கஞ்சா போதையில் காரோட்டினால் என்ன ஆகும்? வாருங்கள்.. ஆய்வு முடிவைப் பார்க்கலாம்..!!

எங்கெங்கோ கேள்விப்பட்ட கஞ்சா புழக்கம் என்பது இப்போது நம் கால்களுக்கடியில் நமது சுற்றுப்புறங்களிலேயே நிகழத்தொடங்கி உள்ளது. கல்லூரி பள்ளி மாணவர்களுக்கிடையே கஞ்சா வெகு சாதாரணமாகப் புழங்குகிறது. சாராயம் குடித்துச் சலம்பிக்கொண்டிருந்த முந்தைய தலைமுறையைப் போல இல்லாமல் இந்த கஞ்சா தலைமுறை போதையின் பாதியில் வெகுவேகமான முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
தற்போது, சிறார் குற்றவாளிகள் மற்றும் கொலை போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுவோர் கஞ்சா போதையில் இருந்ததாகவும் அவர்களுக்கு இந்த பழக்கம் வெகுநாட்களாக இருப்பதாகவும் வாக்குமூலத்தில் தெரிவிப்பது வாடிக்கையாகியுள்ளது. உண்மையில் மது போதையைவிட கஞ்சா போதை ஆசாமிகள் ஆபத்தான நடவடிக்கைகளிலும் குற்றச்செயல்களிலும் துணிந்து ஈடுபடுகின்றனர்.
கஞ்சா என்னதான் செய்கிறது? ஆய்வு சொல்வதென்ன?
கொலராடோ ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அமைப்பு கஞ்சா போதையில் வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்த ஒரு அதி நவீன ஆராய்ச்சியைச் செய்துள்ளது. இதற்கென அதி நவீன தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆராய்ச்சியில் தினசரி கஞ்சா பயன்படுத்துபவர்கள், எப்போதாவது பயன்படுத்துபவர்கள் மற்றும் கஞ்சா பழக்கம் இல்லாதவர்கள் என்று மூன்று பிரிவினர் உட்படுத்தப்பட்டனர்.
எப்போதவது கஞ்சா பயன்படுத்துபவர்கள் வாகனம் ஓட்டுகையில் எளிதான ஒரு முடிவை எடுக்கையில் விரைவாக முடிவெடுக்க இயலாமல் தடுமாறினர். அதேபோல தினமும் கஞ்சா பயன்படுத்துபவர்கள் சிக்கலான முடிவை எடுக்கையில் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டு காலம் தாழ்த்தினர்.
கஞ்சா போதையில் வாகனம் ஓட்டுவதன் விளைவு!
சாலையில் வாகனம் ஓட்டுவதென்பது பலநூறு முடிவுகளையும் கணிப்புகளையும் சட்டென்று விரைவாக எடுப்பவர்களுக்கானது. ஒரு வாகனத்தை முந்த வேண்டுமா?, ஒரு குறுகிய இடைவெளிக்குள் செல்ல வேண்டுமா?, குறுக்கே வரும் ஒரு வாகனத்தையோ அல்லது நபரையோ மோதாமல் இருக்க எந்த வேகத்தில் வாகனத்தைத் திருப்ப வேண்டும் அல்லது பிரேக்கை அழுத்த வேண்டும் என்பது போன்ற முடிவுகளை நொடிக்கொருதரம் எடுக்க வேண்டியிருக்கும்.
இந்தகைய சிக்கலான செயல்பாடான வாகனம் ஓட்டும் செயலை கஞ்சா போதையின் ஆதிக்கத்தில் செய்வதென்பது தங்கள் உயிரை மட்டுமல்ல ஒழுங்காக சாலையில் சென்றுகொண்டிருக்கும் அப்பாவிகளின் உயிரையும் ஆபத்தில் தள்ளுவதாகும்.
இதற்கான தீர்வுதான் என்ன?
மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்ய ‘ப்ரீத் அனலைசர்’ போன்ற கருவிகள் புழக்கத்தில் உள்ளன. ஆனால், கஞ்சா போதையைக் கண்டறியும் கருவிகள் அதுபோல சரளமாக புழக்கத்தில் உள்ளனவா என்பதை நாம் கவனித்துப்பார்க்க வேண்டும்.
ஆராய்ந்து பார்க்கையில், மது போதைகளை விட இந்த கஞ்சா போதையானது ஒப்பீட்டளவில் மிகவும் கொடியதாகத் தெரிகிறது. எந்த போதையில் வாகனத்தை இயக்கினாலும் அது தங்கள் சொந்த உயிருக்கும் மற்ற உயிர்களுக்கும் ஆபத்தானதுதான்.
சமூக பொறுப்பு மற்றும் பிற உயிர்களின் மேல் மரியாதை உள்ள எவரும் இத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அத்தகைய பொறுப்புணர்வு இல்லாத மடச்சாம்பிராணிகளுக்கு சட்டத்தின் பிடியை இறுக்குவதன் மூலமும் தண்டனைகளைக் கடுமையாக்குவதன் மூலமாக மட்டுமே பாடம் புகட்ட இயலும்.