fbpx
LOADING

Type to search

அறிவியல் உலகம் தெரிவு பல்பொருள்

பருவமழையில் ஏற்படும் பகீர் மாற்றங்கள்! 

நமக்கு நன்றாக நினைவிருக்கும், சென்ற தலைமுறை காலத்தில் பருவ மழைக்காலங்கள் என்பவை குளிரான, நச நச என்று மழை தூரிக்கொண்டே இருக்கின்ற நாட்களாக இருந்தன. மழைக்காலம் முழுவதும் மழையாகவே இருக்கும். துணிகள் காயாது, வெளியே விளையாட இயலாது. மழையில்லை என்றாலும் மேகமூட்டம் குறையாது. சூரியனை பார்க்கவே முடியாது. 

இன்றைய காலகட்டத்தில் அப்படியெல்லாம் இல்லை என்பது கண்கூடு. மழைக்காலம் என்பது மழையும் வரும் ஒரு காலம் என்றாகிவிட்டது. திடீரென்று மேகம் கூடி மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துவிட்டுச் சென்று விடுகிறது. சற்று நேரத்திற்கெல்லாம் வெயில் பல்லைக் காட்டிக்கொண்டு அடிக்கிறது. 

‘குயிக் ஸ்பெல்’ என்ப்படுகின்ற குறுகிய நேரத்தில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் அதிக மழைப் பொழியும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. பரந்த நிலப்பரப்பிற்கான அடை மழை என்பதெல்லாம் இப்போது இல்லை. 

கடந்த சனிக்கிழமையன்று டெல்லிக்கும் மும்பை மாநகருக்கும் பருவமழை ஒரே நாளில் தொடங்கியது. வழக்கமாக பருவமழை தொடங்கும் நாளைவிட பதினைந்து நாட்கள் முன்னதாக தொடங்கியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத ஒரு விடயமாக இது பார்க்கப்படுகிறது. 

கடந்த 30 – 40 வருடங்களில் பருவமழை மற்றும் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களின் ஒரு பகுதியாகத்தான் இந்த நிகழ்வைப் பார்க்க வேண்டும். பருவநிலை மேலும் மேலும் ஒழுங்கற்ற ஒன்றாக மாறிவருவதை இது காட்டுகிறது. 

தெற்காசிய பிராந்தியம் முழுவதும் நிகழ்ந்த காலநிலை மாற்றம் அப்பகுதியில் பொழியும்  பருவமழையை மிகவும் ஒழுங்கற்றதாகவும், குறைந்த நம்பகத்தன்மையுடையதாகவும் ஆக்கியுள்ளது.  

பெட்ரோலிய எரிபொருட்களை தொடர்ந்து எரிப்பதால் ஏற்படும்  புவி வெப்பமடைதல் விளைவாகவே இத்தகைய மாற்றங்கள் நிகழ்கின்றன என்று விஞ்ஞானிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

புனேயில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு மையத்தின் காலநிலை விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல் கூறுகையில், “கனமழை நிகழ்வுகள் விரைவான வேகத்தில் அதிகரித்து வருகின்றன. இது பருவமழை பொழிவில் நாம் காணும் மிக மிக தெளிவான மாற்றம்.” என்கிறார். 

இனி இந்தியாவில் அதிகரிக்கும் மழையானது குறுகிய காலத்தில் பொழியும் தீவிர மழையின் வடிவத்தில் இருக்கும். ஒட்டுமொத்தமாக இந்தியாவைப் பார்த்தால், IMD உண்மையில் நீண்ட கால சராசரி மழையின் அளவை 889 மிமீயிலிருந்து 880 மிமீ ஆகக் குறைத்துள்ளது. ஆனால், தனிப்பட்ட இடங்களைப் பார்த்தால், 4,000 மிமீ மழை பெய்யும் மகாபலேஷ்வரில் இப்போது 6,000 மிமீ மழை பெய்து வருகிறது. அதாவது, புவி  வெப்பமயமாதல் குறுகிய பரப்பளவில் உண்மையில் மழை பொழிவை அதிகரிக்கிறது.

வேறு வழியே இல்லை.  மீண்டும் இயற்கையின் கால்களில் விழுவதே மனித இனத்தைக் காப்பாற்ற உள்ள ஒரே வழியாக உள்ளது. மரங்களை அழித்தோம், மலைகளை அழித்தோம், ஆறுகளில் குவிந்து கிடந்த மணலை அள்ளி ஆற்றுத் தண்ணீரை அடிமட்டத்தில் அழுத்தினோம், கண்மூடித்தனமாக மக்கா குப்பைகளை இயற்கை வளங்கள் அனைத்திலும் கொட்டி பூமியை மூச்சு முட்டச் செய்தோம். 

இனியாவது காற்று மாசைக் குறைப்போம். மரங்களை அதிகம் நடுவோம். இருக்கும் மரங்களை அழியாது காப்போம். நினைவும் கொள்வோம், இயற்கைக்கு மழையை கொடுக்காமல் அழிக்கவும் தெரியும், ஒரேயடியாக கொட்டி அழிக்கவும் தெரியும். 

Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *