அமில ரிப்ளக்ஸ் மருந்துகளைப் பயன்படுத்தினால் டிமென்ஷியா அதிகரிக்கலாம்! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

தொடர்ந்து நான்கு வருடங்களுக்கும் மேலாக அமில ரிப்ளக்ஸ் மருந்துகளை உட்கொள்பவர்கள் பிற்காலத்தில் டிமென்ஷியாவால் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நரம்பியல் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரையில் அமில மருந்துகள் டிமென்ஷியாவை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு முடிவுகள் நேரடியாக நிரூபிக்கவில்லை என்றாலும் அவற்றின் நீடித்த பயன்பாடு டிமென்ஷியாவை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களில் குறிப்பாக எண்பத்தைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்களில் மூன்றில் ஒருவரை டிமென்ஷியா பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வில் 5,700 க்கும் மேற்பட்டவர்கள் உட்படுத்தப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் சராசரியாக எழுபது வயதுடையவர்கள். ஆய்வின் தொடக்கத்தில் அவர்களுக்கு டிமென்ஷியா அறிகுறிகள் இல்லை. தொடர்ந்து 5.5 ஆண்டுகள் ஆராய்ச்சியாளர்களால் அவர்கள் கண்காணிக்கப்பட்டிருக்கிறார்கள். அமில ரிப்ளக்ஸ் மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் எத்தனை காலம் அவற்றை உண்டார்கள் என்பதன் அடிப்படையில் நான்கு குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். வயது, பாலினம் மற்றும் சுகாதார நிலைமைகளின் அடிப்படையில் 4.5 ஆண்டுகள் பிபிஐ-களை அதாவது புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்களை எடுத்துக் கொண்ட 497 பேரில் 58 பேர் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். குறைந்தபட்சம் 4.4 ஆண்டுகள் இவ்வகை மருந்துகளை உட்கொண்டவர்கள் டிமென்ஷியாவின் அதிக விகிதங்களைக் கொண்டிருந்தார்கள்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மூலம் நிதியளிக்கப்பட்ட இந்த ஆய்வானது பிபிஐகளின் அதிகப்படியான பயன்பாடு அதிகப்படியான டிமென்ஷியாவுடன் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்துள்ளது. அதாவது பிபிஐ பயன்பாடு என்பது பலவீனமான சிந்தனை மற்றும் மோசமான நினைவாற்றலுடன் தொடர்புடையது என்று தெரிய வந்துள்ளது. மேலும், இந்த வகையான மருந்தை எடுத்துக் கொள்ளாதவர்களுடன் ஒப்பிடும்போது மருந்தை எடுத்துக் கொண்டவர்களுக்கு டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்பு 33 சதவீதம் அதிகமாக இருந்துள்ளது.
உலக அளவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் பிபிஐ-களும்(புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்கள்) அடங்கும். இவை அமில ரிப்ளக்ஸ் அதாவது இரைப்பை மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் அமில எரிச்சலைப் போக்கப் பயன்படுகின்றன. வயிற்றுப்புண்கள் காரணமாக உணவுக்குழாயில் ஏற்படும் சேதங்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு இவை பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த பிபிஐ-கள் வயிற்று அமிலத்தின் அளவைக் குறைக்கப் பயன்படுகின்றன. நம்முடைய வயிறு நாம் உண்ணுகின்ற உணவை ஜீரணிக்கவும் பாக்டீரியாவை அகற்றவும் அமிலத்தை உருவாக்கும். ஆனால் சில சமயங்களில் இந்த அமிலம் அதிகப்படியாக உருவாக்கப்படுகிறது. அப்போது நமக்கு நெஞ்செரிச்சல், வாயில் கசப்பு மற்றும் புளிப்பு சுவை கூடுதல், குமட்டல், வாந்தி, தொண்டை வலி, கெட்ட சுவாசம், எச்சில் விழுங்குவதில் சிரமம் போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். இந்தச் சமயங்களில்தான் பிபிஐகள் எனப்படும் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இவற்றில் பலவகைகள் மற்றும் பிராண்டுகள் உள்ளன. அவற்றுள் ஓமேபிரசோல், எசோமெபிரசொல் மற்றும் லான்சோபிரசோல் ஆகியவை அடங்கும். பக்கவிளைவுகளோ மருந்துக்கு மருந்து வேறுபடும்.
இதில் கொடுமை என்னவென்றால் பெரும்பாலான நோயாளிகள் தெளிவான காரணம் இல்லாமல் பிபிஐகளை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான். இவற்றைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது சிறுநீரகம், கல்லீரல், இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இப்படி நெஞ்செரிச்சலுக்குத் தரப்படும் பிபிஐ மருந்துகள் கடுமையான அறிவாற்றல் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதுதான் சமீபத்திய ஆய்வு சொல்லும் செய்தி. இம்மருந்துகளை எடுத்துக்கொண்டால் டிமென்ஷியாவின் பாதிப்பு அதிகரிக்கலாம் என்பதே அந்த ஆய்வின் முடிவு. அதாவது நினைவாற்றல் அல்லது செறிவு இழப்பு, மூளைத் திறன் குறைதல் மற்றும் மனநிலை பாதிப்பு போன்ற பல வகைகளில் பாதிப்பு ஏற்படலாம். இது அதிகரித்தால் அல்சைமர் என்னும் கொடிய பாதிப்பும் ஏற்படலாம்.
மேலும் பிபிஐயினால் பி12 குறைபாடு ஏற்படும் என்றும் அக்குறைபாட்டால் மன உளைச்சல் அதிகரிக்கும் என்றும் அந்தப் புதிய ஆய்வு கூறுகிறது. பொதுவாகவே அன்றாட உணவில் வைட்டமின் பி12-ஐ வழங்கும் உணவுகளை நாம் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறோம். ஆனால், தினந்தோறும் மனிதர்களுக்கு 2.4 மைக்ரோகிராம் அளவு மட்டுமே வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. இது மிகவும் குறைவானதே என்றபோதும் பி12-ன் இந்த அளவு குறைந்தாலும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். பல்வேறு நரம்பியல் பிரச்னைகள், குழப்பம், உணர்வின்மை, ஞாபக மறதி, சமநிலையைக் கடைபிடிப்பதில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இந்த விட்டமின் பி12 குறைபாட்டைச் சரிசெய்யாவிட்டால் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் யாவும் நிரந்தரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
உண்மையில் பிபிஐ மருந்துகளில் பாதிப்புகள் இருப்பதால் டாக்டர்களால் அவை பரிந்துரைக்கப்படக்கூடாது எனவும் அமிலம் உள்ள உணவுகளான கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் அல்லது சர்க்கரை பானங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் முறையான உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும் எனவும் உணவு உண்ட உடனே உறங்க வேண்டாம் எனவும் கூறுகிறார் டாக்டர் படஸ்கர். ஆக, பிபிஐ பயன்பாட்டைத் தவிர்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. மொத்தத்தில் எதற்கெடுத்தாலும் மாத்திரைகள் மருந்துகள் என்று அவற்றின் பின்செல்லாமல் உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் மட்டுமே இத்தகைய நோய்களுக்கு ஆட்படாமல் மனிதகுலம் தப்பிக்க முடியும்.