அதிபழமையான டைனோசர் எச்சங்கள் எங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன தெரியுமா?

செய்தி சுருக்கம்:
ராஜஸ்தானிலுள்ள ஜெய்சால்மரில் டைனசோரின் தொல்லியல் எச்சம் என்னும் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு முந்தைய கால இப்புதைபடிவங்களை ரூர்கியிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் மற்றும் இந்திய புவியியல் கணக்கெடுப்பு நிறுவனத்தை சார்ந்த விஞ்ஞானிகள் அகழ்ந்தெடுத்துள்ளனர்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இந்தியாவிலுள்ள தார் பாலைவனத்தில் இந்த புதைபடிவம் கண்டெடுக்கப்பட்டுள்ளபடியினால் விஞ்ஞானிகள் இதற்கு தாரோசாரஸ் இண்டிகஸ் என்று பெயரிட்டுள்ளனர். இந்த புதைபடிவங்கள் 2018ம் ஆண்டில் சேகரிக்கப்பட்டாலும், இரண்டு நிறுவனங்களையும் சேர்ந்த ஆறு ஆராய்ச்சியாளர்கள், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இதை ஆய்வு செய்து, இதுவரை மனுக்குலம் அறியாத புதிய வகை டைனோசர் இது என்று தெரிவித்துள்ளனர். இது 16 கோடியே 70 லட்சம் (167 மில்லியன்)ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. உலகில் இதுவரை அறியப்பட்டிருக்கும் டைனசோர் எச்சங்களில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதே பழமையானதாக உள்ளது.
பின்னணி:
ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, நீள்கழுத்து கொண்டதும் தாவரங்களை உண்ணக்கூடியதுமான டைகிரியசோரிட் டைனோசரின் தொல்லியல் எச்சம் என்று கருதப்படுகிறது. இவ்வகை தாவர உண்ணி டைனோசர்கள் சாரோபோட் என்னும் பெரும்பிரிவுக்குள் அடங்கியவை. அதற்கு மேலான பிரிவு டிப்ளோடோகாய்ட் என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு முன்பு டைகிரியசோரிட் வகை டைனோசர்களின் புதைவடிவம் வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் சீனாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது 16 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பான பாறைபடிவில் இந்த டைனோசர் தொல்லியல் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், இதுவரை அறியப்பட்டிருப்பதில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதே பழமையானதாக உள்ளது.
தார் பாலைவனம்
தார் பாலைவனம் ஏறக்குறைய 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. ஆரவல்லி மலைக்குன்றுகளை அடுத்து அமைந்திருக்கும் தார் பாலைவனம், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலும் பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களிலும் பரந்து விரிந்துள்ளது. தார் பாலைவனத்தின் 85 சதவீத பரப்பு இந்தியாவிலும் 15 சதவீத பரப்பு பாகிஸ்தானிலும் உள்ளது.
டைனசோர் யுகம்
மெசோஸாயிக் யுகம் என்பது 25 கோடியே 20 லட்சம் (252 மில்லியன்)ஆண்டுகள் முதல் 6 கோடியே 60 லட்சம் (66 மில்லியன்)ஆண்டுகள் வரையுள்ள காலமாகும். இது ஊர்வனங்களின் யுகமாக அறியப்படுகிறது. இந்த மெசோஸாயிக் யுகமானது டிரையாசிக், ஜூராசிக், கிரிடாசியஸ் என்று மூன்று காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஜூராசிக் காலம் என்பது மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் நடு ஜூராசிக் காலம் 17 கோடியே 60 லட்சம் (176 மில்லியன்) முதல் 16 கோடியே 10 லட்சம் (161 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பான காலமாகும். புவித்தட்டுகள் பிரிந்ததைக் கொண்டு இவை வரையறுக்கப்பட்டுள்ளன. அப்போது நிலப்பரப்பு பாங்கேயா என்ற பெரிய கண்டமாக இருந்தது. அதன் வட பகுதியான லாராசியா வட அமெரிக்காவாகவும் யூரேசியாகவும் பிரிந்தது. தென் பகுதியான கோண்ட்வானா, மத்திய ஜூராசிக் காலத்தில் பிரிந்தது. அண்டார்டிகா, மடகாஸ்கர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா இருந்த மேற்கு பகுதியிலிருந்து பிரிந்தது. இந்த கண்டங்களுக்கு இடையே பெருங்கடல்கள் நிரப்பின.
