Dengue Fever Treatment in Tamil Nadu

English: Dengue Fever Treatment in Tamil Nadu
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை
தமிழ்நாட்டில் அவ்வப்போது டெங்கு நோய் தாக்குவதும் உயிர் இழப்புகள் நேர்வதும் நடந்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசும் பிற நிறுவனங்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. பெரும்பாலானோருக்கு டெங்கு நோய் தாக்கிய சில நாள்களில் கடுமையான காய்ச்சலும் உடல்வலியும் ஏற்பட்டுப் பின் சரியாகிவிடும். சிலருக்கோ இரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் (platelets) அழிந்து உடலுள் இரத்தக்கசிவு (haemorrhage) ஏற்படும். அச்சமயம் நோயாளிகள் உரிய மருத்துவச் சிகிச்சை பெறமுடியாமல் போனால் உயிரிழப்பு ஏற்படலாம்.
அலோபதி மருத்துவத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசெட்டோமால் பொன்ற காய்ச்சல் குறைக்கும் (antipyretics) மருந்துகளும் வலியைக் குறைக்கும் மருந்துகளும் தரப்படும். டெங்கு அதிர்ச்சிநிலை நோய்க்குறி (dengue shock syndrome) ஏற்படும் நோயாளிகளுக்கு நரம்பு மூலமாக நீர்மங்கள் ஏற்றப்படலாம். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.
டெங்கு தாக்கும் சமயங்களில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளின் மூலம் கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது. தேவை ஏற்படும்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அனைத்திலும் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்படுகின்றன. நோயாளிகளின் இரத்தத் தட்டணு எண்ணிக்கைப் பரிசோதனைக்குத் தேவையான கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
2012-ஆம் வருடம் சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்புப்பிரிவு தொடங்கப்பட்டது. தினம் அங்கே ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்றனர். டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு சிறந்த நிவாரணம் என இம்மையம் உறுதியாகக் கூறியது. ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் அரசு மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகளில் சித்த மருத்துவ சிகிச்சையும் தொடங்கப்பட்டது.
அலோபதி மருத்துவத்தில், டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்தவென்று தனியாக சிகிச்சை ஏதும் இல்லை. சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகள் டெங்கு காய்ச்சலிலிருந்து மீள்வதாலும் இச்சிகிச்சையால் பக்கவிளைவுகள் இல்லை என்பதாலும் டெங்குவின் தாக்கம் மிக அதிகமானபோது அரசு மருத்துவமனை டெங்கு வார்டுகளில் சிகிச்சை பெறுவோருக்கு அலோபதி சிகிச்சையுடன் சித்த மருத்துவ சிகிச்சையும் கொடுக்கப்பட்டது.
மாநிலத்திலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கு நிலவேம்புத் தூள் அனுப்பப்பட்டது. டெங்கு வராமல் தடுக்கவும் காய்ச்சலைக் குறைக்கவும் நிலவேம்புக் குடிநீர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு கட்டணமின்றி வழங்கப்பட்டது. இரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க டெங்குவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் டெங்கு நோயாளிகளுக்கு பப்பாளி இலைச்சாறு வழங்கப்பட்டது.
சித்த மருத்துவத்தின் மூலம் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டது. நிலவேம்பு, வெட்டிவேர், விளாமிச்சை வேர், பற்பாடகம், சந்தனம், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு ஆகிய மூலிகைகளைக் கொண்டு நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது. டெங்கு வந்தவர்கள் மட்டுமின்றி, சாதாரணக் காய்ச்சல் வந்தவர்களும் கூட நிலவேம்புக் குடிநீர் அருந்தலாம். இது பொதுவான நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது; இதற்குப் பக்க விளைவுகளும் ஏதும் இல்லை. மேலும் மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே நிலவேம்புக் குடிநீர் சிறந்த மருந்து என ஒப்புதல் அளித்துள்ளன. இந்தக் காரணங்களால் தமிழ்நாட்டில் பெரும்பாலோனோர் நிலவேம்புக் குடிநீரை அருந்தத் தொடங்கி உள்ளனர். காய்ச்சல் வந்தோர் மருத்துவமனைக்குச் சென்று காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றாலும் கூட வீட்டில் நிலவேம்புக் குடிநீர் அருந்துவதையும் தற்போது வழக்கமாகி வருகிறது.