fbpx
LOADING

Type to search

இலங்கை பல்பொருள் வர்த்தகம்

சீனாவின் எரிபொருளுக்கு இலங்கை மக்களின் ஆதரவு இருக்குமா – நவீன வசதிகள் கொண்ட 150 Sinopec விற்பனை நிலையங்கள் துவக்கம். முதல்கட்ட சரக்குகள் இலங்கை வந்தடைந்தன.

செய்தி சுருக்கம்:

செவ்வாய்க்கிழமை செய்தி நிறுவனங்களுக்கு இலங்கை எரிவளத்துறை அமைச்சர் காஞ்சனா விஜெசேகரா அளித்துள்ள பேட்டியில், சீன நிறுவனமான Sinopec தன் முதல் இறக்குமதியை செய்து முடித்துள்ளது, அந்நிறுவன பெட்ரோலிய பொருட்கள் இலங்கை வந்தடைந்தது என்று கூறியுள்ளார். நம் நாட்டின் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் நம் நாட்டை சூழ்ந்து நிற்கும் கடன் சுமைகளுக்கு மத்தியில் இதுபோன்ற வெளிநாட்டு முதலீடுகள் கொண்டு நாட்டிற்கு வருவாய் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது அவசியமாகிறது. இலங்கையின் எரிபொருள் தேவைகளை பெருமளவு பூர்த்தி செய்யும் வகையில் இந்த தனியார் நிறுவனத்தின் பங்களிப்பு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

 

கடந்த மே மாதம் சீன நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி செய்கின்ற Sinopec என்ற நிறுவனம் இலங்கையுடன் 20 வருட வாணிப ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது, அதன்படி இந்நிறுவனம் இதன் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து சேமிப்பு கிடங்குகளில் வைத்து இலங்கையின் பல இடங்களில் சில்லறை விற்பனை மையங்கள் துவங்கி பொதுமக்களிடம் விநியோகிக்க அனுமதியளிக்க பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்து போய் தடுமாற்றத்தில் இருக்கின்ற இலங்கை அரசிற்கு இந்தமாதிரியான வெளிநாட்டு வியாபாரங்கள் மிகவும் அவசியமாகிறது, சர்வதேச சந்தையில் வியாபாரங்களில் பங்குபெற அந்நிய செலாவணி கையிருப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

Sinopec நிறுவனத்தின் முதல் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையை வந்தடைந்துள்ளது. இரண்டாவது ஷிப்மெண்ட்டும் அடுத்த நாளில் வந்தடையும் என்று தெரிகிறது. தற்போது வந்துள்ள முதல் ஷிப்மெண்ட்டில் மொத்தம் 45000 மெட்ரிக் டன் எரிபொருள் டாங்கர்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்றும் பணி நடந்துகொண்டுள்ளது என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், இலங்கை உள்நாட்டு சந்தையில் இதுபோன்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் வணிகத்தை துவங்குவது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாகவும், எரிபொருள் தேவைக்கான சிறந்த தீர்வாகவும் உள்ளது. அந்நிய செலாவணி தேவைகளும் இதன்மூலம் சமாளிக்க முடியும். பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்ய அந்நிய செலாவணி கையிருப்பு மிக முக்கியமான ஒன்றாகும், தற்போதைய எரிபொருள் பற்றாக்குறை என்ற நிலையிலிருந்து இலங்கை மீள்வதற்கு இதுபோன்ற முதலீடுகள் அவசியம் ஆகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை இந்த இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய தொகைக்கு 12 மாத கால அவகாசம் அளித்துள்ளது, இந்த காலத்தில் விற்பனையின் மூலம் அந்நிய செலாவணி கையிருப்பு உயர்த்திக்கொள்ள முடியும், Sinopec நிறுவனத்தின் முதன்மை முதலீட்டாளர்கள் இந்த கால அவகாசத்தை இலங்கையின் நன்மை கருதி அளித்துள்ளனர். இதனால் இலங்கையில் தட்டுப்பாடில்லா எரிபொருள் விநியோகம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் சீன தூதரகம் “Sinopec நிறுவனத்தின் 45000 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிபொருள்கள் இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளது. இவற்றின் விற்பனையை ஆரம்பிப்பதன் மூலம் அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வதற்கு வாய்ப்புள்ளது, மேலும் இலங்கையின் எரிபொருள் பற்றாக்குறை குறைவதற்கு இந்த திட்டம் பெரிதும் கைகொடுக்கும்” என்று கூறியுள்ளது.