பெயர்க்காரணம்
டைனோசர் என்பவை ஊர்வன இனத்தைச் சேர்ந்தவை. இவை பூமியில் கிட்டத்தட்ட 24 கோடியே 50 லட்சம் (245 மில்லியன்) ஆண்டுகள் வாழ்ந்துள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த சர் ரிச்சர்ட் ஓவன் என்ற இயற்கையிலாளர் 1842ம் ஆண்டு, டெய்னோஸ் மற்றும் சாரோஸ் ஆகிய கிரேக்க வார்த்தைகளிலிருந்து டைனோசோரியா என்ற வார்த்தையை அமைத்தார். டெய்னோஸ் என்பதற்கு பயப்படுமளவுக்கான பிரமாண்டம் என்றும் சாரோஸ் என்பதற்கு பல்லி என்றும் பொருள். ஆகவே, இந்த இரு வார்த்தைகளையும் கொண்டு புதிய சொல் ஒன்றை ரிச்சர்ட் ஓவன் அமைத்தார்.
இவற்றின் ஃபாசில்ஸ் என்னும் புதைபடிவுகள் அல்லது தொல்லியல் எச்சங்கள் அனைத்து கண்டங்களிலும் கிடைத்துள்ளன. ஏறத்தாழ 700 வகை டைனோசோர்கள் வாழ்ந்ததாக கூறுகின்றனர். இதுவரை ஏறத்தாழ 11 ஆயிரம் டைனோசர்களின் தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சாரோபாட் வகையை சேர்ந்த பிராசியோசரஸ் என்ற தாவரங்களை உண்ணக்கூடிய டைனோசர்கள் 52 அடி (16 மீட்டர் உயரம் கொண்டவையாகவும், 85 அடி (26 மீட்டர்) நீளமும் 80 டன் எடையும் கொண்டவையாகவும் இருந்ததாக கணிக்கப்படுகிறது. அதே வகையை சேர்ந்த டிப்ளோடோகஸ் என்ற டைனோசர்கள் 90 அடி (27 மீட்டர்) நீளம் கொண்டவையாக இருந்தன.
தொல்லியல் எச்சங்கள்
அமெரிக்காவில் மாண்டானா என்ற இடத்திலுள்ள பாம்பேஸ் பில்லர் அருகே 1806ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி, வில்லியம் கிளர்க் என்பவர் டைனோசரை போன்ற உயிரினம் ஒன்றின் தொல்லியல் எச்சமான எலும்பை கண்டுபிடித்தார். வட அமெரிக்காவில் 1850ம் ஆண்டில்தான் டைனோசர்களை பற்றிய ஆய்வு தொடங்கியது. அலாஸ்காவிலும் கொலோரடா பீடபூமியிலும் டைனோசர்களின் காலடி தடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு டைனோசர்களை பற்றிய அறிவியல் பணிகள் அதிகரித்தன.
அர்ஜெண்டினாவிலுள்ள பாடகோனியாவில் 2012ம் ஆண்டு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ஒரு பண்ணை வேலையாள் டைனசோர் எலும்புகளை கண்டுபிடித்தார். பண்ணை உரிமையாளர் அவற்றை ஆய்வுக்கு ஒப்படைத்தார். இது டைட்டனோசர் வகையை சார்ந்தது என்றும் 10 ஆப்பிரிக்க யானைகளின் எடைகளுக்கு சமமானதாய் இருந்திருக்கக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது. அந்த இடத்தை தோண்டிய ஆய்வாளர்கள் குறைந்தது ஆறு டைனோசர்களுடையதாக இருக்கக்கூடிய 200 தொல்லியல் எச்ச எலும்புகளை சேகரித்தனர்.
போர்ச்சுகலை சேர்ந்த போம்பலில் ஒருவர் தன் வீட்டின் பின்புற பகுதியை 2022ம் ஆண்டு புதுப்பித்தார். அப்போது தொல்லியல் எச்ச எலும்புகளை கண்டுபிடித்தார். லிஸ்பன் பல்கலைக்கழக ஆய்வாளர்களை அவர் தொடர்பு கொண்டார். ஆய்வாளர்கள், 10 அடி நீளமுள்ள இடுப்பு எலும்புகளையும் முதுகெலும்பையும் கண்டுபிடித்தனர். இந்த டைனோசர் 40 அடி உயரமும் 80 அடி நீளமும் கொண்டிருந்திருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுவே ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசராகும்.
மற்ற காலங்கள் எல்லாம் உயிரின பேரழிவால் முடிந்தன. ஆனால், ஜூராசிக் காலத்தின் முடிவில் சில உயிரினங்களே மறைந்தன. வாழ்க்கை முறை மாற்றம், பூக்கும் தாவரங்களின் தோற்றம் உள்ளிட்ட சில மாற்றங்களோடு கிரிடாசியஸ் காலமானது ஆரம்பித்தது.