மூளை மையங்களைத் தூண்டுவதன் மூலம் நோயாளியை மருந்துகளின்றி மயக்கத்தில் ஆழ்த்த இயலும்! ஆய்வு சொல்லும் அதிசயம்!!

மருத்துவம் தோன்றிய காலத்தில் இருந்தே வலி மறப்பு மருந்துகள் மற்றும் மயக்க மருந்துகள் குறித்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. இன்று போதை மருந்துகளாக கருதப்படும் பல ஆங்கில மருந்துகளும், கஞ்சா போன்ற இயற்கைப் பொருட்களும் ஆரம்ப காலத்தில் மருத்துவத்தில் மயக்க மருந்தாக பயன்பட்டவைதான்.
மயக்க மருந்துகளைப் பயன்படுத்துகையில் ஏற்படும் ஒரு அனுபவம் எந்த மருந்தையும் பயன்படுத்தாதவர்களுக்கும் ஏற்பட்டதைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் அத்தகைய உணர்வு ஏற்படக் காரணம் என்ன என்று ஆராய முற்பட்டனர். முடிவில் அதற்குக் காரணம் மூளையின் ஒரு மையம் என்பதைக் கண்டறிந்துள்ளனர். அதைப் பற்றி விரிவாகக் கீழே பார்க்கலாம்.
உடலைத் தாண்டிய அனுபவம்
மயக்க மருந்துகளைப் பயன்படுத்துகையில் சில நோயாளிகள் அவுட் ஆப் பாடி எக்ஸ்பீரியன்ஸ் என்று சொல்லக்கூடிய அனுபவத்தை அடைந்தனராம். அவுட் ஆப் பாடி எக்ஸ்பீரியன்ஸ் (Out of Body Experience) எனப்படும் உடலைத் தாண்டிய அனுபவம் குறித்து நாம் அறிந்திருப்போம். இந்த உணர்வு வருகையில் நாம் பறப்பது போலவோ அல்லது பூமியில் நாம் அப்படியே நழுவிச் செல்வது போலவோ அனுபவம் ஏற்படும்.
இந்த உணர்வு ஏற்பட்டவுடன் ஒருவர் தரையில் இருந்து விலகிச் செல்வது போலவும், உடலில் எடை இல்லாமல் இருப்பதுபோலவும் உணரலாம். பின்னர், தனது உடலை மேலே இருந்து அவரே வேறொருவரைப் போல பார்ப்பதாகவும் உணருவார். உலக மக்கள் தொகையில் 5 முதல் 10 சதவீதம் மக்களுக்கு இந்த அனுபவம் நிகழ்கிறது.
அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்தை எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கும் இத்தகைய ‘உடலைத் தாண்டிய உணர்வு’ ஏற்பட்டதாம்.
வலிப்பு நோயாளியின் உடலைத் தாண்டிய அனுபவம்
2019 ஆம் ஆண்டில், வலிப்பு நோயாளி ஒருவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணரும், இந்த ஆய்வின் மூத்த ஆசிரியருமான ஜோசப் பர்விசியை சந்தித்தார், அந்த நோயாளி அவ்வப்போது மிதப்பது போல உணர்ந்ததாக மருத்துவரிடம் தெரிவித்தார்.
நோயாளி தன்னையே தான் ஒரு பார்வையாளர் போல பார்க்க முடிவதாக தெரிவித்தார். பர்விசி கூறுகையில், “வலிப்பு நோயின் காரணமாக நோயாளியின் மூளையில் எந்தப் பகுதி அசாதாரணமான செயல்பாட்டிற்கு உட்படுகிறதோ அந்த பகுதியே இத்தகைய அனுபவத்திற்குக் காரணம்” என்றார்.
மூளையின் மையமும் உடலைத் தாண்டிய அனுபவமும்
வலிப்பு நோயாளிக்கு அத்தகைய உடலைத் தாண்டிய அனுபவத்தை வழங்கியது மூளையின் ‘முன்புற ப்ரிகுனியஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு பாகம் ஆகும். இதை முழுமையாக உறுதி செய்ய எட்டு வலிப்பு நோய் கொண்ட தன்னார்வலர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நோயாளிகள் தங்கள் மூளையில் ஏற்கனவே மின்முனைகள் செருகப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். எனவே இந்த ஆய்வுக்கு இவர்கள் முழுமையான பங்களிப்பை வழங்க முடிந்தது.
விஞ்ஞானிகள் மூளையின் இந்த முன்புற ப்ரிகுனியஸ் பகுதிக்கு மின்சார துடிப்புகளை அனுப்பியபோது, தன்னார்வலர்களுக்கு உண்மையான உடல் அனுபவங்கள் இல்லை, ஆனால் அவர்கள் மிதப்பது அல்லது விழுவது போல் உணர்ந்தனர். அவர்கள் மயக்கம் மற்றும் கவனம் குறைவாக உணர்வதாக தெரிவித்தனர்.
எனவே, முன்புற ப்ரிக்யூனியஸ் என்பது ஒரு நபரின் உடல் உணர்வின் இடமாக இருக்கலாம் என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
மயக்க மருந்துக்கு மாற்றாக மூளை மையம்!
எனவே, இந்த முன்புற ப்ரிகுனியஸ் மையம் எதிர்காலத்தில் மருத்துவ நடைமுறைகளின் போது மயக்க மருந்துகளுக்கு மாற்றாக செயல்படலாம்.
ஆய்வில் பங்கேற்பாளர்களுக்கு மூளையின் இந்த பகுதியைத் தூண்டுவது மூளையின் செயல்பாட்டை மெதுவானதாக மாற்றியது. இது அறுவை சிகிச்சைக்கு முன்பாக நோயாளிகளுக்கு வழங்கப்படும் மயக்க மருந்துகள் ஏற்படுத்தும் விளைவுகளை ஒத்திருந்தது.
பொது மயக்க மருந்துக்கான பெரும்பாலான மருந்துகள் முழு உடல் மற்றும் மூளை முழுவதும் பயணிப்பதால் உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. மூளையின் இந்தப் பகுதிக்கு மின்சாரத் துடிப்புகளை அனுப்புவதன் மூலம், குறைவான பக்கவிளைவுகளுடன் மயக்க மருந்துக்கான புதிய முறைகளை விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் வடிவமைக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூளை என்பது ஒரு நாடாளுமன்றக் கட்டிடம் என்றால் நாமெல்லாம் அதன் வராண்டாவின் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறோம். ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் கூடுதலாக ஒரு அறையை பயன்படுத்தினார்கள் என்று கொள்ளலாம். மூளையின் சக்தி அளப்பறியது. அதைக் கொண்டு பக்கவிளைவுகளற்ற மயக்க முறையை கண்டறிவது ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்க நிச்சயம் உதவும்.