமிழக காவல் துறையினரால் துவக்கி வைககப்பட்டது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
டிஜிட்டல் மயமான இன்றைய உலகில் நடக்கின்ற பலதரப்பட்ட குற்றங்களை துரிதமாக கண்டறிய உதவும் வகையில் சென்னை போலீஸ் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது இந்த ட்ரோன் படைப்பிரிவு. இனிவரும் காலங்களில் நடக்கும் குற்றங்களை உடனடியாக கண்டறியும் வகையில் இந்த பிரிவு செயல்படும் என தகவல். இன்று துவக்கவிழா கொண்டாடிய இந்த படைப்பிரிவுக்கு தமிழக காவல் துறையின் உயரதிகாரி DGP சைலேந்திர பாபு அவர்களும், சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் அவர்களும் தலைமை ஏற்றனர், இந்த பிரிவின் அறிமுக விழா சென்னையின் அடையாறு பகுதியில் பெசன்ட் நகர் அவென்யூவில் இன்று நடைபெற்றது.
இந்த ட்ரோன் படைக்கென 9 ட்ரோன்களை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது, இவை மூன்று விதமான சேவைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் என காவல் துறையினர் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்தனர்.
1. Quick Response Surveillance Drones – 6 No’s
இவை குறிப்பிட்ட இடங்களில் நிகழும் சம்பவங்களை அதி நுட்பமான கேமராக்கள் மூலம் ஆராய்ந்து முக்கியத் தகவல்களை திரட்டி காவல்துறைக்கு அனுப்பும்.
2. Heavy Lift Multirotor Drone – 1 No
இது அதிகமான எடைகளை தூக்க பயன்படுத்தப்படும் சிறப்பு கேமராக்களை கொண்ட ஒரு ரோந்து இயந்திரம்.
3. Long Range Survey Wing Plane – 2 No’s
இது பல கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இடங்களை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும்.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ட்ரோன்களுமே அதிசிறந்த Artificial Intelligence வசதியை கொண்டுள்ளன, இவற்றை ஐந்து முதல் பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்து இயக்க முடியும்.
திருவிழா மற்றும் கலவர சமயங்களில் ஒன்று சேர்கின்ற மக்கள் கூட்டத்தை எளிதில் கட்டுப்படுத்த முடியும் வகையில் இதன் சென்சார்கள் அமைக்கப்பட்டுள்ளன. மனிதர்களின் எண்ணிக்கையை கூட துல்லியமாக சொல்லக்கூடிய அளவு வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கூட்ட நெரிசலை மற்றும் அதனால் உருவாகும் விபத்துகளை எளிதில் தடுக்க முடியும் என காவல்துறை அறிவிப்பு.
மேலும் இந்த ட்ரோன்கள் அனைத்தும் ANPR கேமரா (Automatic Number Plate Recognition) எனப்படும் தானியங்கு முறையில் வாகனப்பதிவு விவரங்களை சேகரிக்கும் சிறப்பு கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன்மூலம் வாகனத்திருட்டு மற்றும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் நடமாட்டம் போன்றவற்றை உடனடியாக கண்காணித்து குற்றங்களை நடக்காமல் தடுக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.
இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள Heavy Lift Mulirotor Drone ஆனது உடல் வெப்பத்தை உணரக்கூடிய தெர்மல் சென்சார்களை கொண்ட கேமராக்கள் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இரவிலும் கூட எளிதில் மனித நடமாட்டம் மற்றும் மிருக நடமாட்டங்களை அறிய முடியும் மேலும் அடிக்கடி நிகழும் கடற்கரை ஓரங்களில் காணாமல் போன நபர்களின் தொலைந்து போன உடல்களை எளிதில் கண்டறிய உதவும், கடலில் தகுந்த பாதுகாப்பில்லாமல் குளிக்கும் நபர்கள் அலைகளால் இழுக்கப்பட்டு காணாமல் போகும் தருணங்களில் இரவில் கூட அவர்களின் உடல்களை அடையாளம் காண இயலும்.
சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ட்ரோன் காவல் படைப்பிரிவின் நன்மைகளை கருத்தில் கொண்டு கோவை மற்றும் மதுரை மாநகர காவல் துறைகளும் இது போன்ற வசதிகளை உடனடியாக தங்களுக்கும் ஏற்படுத்தி தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
பின்னணி:
அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் போன்ற நாடுகளில் செயல்பாட்டில் உள்ள ட்ரோன் போலீஸ் படைப்பிரிவானது இந்தியாவில் தமிழ்நாட்டில் முதன்முதலில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பல நாடுகளின் ராணுவம், சட்டம், அமலாக்கத்துறை மற்றும் விமான நிலையங்களில் இத்தகைய ட்ரோன் பாதுகாப்பு வசதி செயல்பாட்டில் உள்ளது, இன்னும் சில நாடுகள் விவசாய உற்பத்தியை கண்காணிக்க ட்ரோன்களை வைத்துள்ளன.
காவல் துறைக்கு வழங்கப்பட்ட இந்த ட்ரோன் படைப்பிரிவின் மூலம் பலவித நன்மைகள் உண்டு என police1.com செய்திப்பிரிவில் கூறப்பட்டுள்ளது. இந்த வசதிக்கு UAS (Unmanned Aerial System) என்று பெயர். அவசரகாலங்களில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற இந்த வகையான ட்ரோன்கள் அதிகளவில் பயன்படும் என்று குறிப்பிடுகின்றனர். கீழ்காணும் சமயங்களில் இதன் உபயோகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
1. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க
2. உளவுத்துறையின் ரகசிய செயல்பாடுகளுக்கு
3. அதிரடி தாக்குதல் நடத்துவதற்கு
4. பணயக்கைதிகளின் நிலையை தெரிந்து கொள்வதற்கு
5. ரோந்து படைக்கு தகவல்களையும் உபகரணங்களையும் கொண்டு சேர்ப்பதற்கு
6. தடயவியல் துறையின் செயல்பாடுகளுக்கு
7. காணாமல் போனவர்களை Image Recognition மூலம் கண்டறிவதற்கு
8. போக்குவரத்தை திடீரென மாற்றியமைக்க
9. கட்டிடங்களின் உட்புறம் சென்று ஆராய்வதற்கு
10. ஒன்றுக்கொன்று இணைந்த ட்ரோன்களின் உபயோகத்திற்கு
இவ்வாறு பல்வேறு வகையான நன்மைகளை இந்த ட்ரோன் காவல் பிரிவு மக்களுக்கு வழங்கவுள்ளது, இந்த மேம்பட்ட வசதிகளினால் சென்னை மாநகரில் இனிமேல் குற்றங்கள் குறையும் என எதிர்பார்க்கலாம்.