இலங்கை அரசின் முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (Srilanka Board of Investment) இந்த Sinopec நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி இலங்கையின் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் தற்போது உள்ள அரசு நிறுவனமான Ceylon Petroleum Corp மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான LIOC (Lankan Indian Oil Corporation) ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சி வந்த இடத்தில் தற்போது ஒரு பெரும் போட்டி நிறுவனம் கால்பதிக்கிறது.

அரசு போக இந்தியன் ஆயில் நிறுவனம் மட்டுமே களத்தில் இருந்த நிலையில் மூன்றாவதாக 100 மில்லியன் டாலர் முதலீடுடன் இலங்கை எரிபொருள் சந்தைக்கு Sinopec அறிமுகம் ஆகிறது. இலங்கை சந்தை மதிப்பின் தேவைக்கேற்ப பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட தயாராக உள்ள Sinopec விரைவில் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளது.

Sinopec நிறுவனமானது தற்போது சிலோன் பெட்ரோலிய நிறுவனம் நடத்தி வரும் 150 விற்பனை நிலையங்களும் அதிபோக 50 புதிய நிலையங்களையும் தன் பெயரில் மாற்றி நவீன மயமாக அமைக்க துவங்கியுள்ளது. சீனாவிலும் சிங்கப்பூரிலும் தலைமை அலுவலகத்தை கொண்ட Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd என்ற பெயரில் இந்த விற்பனை மையங்களை திறக்கவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை அரசு கூறியபடி Sinopec அதன் முதலீட்டை இலங்கையில் மிக பலமாக போட்டுள்ளது. இதுபோக ஆஸ்திரேலிய நாட்டின் United Petroleum மற்றும் அமெரிக்காவின் RM Parks ஆகிய நிறுவன முதலீடுகளும் விரைவில் இலங்கை வந்தடைய உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இன்னும் 20 வருடங்கள் Sinopec நிறுவனம் இலங்கையில் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்துகொள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் அனுமதியளிக்க பட்டுள்ளது.

 

பின்னணி:

உலகிலேயே இரண்டாவது அதிக பெட்ரோலிய பொருட்கள் விற்பனை நிலையங்களை கொண்டுள்ள Sinopec, உலகின் மிகப்பெரிய ஆயில் மற்றும் பெட்ரோகெமிக்கல் உற்பத்தி நிறுவனமாகும். இது எரிபொருள் துறையின் ஜாம்பவான் நிறுவனம், சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆயில் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனம், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை என்று பல துறைகளில் உள்ள உலகின் மூன்றாவது மிகப்பெரிய கெமிக்கல் நிறுவனமாகும்.

இதைப்போன்ற பெட்ரோல் சாம்ராஜ்யத்தின் மிகப்பெரும் வணிக நிறுவனமாக உள்ள சீனாவின் Sinopec இலங்கையில் ஆரம்பிக்கவுள்ள இந்த விற்பனை மையங்கள் இலங்கையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும். மிகப்பெரும் உற்பத்தியாளர்களின் நேரடி விற்பனை என்பதால் எரிபொருள் விலையிலும் குறைவு இருக்க வாய்ப்புகள் அதிகம், உலகின் ஆக்டோபஸ் வியாபாரமாக இந்த எரிபொருள் வியாபாரம் உள்ளது, இதுபோன்ற உலகமயமாக்கல் திட்டங்கள் எதிர்காலங்களில் இன்னும் பல்வேறு துறைகளிலும் உருவாகக்கூடும். இந்த மாற்றங்களினால் உலக சந்தையில் பல்வேறு நன்மைகள் விளைய போகின்றன.

 

Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *