கனகசபையால் ஏற்பட்ட கலவரம்! சிதம்பரம் கோயில் சர்ச்சை விவரங்கள்!!

செய்தி சுருக்கம்:
சிதம்பரம் கோவில் அர்ச்சகர்கள், கோவிலுக்குள் உள்ள கனகசபை மேடையில் ஏறி நின்று வழிபட பொதுமக்களையும் காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) அதிகாரிகளையும் தடை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
தில்லை நடராஜர் கோவிலை நிர்வகிக்கும் அர்ச்சகர்கள், ஜூன் 24 முதல் 27 வரை நடக்கும் ஆத்தி திருமஞ்சனத்தின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்கள் கனகசபை மேடையில் ஏற தடை விதித்திருந்தனர். இதற்காக ஒரு அறிவிப்புப் பலகையை கனகசபை மேடையில் அர்ச்சகர்கள் வைத்திருந்தனர்.
இந்த பூஜை சமயத்தில் வரும் கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிப்பதும், கோவில் உடமைகளையும் நகைகளையும் பாதுகாப்பது சிரமம் என்பதாலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அர்ச்சகர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பக்தர்களிடம் இருந்து இதற்கு எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. முறையாக ஒரு பக்தரிடமிருந்து இந்த தடையை நீக்க வேண்டும் என்ற புகாரைப் பெற்ற பிறகு, அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த அறிவிப்புப் பலகையை அகற்றினர். மேலும் பக்தர்களை ஒழுங்கு செய்யவும், பிரச்சனைகள் இல்லாமல் பிரார்த்தனை செய்யவும் உதவும் விதமாக ஒரு பெரிய போலீஸ் படை நிறுத்தப்பட்டது.
ஆனால், இந்த முடிவுக்கு அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே கனகசபையில் நின்று பிரார்த்தனை செய்ய விரும்பிய பக்தர்கள் குழு ஒன்று திரண்டது. மேலும் அர்ச்சகர்களுக்கு ஆதரவாக மற்றொரு குழு ஒன்று கூடினர். இரு தரப்பினருக்கும் இடையே கோஷங்கள் மற்றும் வாக்குவாதங்கள் எழுந்தது.
இறுதியில், அறநிலையத்துறை அதிகாரிகளே கனகசபை மேடையில் ஏற முற்பட்டனர். இது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்புக்கு வழிவகுத்தது. அதற்கு பதிலடியாக ஒரு முதிய அர்ச்சகர் நடையை உடனடியாக மூடும்படி உத்தரவிடுவது கேமராவில் பதிவாகியுள்ளது. அதேபோல இளம் அர்ச்சகர் ஒருவரை அதிகாரிகள் தள்ளிவிடுவதை காட்டும் சிசிடிவி காட்சியை அர்ச்சகர்கள் தரப்பு காட்டி மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டுகிறது.
இறுதியாக, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த அர்ச்சகர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை நிலவரப்படி, கோவிலில் இருந்து பக்தர்கள் வழிபாடு செய்ய அர்ச்சகர்கள் அனுமதித்துள்ளனர் என்று தெரியவருகிறது.
பின்னணி:
கனக சபை என்பது உண்மையில் என்ன..?
கனகம் என்றால் தங்கம், சபை என்பது அவை என்று பொருள்படும். ‘பொன்னம்பலம்’ என்பதன் சமஸ்கிருத வடிவமே கனகசபை. சிதம்பரம் நடராஜர் இந்த பொன்னாலான சபையில் நடனமாடுவதால் சிதம்பரம் தலத்திற்கே பொன்னம்பலம் அல்லது கனகசபை என்று வேறு பெயர் உண்டு.
சிதம்பரத்தில், நடராஜர் இருக்கும் சித்சபை, நந்திகேஸ்வரர் இருக்கக்கூடிய கனக சபை, மூன்றாவது கொடி மரத்துக்கு மேல் எதிரில் நடன சபை, நான்காவதாக பேரம்பலம் என்று சொல்லக்கூடிய தேவசபை, ஐந்தாவது ராஜசபை எனும் ஆயிரம் கால் மண்டபம் என ஐந்து சபைகள் உண்டு.
இதில் கனகசபை என்ற இடம்தான் மக்கள் நின்று சுவாமியை வழிபாடு செய்வதற்கான இடம்.
தில்லை வாழ் தீட்சிதர்கள் வரலாறு
தில்லை வாழ் அந்தணர்கள் – தீட்சிதர்களுடனான பிரச்சனை என்பது காலம் காலமாக வெவ்வேறு வடிவங்களில் இருந்து வருகிறது. முதலாம் ஆதித்ய சோழன்தான் சிதம்பரம் கோவிலுக்கு முக்கியத்துவம் தந்து, அதை சோழப் பேரரசின் கலாச்சார மையமாக மாற்றினான். பிற நாடுகள் மீது செய்த படையெடுப்புகளின்போது கிடைக்கப்பெற்றா ஏராளமான பொன்னைக் கொண்டு அவனும் அவனது மகனான பராந்தகனும் சிதம்பரம் கோயிலுக்குப் பொன் வேய்ந்தனர்.
