fbpx
LOADING

Type to search

இந்தியா தொழில்நுட்பம் வர்த்தகம்

தாராவி குடிசை மாற்றுத் திட்டம்: எதிர்ப்புகளை மீறி ஏலத்தைக் கைப்பற்றியது அதானி குழுமம்! பலனடையப் போவது யார்?

இந்தியாவின் நிதித் தலைநகராக விளங்கும் மும்பையின் மையப்பகுதியிலிருக்கும் தாராவி உலகின் மிகப்பெரிய சேரிகளுள் ஒன்று. சுமார் 259 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் சுமார் ஒன்பது லட்சம் பேர் வாழ்கின்றார்கள். குறிப்பாகத் தமிழர்கள் அதிகமான எண்ணிக்கையில் வாழ்கின்ற பகுதி இது. இங்கே ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் மிக நெருக்கடியான குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறையின்றி வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம் மகாராஷ்டிர மாநில அரசு இந்தத் தாராவியில் 253 ஹெக்டேர் அதாவது 625 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பகுதியை நவீனமாக மாற்ற குஜராத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரரான அதானியின் நிறுவனத்துக்கு 619 மில்லியன் டாலருக்கு ஏலத்தை உறுதி செய்தது. உலகின் மிகப்பெரிய நகர்ப்புறப் புதுப்பித்தல் திட்டம் என இத்திட்டத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூற, இந்த மறு வடிவமைப்பு மூலம் தாராவியில் வாழும் மக்களுக்கு எரிவாயு, நீர், வடிகால், சுகாதாரம் மற்றும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் எனவும் இந்தியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பையிலுள்ள இந்தத் தாராவியை நவீன நகரமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியப் பணக்காரரான கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.

கடந்த இருபது ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்து வந்ததுதான் தாராவியின் குடிசை மாற்றுத் திட்டம். அதாவது தாராவியிலுள்ள குடிசைகளை அப்புறப்படுத்திவிட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் திட்டத்துக்கு இதற்கு முந்தைய ஆட்சியில் இருந்த அரசுகளெல்லாம் பலமுறை டெண்டர் விடுவதும் பின்னர் அவற்றை ரத்து செய்வதுமாக இருந்தன. இறுதியாக மகாராஷ்டிர அரசால் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் விடப்பட்ட டெண்டரில் அதானி குழுமம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு மகாராஷ்டிர அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அதோடு அதானி குழுமமும் நிதிச் சர்ச்சையில் சிக்க, அரசு தாராவி குடிசை மாற்றுத் திட்டத்துக்கான கடிதத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்தது.

இந்த நிலையில் தற்போது அதானி குழுமத்துக்குக் குடிசை மாற்றுத் திட்டத்தை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தியைத் தாராவி குடிசை புனரமைப்புத் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் தென்கொரியா, அமீரக நாடுகளின் நிறுவனங்கள் உட்பட சுமார் எட்டு நிறுவனங்கள்  இதற்கான ஏலத்தில் பங்கேற்றன. இறுதியில் மூன்று நிறுவனங்களைத்  தேர்வு செய்தது மறுசீரமைப்புத் திட்டக்குழு. இந்த நிலையில் இத்திட்டத்துக்கு 5069 கோடி ரூபாயினை அதானி குழுமம் டெண்டரில் குறிப்பிட்டிருந்தது. அதேவேளையில் டிஎல்எஃப் நிறுவனம் 2025 கோடி ரூபாயைக் குறிப்பிட்டிருந்தது. மொத்தத்தில் இத்திட்டத்தை நிறைவேற்ற 23 ஆயிரம் கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது.

இத்திட்டத்தைச் செயல்படுத்த அதானி குழுமம் மகாராஷ்டிர அரசை உள்ளடக்கிய கூட்டு நிறுவனத்தை முதலில் தொடங்க வேண்டும். இதில் 80% அதானி நிறுவனத்துக்கும் 20% அரசுக்கும் பங்கு இருக்கும். அதனால் அதானி குழுமம் சுமார் 400 கோடி ரூபாயை முதலீடு செய்ய வேண்டிவரும். இத்திட்டத்தின்படி தாராவியில் உள்ள 240 ஹெக்டேர் நிலத்தில் வசிக்கும் குடிசை வாசிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் இலவச வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். மீதமுள்ள பகுதியில் வீடுகளைக் கட்டி அதானி குழுமம் விற்பனை செய்து கொள்ளலாம். பணிகளைத் துவங்க அங்கு வசிக்கும் மக்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியிருப்பதால் ரயில்வேயிடம் உள்ள காலியான நிலத்தை மகாராஷ்டிரா அரசு விலைக்கு வாங்கியிருக்கிறது எனவும் அந்நிலத்தில் தற்காலிகக் குடியிருப்புகள் கட்டப்படும் எனவும் கூறப்படுகிறது.

 சுமார் 13,000 சிறு தொழில்களுக்கான இடமாகத் தாராவி உள்ளது. தாராவியில் குடிசைகளை மாற்றிக் குடியிருப்புகளை ஏற்படுத்த 90 களிலேயே திட்டமிடப்பட்டது. ஆனால் நிதிப் பற்றாக்குறை, மக்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக அத்திட்டம் தொடங்கப்படாமலே இருந்துவந்தது. மேலும் வேறு இடங்களுக்கு மாற்றினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அங்கு வாழ்ந்துவரும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அவர்களது கடும் எதிர்ப்புக்கு இடையில் 2008ஆம் ஆண்டு பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியின் போது தாராவி குடிசை மாற்றுத் திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டது. பின்னர் டெண்டர் துபாய் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. அதானி குழுமத்துக்கு டெண்டர் கிடைக்காததால் அது ரத்து செய்யப்பட்டதாக விமர்சனம் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அதானி குழுமத்துக்கு 5069 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தபோதும் அரசு டெண்டர் ஒதுக்கீட்டுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

 இதைத்தொடர்ந்து 23 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை விரைவில் அதானி குழுமம் தொடங்கும் எனவும் ஏழு ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் நிறைவடையும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திட்டம் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது தாராவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின்படி குடிசைகள் மாற்றப்பட்டால் மாடியுள்ள  குடிசைகளை வைத்துள்ளவர்கள் தங்களது வாடகை வருமானத்தை இழப்பார்கள். ஏனெனில் மாடிக் குடிசை வீட்டு உரிமையாளர் ஒரு வீட்டில் தான் தங்கிக்கொண்டு மற்றொன்றை வாடகைக்கு விட்டிருக்கிறார். ஆனால் அரசின் திட்டப்படி அடுக்குமாடிக் கட்டடத்தில் ஒரு வீடுதான் கிடைக்கும் என்கிறார்கள் அவர்கள்.  இங்கிருக்கும் 80 சதவீத மக்கள் தோல், கவரிங் நகை, இட்லி வியாபாரம் போன்ற சிறு தொழில்களை நம்பி வாழ்கிறார்கள். குடிசை மாற்றுத் திட்டத்தால் இந்தத் தொழில்கள் முடங்கிப் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிய வருகிறது. இது ஒரு மிகப்பெரிய நில ஊழல் என்றும் இதில் அதானி குழுமத்துக்கு 10 கோடி சதுர அடிக்கு  மேம்பாட்டு உரிமை மற்றும் 6 கோடி சதுர அடிக்கு விற்பனை செய்யும் உரிமை ஆகியவை கிடைக்கும் என்றும் கூறுகிறார் வக்கீல் சந்தீப் கட்ககே. மேலும் இதன் மூலம் 3 லட்சம் கோடி வருவாய் அதானி குழுமத்திற்குக் கிடைக்கும் என்றும் இந்தத் திட்டத்தால் அதானி குழுமத்துக்குத்தான் நன்மையே தவிர அங்கு வாழும் மக்களுக்கல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய பதிவுகள் :

டெல்லி - சான்பிரான்சிஸ்கோ ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரை இறங்கியது.
படங்களின் மூலம் தரவுகளைத் திருடும் ஆபத்தான புதிய ஆண்ட்ராய்ட் மால்வேர்
வரும் ஆண்டுகளில் இந்தியாவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் -  ஆய்வு முடிவு!
2023 செப்டம்பரில் நிகழவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர்கள் இந்திய அடையாளத்துடன...
சீனாவின் எரிபொருளுக்கு இலங்கை மக்களின் ஆதரவு இருக்குமா - நவீன வசதிகள் கொண்ட 150 Sinopec விற்பனை நிலை...
பேர்லினில் வளர்ப்புப் பராமரிப்பில் இருக்கும் குழந்தை அரிஹாவை திருப்பி அனுப்புமாறு ஜேர்மனிக்கு இந்திய...
தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம் - வேதாந்தம் பற்றிய சில உண்மைகள்.
மின்சார வாகனத் தொழிற்சாலைத் திட்டம்: இந்திய வர்த்தக அமைச்சருடன் டெஸ்லா பிரதிநிதிகள் சந்திப்பு
இந்தியாவின் பொறியியல் பட்டதாரிகளில் மூன்றில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்
பிபிசி நிகழ்ச்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது அமேசான்
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *