கடன் அட்டை வழங்கும் ஸ்விகி! கேஷ் பேக் ஆஃபர்கள், டெலிவரி சார்ஜ் நீக்கம் என்று சலுகைகளை அள்ளி வழங்கிபடி அறிமுகம்!!

போன தலைமுறை ஆட்களிடம் கடைகளில் இருந்து சாப்பாட்டு பொட்டலங்களை வாங்கி வந்து வீட்டில் தருவது ஒரு கார்ப்பரேட் பிஸினசாக உருவாகும் என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் சிரித்திருப்பார்கள். கற்பனையிலும் நினைக்காத ஒரு தொழில் வாய்ப்பு இந்த உணவு டெலிவரி களம்.
புட் பாண்டா என்ற நிறுவனம் முதன் முதலில் ஹோட்டல்களில் வரும் பார்சல் ஆர்டர்களை டெலிவரி செய்யும் பணியோடு தொடங்கிய இந்த பிஸினஸ் இப்போது பல கோடிகள் புரளும் ஒரு அமைப்பு!
ஸ்விகியின் கடன் அட்டை!
இப்பொழுது இந்த துறையில் ஸ்விகி மற்றும் ஜொமேட்டோ போன்ற நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன. இதில் ஸ்விகி நிறுவனம் தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கென்று பிரத்யேகமான கடன் அட்டை (கிரெடிட் கார்டு) வழங்க இருக்கிறது.
ஸ்விகியின் இந்த முன்னெடுப்பு இந்தத் துறையில் ஸ்விகியின் ஆளுமையை அதிகரிக்கும் என்றும் பொதுவான வாடிக்கையாளர்கள் ஸ்விகியின் வட்டத்திற்குள் ஈர்க்கப்பட வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்விகி, ஹெஸ்டிஎஃப்சி (HDFC) வங்கியுடன் இணைந்து இந்த கடன் அட்டை திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
என்னென்ன சலுகைகள் உண்டு?
ஸ்விகியின் இந்த கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ஸ்விக்கியில் செலவழித்ததில் 10% பணத்தை திருப்பித் தரும் கேஷ் பேக் ஆஃபரை வழங்க இருக்கிறது. மேலும், Amazon, Adidas, Zara, Flipkart, Nike, Uber மற்றும் BookMyShow உள்ளிட்ட 1,000 க்கும் மேற்பட்ட ஸ்விகியின் கூட்டாளர் தளங்களில் 5% பணத்தை கேஷ் பேக்காக வழங்கும் என ஸ்விகி தெரிவித்துள்ளது.
மாஸ்டர்கார்ட் மூலம் இயக்கப்படும் இந்த கடன் அட்டை, ஸ்விகி ஒன் என்ற திட்டத்திற்க்கு மூன்று மாத சந்தாவை வழங்குகிறது. ஸ்விகி ஒன் என்பது ஸ்விகியின் டெலிவரி கட்டணங்களைத் தள்ளுபடி செய்யும் ஒரு திட்டமாகும். மேலும், இந்த கடன் அட்டை கொண்டு செய்யப்படும் மற்ற எல்லாச் செலவுகளிலும் 1% பணத்தைத் திரும்பப் பெறும் சலுகையும் உண்டு என்று ஸ்விகி தெரிவித்துள்ளது.
இந்த கடன் அட்டையால் ஸ்விகிக்கு நிகழவிருக்கும் நன்மைகள் என்ன?
புதிய வாடிக்கையாளர்கள் பெரும் எண்ணிக்கையில் ஸ்விகியில் சேர வாய்ப்பு உள்ளது. மேலும், பழைய வாடிக்கையாளர்கள் தங்களது செலவழிக்கும் வரம்பை அதிகரிக்கவும் பெரும் வாய்ப்புள்ளது.
தனது தொழில் போட்டியாளரான சொமேட்டோவுடன் ஒப்பிடுகையில் இது ஒரு நல்ல புதிய முயற்சி என்றே கொள்ளலாம். சொமேட்டோ முற்காலங்களில் இதே போன்ற சலுகைகளை அறிமுகப்படுத்தி வந்தது.
வாடிக்கையாளர்கள் கருத்தில் கொள்ளவேண்டியது என்ன?
கடன் அட்டையால் திவாலான குடும்பங்கள் உண்டு. இப்போது புதிய தொழில்நுட்ப வளர்ச்சியாக!? பக்கத்தில் இருக்கும் கடைகளில் இருந்து பார்சல்களை வாங்கி வரும் சேவையையும் நாம் அனுபவித்து வருகிறோம். இந்த் இரண்டு திட்டங்களும் கைகோர்ப்பதில் வாடிக்கையாளர்களின் பர்சுகள் பதம் பார்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
கட்டுப்பாடான வாங்கும் தன்மை, அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் இதுபோன்ற சேவைகளைப் பயன்படுத்துதல் போன்றவை மட்டுமே வாடிக்கையாளர்களை காப்பாற்றும்.
இதுபோன்ற தொழில்கள் உருவாவது காலத்தின் கட்டாயம். இந்த சேவைகள் முதியோர்கள் மற்றும் தொழில் நிமித்தம் நேரம் செலவிட இயலாதோருக்கு பெரும் வரப்பிரசாதம். ஆனால், தேவையற்ற ஆடம்பரம் மற்றும் சோம்பேறித்தனத்திற்கு இந்த சேவைகளைப் பயன்படுத்துவதை நம் மக்கள் சற்றே குறைத்துக்கொள்ள வேண்டும்.