பராந்தகனுக்குப் பிற்கான சோழ மன்னர்கள், சிதம்பரத்துக்கு முக்கியத்துவம் தரவில்லை. குலோத்துங்கனது ஆட்சியில்தான் மீண்டும் சிதம்பரம் கோயிலானது முக்கியத்துவம் பெறலாயிற்று. குலோத்துங்கன் கம்போடிய மன்னன் அவனுக்கு அனுப்பிய விலைமதிக்க இயலாத அபூர்வமான ஒரு ரத்தினக் கல்லை நடராஜர் கோயிலில் வைக்கச் செய்தான்.
அதன்பிறகு சிதம்பரத்திற்கு பெரிய முக்கியத்துவம் அளித்த மன்னர்கள் யாருமில்லை. விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் (1400 – 1700) சிதம்பரம் கோயில் தனது முக்கியத்துவத்தை முற்றிலுமாக இழந்திருந்தது. பின்னர், நாயக்கர் காலத்தில் தில்லை வாழ் அந்தணர்கள், சிதம்பரம் கோயிலை எவ்விதத் தடையுமின்றித் முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். எனவே 16ம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் சிதம்பரம் கோவில் இந்த தீட்சிதர்களின் ஆளுகைக்குக் கீழே வந்திருக்கும்.
. வழக்குகளும் நடவடிக்கைகளும்
நடராஜர் கோயில் தொடர்பாக 1885 ல் நடந்த வழக்கில் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் தனிச் சொத்து என்று சொல்வதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. பின்னர், 1951-ல் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் அது தனிச் சொத்து அல்ல; பொதுவான கோயில்தான் என்பது உறுதிப்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக வந்த புகார்களை அடுத்து, எம்.ஜி.ஆர். அரசு, நிர்வாக அதிகாரி ஒருவரை நியமித்தது. அதை ரத்துசெய்யும்படி தீட்சிதர்கள் கோரியபோது, சென்னை உயர் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. 1997-ல் கருணாநிதி ஆட்சியின்போதும், தீட்சிதர்களின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் எழுப்பப்பட்ட சீராய்வு மனுவும் 2006-ல் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் இந்த வழக்கில் 2009 பிப்ரவரியில் தீர்ப்பளித்த நீதிபதி பானுமதி, நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமித்தது செல்லும் என்றும், நிர்வாக அதிகாரிக்கு ஒத்துழைப்புத் தருமாறு தில்லை வாழ் தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டார்.
தீட்சிதர்கள் பக்கம் உள்ள நியாயம் என்ன?
13-ம் நூற்றாண்டில் நடந்த அந்நிய படையெடுப்பில் எல்லாம் தில்லை கோயிலில் உள்ள செல்வங்களையும் உலோகச் சிலைகளையும் இந்த தீட்சிதர்களே பாதுகாத்து நின்றிருக்கின்றனர். அதற்காக அவர்கள் செய்த தியாகங்களும், அனுபவித்த சித்தரவதைகளும் நிச்சயம் நினைவு கூறப்பட வேண்டியது. அந்நியர் அங்குள்ள தீட்சிதர் களைக் கொலை செய்த காட்சியை விவரிக்கிறார் அமிர்குஸ்ரூ என்ற அறிஞர் மற்றும் பயணி.
காலமாற்றத்தில் எதையும் மாற்றிக்கொள்ளாமல் திடமாக நின்று தில்லை நடராஜரின் சொத்துக்களையும், உடமைகளையும் பாரம்பரியத்தையும் காத்து நின்ற தீட்சிதர்களின் குரலுக்கு நாம் நிச்சயம் செவிமடுத்துதான் ஆகவேண்டும்.
கால மாற்றமும் வேண்டிய திருத்தங்களும்
பாரம்பரியமாக உரிமை உள்ளவர்களான தில்லை வாழ் அந்தணர்கள் காலமாற்றத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குத் தகுந்தவாறு தங்கள் நிலையை சற்றே மாற்றிக்கொள்ளக் கடமைப்பட்டவர்கள். இல்லயேல் அவர்கள் இத்தனை காலம் காப்பாற்றி வந்தவற்றை அவர்களே அழித்த பழிக்கு ஆளாவார்கள்.
வெறும் நான்கு நாட்களுக்கு மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கனகசபை தடுக்கப்பட வேண்டும் என்றால் அதை முறையான அதிகாரிகளைக் கொண்டு நிகழ்த்தியிருக்க வேண்டும்.
அறநிலையத்துறை மற்றும் பிற சட்டம் ஒழுங்கு அமைப்புகளுடன் ஒத்திசைந்து திருக்கோவிலின் புனிதத்தையும் பாரம்பரியத்தையும் காக்க வேண்டியது அவர்களது கடமை.