fbpx
LOADING

Type to search

இந்தியா சிறப்புக் கட்டுரைகள்

தமிழகத்தில் மூடப்படும் 500 மதுபானக் கடைகள் – விளைவுகளும் நிரந்தரத் தீர்வும்.

செய்திச் சுருக்கம்

தமிழகத்தில் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்படும் நிலையில் அதில் தகுதியான 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று துறை அமைச்சரான செந்தில்பாலாஜி முன்னரே அறிவித்திருந்த நிலையில் அதற்கான அறிவிப்பு கடந்த 22-06-2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. 

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

முன்னரே தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தபடி, நாடு முழுவதும் உள்ல 500 டாஸ்மாக் மதுக்கடைகள் 22-06-2023 முதல் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. உள்துறை சார்பில் இதற்கான அரசாணை கடந்த ஏப்.20-ம் தேதி வெளியிடப்பட்டது. 

எந்த குழப்படிகளுமின்றி இந்த கடைகள் மூடப்படுவதை மாவட்டஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று அரசாங்கத்தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

. இதில், சென்னை மண்டலத்தில் 138 கடைகள், கோவை மண்டலத்தில் 78 கடைகள், மதுரை மண்டலத்தில் 125 கடைகள், சேலம் மண்டலத்தில் 59 கடைகள், திருச்சி மண்டலத்தில் 100 கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த 500 கடைகளை மூடுவது குறித்து அனைத்து மாவட்ட டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் எஸ்.விசாகன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் பரிந்துரைத்துள்ளபடி, குறைந்த வருவாய் உள்ளவை, குறைந்த இடைவெளியில் அருகருகே உள்ளவை, வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ளவை, நீதிமன்ற உத்தரவு உள்ளவை, நீண்ட நாளாக பொதுமக்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் கடைகள் என்ற அடிப்படையின் கீழ் மொத்தம் 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கடைகள் ஜூன் 22-ம் தேதி முதல் மூடப்பட வேண்டும். இக்கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு மறுபணி குறித்த உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.

டாஸ்மாக் வரலாறு

தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி, அரசின் நிதிநிலை மோசமாக இருப்பதாகவும், மதுவிலக்கை பின்பற்றுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டவேண்டியும் கூடுதல் நிதி வழங்கக்கோரி பிரதமர் இந்திரா காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார். 

பிரதமர் இந்திரா காந்தியால் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மதுவிலக்கை புதிதாக அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதியளிக்க முடியும் என்று இந்திராகாந்தி புது விளக்கத்தையும் அளித்தர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்த பூரண மதுவிலக்கு விலக்கிகொள்ளப்பட்டு, 1971ம் ஆண்டும் ஆகஸ்டு 31ம் தேதி கள் மற்றும் சாராயக் கடைகள் தமிழ்நாட்டில் மீண்டும் திறக்கப்பட்டன. 

அன்றைய நாளில் ஒரு லிட்டர் சாராயம் பத்து ரூபாய், ஒரு லிட்டர் கள் ஒரு ரூபாய்! தமிழ்நாடு முழுவதும் தாலுகா வாரியாக 139 மொத்த வியாபாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கீழ் சில்லறை வியாபாரிகள் இருப்பார்கள். இந்த மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு அந்நாளில் 26 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 

கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான முதல்வர் கருணாநிதி மீண்டும் 1974 செப்டம்பர் 4ல் மீண்டும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழ்நாட்டின் முதல்வரான எம்ஜிஆர், 1981 ஆம் ஆண்டு பூரண மதுவிலக்கை விலக்கிகொண்டதோடு, வெளிநாட்டு மதுவகைகளை தயாரிக்க 10 நிறுவனங்களுக்கு அனுமதியும் அளித்தார்.

1983 ஜூலையில் டாஸ்மாக் நிறுவனத்தைத் தொடங்கினார் எம்ஜிஆர். மதுவை மொத்தமாக விற்பனை செய்யும் பணிகளை மேற்கொண்டு வருவாயை உயர்த்தியது. இதிலும், மது விற்பனை செய்வதற்கான அனுமதியை அரசு தமக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டுமே வழங்குவதாக விமர்சனம் எழுந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, 1989-ல் மலிவு விலை மதுவை அறிமுகம் செய்தார். அதற்குப் பெண்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழவே, பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதனை ரத்து செய்தார். 

மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி அரசு 1997ஆம் ஆண்டில் நூறு மில்லி பாட்டில்களில் மதுவை அடைத்து விற்கும் முடிவை எடுத்தார். 2001-ஆம் ஆண்டில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது 4,500 மதுக்கடைகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் 2003-ஆம் ஆண்டில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தார் ஜெயலலிதா. அப்போதிலிருந்து தமிழ்நாடு அரசு, 2003 முதல் டாஸ்மாக் வழியாக மதுவை நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கியது. 

அவ்வப்போது பூரண மதுவிலக்குக் கோரிக்கை தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கும் பிறகு அடங்கிவிடும். அதுபோலவே, கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலில் பூரண மதுவிலக்கு கோரிக்கை விஸ்வரூபம் எடுத்தது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி காந்தியவாதி சசிபெருமாள் போராடி உயிரிழந்தார். 

பாமக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ஆட்சிக்கு வராத கட்சிகள் மட்டுமே பூரண மதுவிலக்கைப் பற்றி பேசி வந்த நிலையில் 2016 திமுக தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பும் வெளியானது. 

இந்த நிலையில் 2016 தேர்தலில் ஆட்சியமைத்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு முதற்கட்டமாக சிலநூறு மதுக்கடைகளை மூடவும் செய்தது. ஆனால், 2021-ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் முன்பு குறிப்பிடப்பட்டிருந்த பூரண மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது ஆச்சரியம்தான். 

இப்பொழுது டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் கூடுதலாகப் பெற்று வந்தது சர்ச்சையான நிலையில், துறை அமைச்சரது வீடுகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, கைது செய்யும் நிலைக்குச் சென்றது. 

அரசாங்கத்திற்கு வருமானம் மட்டுமே நோக்கமாக இருக்கலாமா?

கள்ளச்சாராயச் சாவுகளைத் தடுக்கவும், வருவாயைப் பெருக்கவும் அரசாங்கம் கள்ளுக்கடைகளையும் உள்ளூர் சாராயக் கடைகளையும் தடை செய்து, அரசாங்கத்தின் சார்பாக டாஸ்மாக் கடைகளை திறந்தது. மது அருந்தினால் அவனால் வாகனம் ஓட்ட முடியாது என்று தெரிந்து அவனுக்கு அபராதம் விதிக்கும் அரசாங்கத்திற்கு மது அருந்தியவனால் குடும்பத்தை நடத்த முடியாதே என்ற உண்மை உறைக்கவில்லை. 

முன்பெல்லாம் ஊருக்கு ஒரு மதுக்கடை இருந்தது. குடிப்பழக்கம் என்பது சமூகத்தில் இழிவாகப் பார்க்கப்பட்டது. இன்று அந்த நிலை இல்லை. பள்ளி மாணவர்கள் கூட மதுப்புட்டியுடன் திரியும் காட்சிகளைக் கண்ணுற்று வரும் காலம் இது. தமிழ்நாட்டின் ஆட்சிக்கட்டிலில் இருந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி கொள்கைகளை உருவாக்கி, மொத்த மாநிலத்தையும் குடி அடிமைகளின் கூடாரமாக மாற்றி உள்ளது. 

தீர்வுதான் என்ன?

வருவாய் இழப்பை நேர்செய்ய மாற்று வருவாய் ஏற்பாடுகளைக் காண வேண்டும். 1983ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு 183 கோடியாக இருந்த நிலையில் 2019ஆம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் 21 ஆயிரத்து 828 கோடியாகவும் 2020ஆம் ஆண்டில் 30ஆயிரம் கோடியாகவும் அதிகரித்திருக்கிறது. 

தமிழ்நாட்டின் நிதி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வருவாய் டாஸ்மாக் கடைகள் மூலமே தமிழக அரசு ஈட்டி வரும் நிலையில் தமிழ்நாட்டில் மது விற்பனையை குறைக்க வேண்டியது அரசு மற்றும் பொதுமக்களின் தார்மீகக் கடமையாகும். 

சுற்றுலா, மென்பொருள் ஏற்றுமதி, மருத்துவச் சுற்றுலா, மதிப்பு கூட்டு வேளாண்மைப் பொருட்களின் ஏற்றுமதி போன்ற மாற்று ஏற்பாடுகள் மூலமாக வருவாயை அதிகரிக்க வழிதேட வேண்டும். 

கூட்டம் கூட்டமாக உருவாகி இருக்கும் குடி அடிமைகளின் நிலை என்ன? 

வரலாற்றில் கேலிக்கூத்தான எத்தனையோ சம்பவங்களைப் பார்க்க இயலும். மன்னன் ஒருவன் தன் நாட்டின் தலை நகரத்தைத் தன் மனப்போக்கின்படி மாற்றி, மக்கள் அனைவரும் புதிய தலை நகரத்தில் குடியேறியே ஆகவேண்டும் என்று ஆணையிட்டான். அதனால் மக்களனைவரும் பலநூறு மைல்கள் நடந்தே புதிய தலைநகருக்கு இடம்பெயர்ந்து செல்ல முயன்று செத்து அழிந்தனர். அடடா இப்படி சாகிறார்களே என்று வருந்தி, மறுபடியும் தலைநகரை பழைய இடத்திற்கே மாற்றி மன்னன் ஆணையிட, மீண்டும் மக்கள் இடம்பெயரத் தொடங்க,  மீதம் இருந்தோரிலும் கணிசமானோர் மாண்டனர். இப்போது பார்க்கையில் இந்நிகழ்வு நகைச்சுவையாகத் தோன்றினாலும் அதில் உயிரிழந்தோர் சந்ததிக்கு இது நிச்சயமாக நகைச்சுவை இல்லை என்பது தெளிவு. 

இத்தனை ஆண்டுகால குடி வாழ்க்கையில் சோகமும் கொண்டாட்டமும் தமிழ்நாட்டு மக்களுக்கு மதுவின்றி அமைவதில்லை. இந்த நிலையை இனி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற இயலும். 

மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து மது அடிமைகள் மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கையை கூட்ட வேண்டும். போதை அடிமைகள் மீட்பு மையங்கள் அரசாங்கத்தின் சார்பில் தாலுகா தோறும் திறக்கப்பட வேண்டும். 

இல்லையேல், வருங்கால சந்ததியினரின் குற்றச்சாட்டுகள் நம் கல்லறையிலும் எதிரொலிக்கும். மறக்கவேண்டாம்.

தொடர்புடைய பதிவுகள் :

இந்த விலங்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்போது அது திரும்...
கிழக்கு இந்தியாவில் ரயில் தடம் புரண்டதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
இ-சிகரெட் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு 30 நாட்களில் கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்படும்!  எச்சரிக்கும...
கனகசபையால் ஏற்பட்ட கலவரம்! சிதம்பரம் கோயில் சர்ச்சை விவரங்கள்!!
சந்திராயன்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, பின்னணியில் தமிழக ரயில்வே தொழிலாளியின் ம...
உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க உடலுறவு அவசியமா? நெருக்கமும் உடலுறவும் ஒன்றா..? வித்தியாசத்தைத் த...
கச்சா எண்ணெய்ப் பரிவர்த்தனைகளைத் தேசிய நாணயங்களில் தீர்க்க  இந்தியா மற்றும்  ஐக்கிய அரபு அமீரகம் முட...
நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதால் குன்றி நிற்கும் குழந்தைப்பருவம் பற்றிய ஆய்வு சொல்வதென்ன..?!
மருந்துகளைச் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள உதவும் பில் ட்ராக்கர்: இந்திய வம்சாவளி மாணவி சாதனை
செவ்வாய் கிரகம் கடலால் சூழப்பட்டிருந்ததா..? செவ்வாயில் உயிர்கள் உள்ளனவா..? இக்கிரகத்திலுள்ள நிலச்சரி...
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *