fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம்

புதிதாக உருவாகும் படைப்பூக்கம் – டிமென்ஷியா பாதிப்பு தரும் வரம்!

dementia

செய்தி சுருக்கம்:

பல்வேறு நோய்களால் காலப்போக்கில் நரம்பு செல்கள் அழிவதாலும், மூளையில் சேதம் விளைவதாலும் ஏற்படும் குறைபாடு டிமென்ஷியா என்று அழைக்கப்படுகிறது. டிமென்ஷியா பாதிப்புள்ளவர்களில் வெகு சிலருக்கு அரிதான வகையில் காட்சி சார்ந்த படைப்பூக்கம் உருவாகிறதை பல ஆண்டுகளாக மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மூளையின் இரத்தக்குழாயில் அடைப்பு மற்றும் மூளை காயமடைதல் ஆகிய பாதிப்புள்ளவர்களிடமும் இந்த அரிய மாற்றம் காணப்படுகிறது. மூளையின் முக்கியமான செல்கள் அழியக்கூடிய டிமென்ஷியா பாதிப்பினூடே எவ்வாறு இந்த திறமை மேம்படுகிறது என்பது குறித்து புதிய கருத்துகளை அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

டிமென்ஷியா பாதிப்புள்ள 689 பேரிடம் நடைபெற்ற ஆய்வில் 2.5 சதவீதத்தினர், அதாவது 17 பேருக்கு திடீரென காட்சி கலை சார்ந்த படைப்பூக்கம் பிறந்துள்ளதாக தெரியவந்தது. புதிதாக படைப்பூக்கம் அடைந்தவர்களின் மூளையானது. சம வயது, நோய் தீவிரம், பாலினம், கல்வி அறிவு கொண்டவர்களாயிருந்தும், இதுபோன்று படைப்பூக்கம் எழாத டிமென்ஷியா நோயாளிகளின் மூளையோடும், ஆரோக்கியமானவர்களின் மூளையோடும் ஒப்பிடப்பட்டது. இந்த ஆய்வில் மூளையின் மொழித்திறனுக்கு பொறுப்பான பகுதிகள் சுருங்கியிருப்பதும், பார்வை குறித்த பகுதியில் செயல்பாடு அதிகரித்திருப்பதாகவும் தெரிய வந்தது.

பின்னணி:

மனிதனின் சிந்தித்தல், நினைவு வைத்தல், தர்க்கரீதியாக யோசித்தல் போன்ற அறிவுசார்ந்த செயல்பாடுகள் பாதிக்கப்படுவது டிமென்ஷியா நோயாகும். இந்தப் பாதிப்பினால் ஒருவருடைய அனுதின வாழ்க்கை பாதிக்கப்படும். டிமென்ஷியா பாதிப்புள்ளவர்களால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாமல் போகலாம். அவர்களுடைய ஆளுமை திறனும் மாறிப்போகும்.

டிமென்ஷியாவின் பெரிதான தாக்கம் ஞாபக மறதியாகும். இது ஆரம்ப கட்ட அறிகுறிகளுள் ஒன்றாகும். ஆனால், மறதி இருப்பது மட்டுமே டிமென்ஷியாவின் அறிகுறி கிடையாது. ஞாபக மறதி பல்வேறு பிற காரணங்களாலும் ஏற்படக்கூடும்.
டிமென்ஷியா ஒரு தனிப்பட்ட நோயல்ல. மருத்துவரீதியாக குறிப்பிட்ட சில நிலைகளை உள்ளடக்கியது டிமென்ஷியா என்ற வார்த்தையாகும். அல்ஷைமர், வாஸ்குலர் டிமென்ஷியா, மிக்ஸட் டிமென்ஷியா என்று பல நிலைகள் இதில் அடங்கியுள்ளன.
தைராய்டு பிரச்னை மற்றும் வைட்டமின் குறைபாடுகள் காரணமாகவும் டிமென்ஷியா பாதிப்பு ஏற்படக்கூடும். இவற்றால் டிமென்ஷியா ஏற்பட்டால் மாத்திரம் அதிலிருந்து மீள முடியும்.

முதுமை

பல லட்சக்கணக்கானோர் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக முதியவர்களிடையே இப்பாதிப்பு பொதுவாக காணப்படுகிறது. எண்பத்தைந்து வயது அல்லது அதற்கு மேலான வயதுள்ள முதியோரில் மூன்றில் ஒரு பங்கினருக்கு டிமென்ஷியா பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது முதுமையின்போது இயல்பாக வருவது அல்ல. தொண்ணூறு வயதை தாண்டியும் டிமென்ஷியாவின் எந்த அறிகுறியும் இல்லாமல் வாழ்கிறவர்களும் உள்ளனர்.

அல்ஷைமர்

டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களுள் 60 முதல் 80 சதவீதம் பேருக்கு அல்ஷைமரே காரணமாக இருக்கிறது. உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே வயதாக வயதாக மூனையிலும் மாற்றம் ஏற்படுகிறது. மறதி ஏற்படுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே மூளையில் நுண்ணிய மாற்றங்கள் ஏற்பட தொடங்கியிருக்கும். மூளையில் பல கோடி நியூரான்கள் என்னும் நரம்பு செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தொகுப்பும் ஒவ்வொரு வேலையை செய்கின்றன. சிந்தித்தல், கற்றல், நினைவில் கொள்ளுதல், பார்வை, செவித்திறன், நுகர்தல் என்று ஒவ்வொரு தொகுப்புக்கும் குறிப்பிட்ட வேலைகள் உள்ளன. இந்த மூளை செல்கள் அழிந்துபோகும் நிலை அல்ஷைமர் என்று கூறப்படுகிறது. அல்ஷைமர் பாதிப்பு உள்ளோருக்கு புதிதாக விஷயங்களை கற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படும். மனப்பாங்கு மற்றும் நடத்தையில் மாற்றம் காணப்படும். நேரம், இடம், நிகழ்ச்சிகள் இவற்றில் குழப்பம் ஏற்படும்.

வாஸ்குலர் டிமென்ஷியா

மூளை இரத்த நாளங்களில் மிகச் சிறிய கசிவு இருப்பதும், அடைப்பு இருப்பதும் வாஸ்குலர் டிமென்ஷியா ஏற்பட காரணமாகிறது. அல்சைமருக்கு அடுத்து டிமென்ஷியா ஏற்பட இது இரண்டாவது காரணமாக உள்ளது.

மிக்ஸட் டிமென்ஷியா

மூளையில் ஏற்படும் பல்வேறுவிதமான டிமென்ஷியா சார்ந்த மாற்றங்களினால் ஏற்படுவது மிக்ஸட் டிமென்ஷியா என்று அழைக்கப்படுகிறது.

ஃப்ரண்டோ டெம்போரல் டிமென்ஷியா

மனித மூளையில் பெருமூளை இரண்டு அரைக்கோளங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பெருமூளையின் ஒவ்வொரு அரைக்கோளமும் நான்கு மடல்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முன் மடல் மற்றும் பொட்டு மடலில் பாதிப்பு ஏற்படுவதால் ஃப்ரண்டோ டெம்போரல் டிமென்ஷியா குறைபாடு ஏற்படுகிறது. இந்தக் குறைபாடு உள்ளவர்கள் புதிதாக காட்சி படைப்பூக்க திறன் பெறுவது குறித்தே இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மொழித் திறன் பாதிப்பு

டிமென்ஷியா குறைபாடு உள்ளவர்களில் படைப்பூக்க திறன் அதிகரித்திருப்போரை ஆய்வு செய்ததில் வார்த்தைகளை புரிந்துகொள்வது மற்றும் உச்சரிப்பதில் சிரமம் உள்ளவர்களுக்கே காட்சி படைப்பூக்க திறன் அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காட்சி படைப்பூக்க திறன் அதிகரித்திருக்கும் டிமென்ஷியா குறைபாட்டினரில் 58.8 சதவீதத்தினர் மொழித்திறன் பாதிக்கப்பட்டோராவார். அதாவது மொழித்திறன் பாதிக்கப்பட்டோரில் 10 பேருக்கு காட்சி படைப்பூக்கம் ஏற்பட்டிருக்கும்பட்சத்தில் நடத்தை சார்ந்த பாதிப்புள்ளோர் 3 பேருக்கும், உடலியக்கம் சார்ந்த பாதிப்புள்ளோரில் 4 பேருக்கும் காட்சி படைப்பூக்க திறன் அதிகரித்துள்ளது.

டிமென்ஷியா குறைபாடுள்ள 17 கலைஞர்களில் 8 பேர் முன்பு எவ்விதத்திலும் படைப்பூக்கம் சார்ந்த ஆர்வம் இல்லாதவராவர். 7 பேர் ஏதோ ஒருவகையில் காட்சி அல்லது காட்சி சாராத படைப்புகளில் ஆர்வம் கொண்டவர்கள். 2 பேர் ஏற்கனவே கலைஞர்களாயிருந்து, தற்போது படைப்பூக்க பாணியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
நோயின் அறிகுறிகள் அதிகமாகும்போதே காட்சி படைப்பூக்கம் தோன்றியுள்ளது என்று தலைமை ஆய்வாளர் ஃப்ரைட்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார்.

காட்சி படைப்பூக்கம் திடீரென தோன்றுவதற்கு படைப்பூக்கம் சார்ந்த சூழலில் நோயாளிகள் இருப்பதும் காரணமாக இருக்கலாம். கலையார்வம் இல்லாதவர்களைக் காட்டிலும் கலையார்வம் உள்ளவர்கள் அறிவுசார் சோதனைகளில் நன்கு செயல்படக்கூடும். என்று முதுநிலை ஆய்வாளரான புரூஸ் மில்லர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய பதிவுகள் :

இருபதாயிரம் ஆண்டுகள் பூமியில் உங்களால் உயிர் வாழ முடியுமா? ஆச்சரியமான ஆய்வு முடிவுகள்!
பாதுகாப்பான காற்று மாசு அளவென்பது ஒரு மாயை! எல்லாமே மூளைக்கு தீங்குதான்!!
கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு: காற்று மாசுபாடு காரணமா?
உடலுறவுக்குப் பிறகான செயல்பாடுகள் உங்கள் நெருக்கத்தைத் தீர்மானிக்கின்றன!! தம்பதிகளே தயாரா..?!
நொடிப்பொழுதில் கட்டுரை எழுதி தரக்கூடிய ChatGPT செயலியின் நுண்ணறிவு திருடப்பட்டு கட்டமைக்கப்பட்டதா? -...
நரம்பு தளர்ச்சி வர என்ன காரணம்?
Dengue Fever in Tamil (தமிழில் டெங்கு காய்ச்சல்)
Depression Meaning in Tamil 
சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை எங்கே கொண்டு செல்கின்றன?
பச்சை நிறமாக மாறிவரும் பெருங்கடல்கள்! நிலமல்லவா பசுமையாக இருக்க வேண்டும்…!! என்ன நடக்கிறது?
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *