கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு: காற்று மாசுபாடு காரணமா?

செய்தி சுருக்கம்:
முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கட்டுபடுத்த கடுமையாக போராடி வரும் நிலையில் அடுத்த அச்சுறுத்தல் ஆரம்பமாகியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக காற்று மாசு தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்ட பின்பு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கு காற்று மாசும் ஒரு முக்கியமான காரணம் என்று சர்வதேச அளவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன.
காற்று மாசுபடுவதற்கு காரணம்:
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைகள், சுத்திகரிக்க முடியாத எரிபொருட்களை பயன்படுத்தும் போது வெளியாகும் புகைகள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியாகும் ஓசோன், நைட்ரஜன் ஆக்சைடு உள்ளிட்ட மாசுகளுக்கு நீண்டகாலம் ஆளாவதற்கும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமாவதற்கும் தொடர்பு இருப்பதாக பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
காற்று மாசுபாடின் பாதிப்பு:
ஒரு கியூபிக் மீட்டர் பரப்பளவில் உள்ள காற்றில் ஒரே ஒரு மைக்ரோகிராம் அளவுக்கு, மாசை உண்டாக்கும் பி.எம் 2.5 துகள்கள் அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் மரண விகிதம் 8% அதிகரிக்கும் என அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இத்தகைய மாசுகள் மூச்சுக் குழாயை இலக்கு வைத்து பாதிக்கும் வைரஸ் தொற்றுக்களின் தீவிரத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் அழற்சியை உண்டாக்கும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைகழக ஆய்வு தெரிவிக்கிறது.
முடக்க நிலை அமலான காலத்தில் வாகனங்கள் மற்றும் தொழில் நடவடிக்கை எதுவும் இல்லாததால் மக்கள் சற்று சுத்தமான காற்றை சுவாசித்து வந்தார்கள். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்களுக்கு காற்று மாசு மேலும் நிலைமையை மோசமாக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேற்கண்ட பாதிப்புகள் எதுவும் இல்லாதவர்கள் நோய் எதிர்ப்பு திறனைக்கூட காற்றுமாசு கடுமையாக குறைத்துவிடும்.
காற்று மாசு அதிகரித்துள்ளதால் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளவர்கள் குணமடைவது தாமதமாகும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தியா தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்திலும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
எனினும் இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் இந்தியாவில் குறைவாக உள்ளது. ஆனாலும் காற்று மாசு அதிகரித்தால் இறப்பு விகிதமும் அதிகரிக்க வாய்ப்புண்டு என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
எந்தெந்தப் பகுதிகளில் எல்லாம் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் காற்று மாசடையாமல் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டியுள்ளது என்பது இந்த ஆய்வின் முடிவுகளில் தெரிய வந்தது. அரசு காற்று மாசைக் குறைப்பதற்கான உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.