சாலமன் தீவுகளுடனான உறவைப் பலப்படுத்துவதன் மூலம் பசிபிக் பிராந்தியத்தை ஆதிக்கம் செய்கிறதா சீனா?

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சாலமன் தீவுகளின் பிரதம மந்திரி மனாசே சோகவரே ஆகியோர் இம்மாதம் பத்தாம் தேதியன்று பிற்பகல் ஒரு விரிவான மூலோபாயக் கூட்டாண்மையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளனர். சாலமன் தீவுகளுடனான உறவைப் பலப்படுத்தும் சீனாவின் இந்தப் புவிசார் அரசியல் நடவடிக்கையின் பின்னணி என்ன என்பதைப் பார்ப்போம்.
தெற்குப் பசிபிக் கடலில், 900 குட்டித் தீவுகளை உள்ளடக்கிய சாலமன் தீவுகள் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கே சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது இந்தியாவிலிருந்து 9,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் தொகையைக் கொண்ட இந்தத் தீவுகள்தான் தென் பசிபிக் பகுதியில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ள சீனாவின் தற்போதைய ஒரே குறி. தனது செல்வாக்கை நிலைநிறுத்த போர்க் கப்பல்களைக் கொண்டு வந்து இப்பகுதியில் நிறுத்துவதும் பசிபிக் தீவுகளில் உள்ள நாடுகளுக்குப் பல்வேறு உதவிகள் மற்றும் கட்டமைப்புகளை செய்து தருவதுமான நடவடிக்கைகளைப் பெருமளவில் செய்து வருகிறது சீனா.
இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவுடனான உறவை வலுப்படுத்திவரும் சாலமன் தீவுகளின் நடவடிக்கை மேற்கத்திய நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. அதற்கேற்றாற்போல் சாலமன் தீவுகளின் சோகவரே அரசு கடந்த 2019 ஆம் ஆண்டில் அதன் முப்பத்தாறு ஆண்டுகால அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை தைவானில் இருந்து பீஜிங்கிற்கு மாற்றியது. இது சீனாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
“சீனாவின் வளர்ச்சி அனுபவத்திலிருந்து சாலமன் தீவுகள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்றும் “சீனாவுடனான உறவுகளை மேலும் அதிகரிக்கவே நாங்கள் வந்துள்ளோம்” என்றும் சாலமன் தீவுகளின் பிரதமர் சோகவரே, சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்கைக் கடந்த ஞாயிறன்று சந்தித்தபோது கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது. அந்தச் சந்திப்பின்போது அவர் சீனாவுடன் காவல்துறை பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதும் அவர் வருகையின் போது சீன ராணுவ இசைக்குழு சாலமன் தீவுகளின் தேசிய கீதத்தை இசைத்ததும் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. சீன அதிபர் ஜின்பிங், “இரு அரசுகளும் நம்பகமான நண்பர்கள் மற்றும் நம்பகமான சகோதரர்கள்”, எனக் கூறி இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
சீனப் பிரதமர் லீ இந்த சந்திப்பினைப் பற்றிக் கூறும்போது, “இரு அரசுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான வளர்ச்சியின் விரிவான மூலோபாயக் கூட்டாண்மையைத் தொடங்கி இருப்பதாகவும் சீனாவிற்கும் சாலமன் தீவுகளுக்கும் இடையே வேகமாக வளர்ந்து வரும் இந்த உறவு மிகவும் பயனுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சமயத்தில் சீன வெளியுறவு அமைச்சரான வாங்யி, பசிபிக் பிராந்தியத்திலுள்ள பிஜி, கிரிபதி, சமோவா, பப்புவா நியூ கினியா, டோங்கா மற்றும் கிழக்கு திமோர் உள்ளிட்ட 8 நாடுகளுக்குக் கடந்த 2002ஆம் ஆண்டு மே மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
ஏற்கனவே சீன அரசு கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சாலமன் தீவுகளுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறியது. இரு அரசுகளின் வெளியுறவு மந்திரிகளான வாங்யி மற்றும் மானேல் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தமானது பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் பாதுகாப்பு படைகளை நிலைநிறுத்துவதற்கு ஏதுவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சாலமன் தீவுகளின் பிரதமர் இதை மறுத்தாலும், சீனாவின் இந்த மூலோபாய நடவடிக்கையானது ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க நாடுகளின் கவலையை அதிகரித்தது என்றே சொல்லவேண்டும். சாலமன் தீவின் அண்டை நாடான, சீனாவிற்கு ஒரு மூலோபாயப் போட்டியாளராக உள்ள ஆஸ்திரேலியாவின் பிரதமர் மோரிசன் இந்த ஒப்பந்தம் தங்கள் தேசியப் பாதுகாப்பிற்கு நிலையான அழுத்தத்தையும் அச்சுறுத்தலையும் தருவதாகத் தெரிவித்திருந்தார். இதேபோல் நியூசிலாந்து பிரதமரான ஜெசிந்தாவும் இந்த உடன்படிக்கை தென் பசிபிக் பிராந்தியம் இராணுவமயமாக்கலுக்கு உட்படக் காரணமாகலாம் எனக் கவலை தெரிவித்துள்ளார்.
அதேவேளை சீனா, தங்களது தீவுகளுடன் நெருங்குவதை சாலமன் நாட்டு மக்கள் விரும்பவில்லை. இதன் விளைவாக அந்நாட்டில் பெரும் வன்முறை வெடித்தது. தலைநகர் ஹோனியாராவில் உள்ள சீனா டவுன் பகுதியில் அமைந்திருந்த வர்த்தக நிறுவனங்களை அவர்கள் அடித்து நொறுக்கிச் சூறையாடினர். மூன்று நாட்கள் இந்தக் கலவரங்கள் நடைபெற்றன.
இருப்பினும் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சாலமன் தீவுகள் அமெரிக்கக் கடலோரக் காவல்படையின் கப்பல் மற்றும் பிரிட்டிஷ் ராயல் கடற்படை கப்பலைத் திருப்பி அனுப்பியது. மறுஆய்வு நிலுவையில் உள்ள அனைத்து வெளிநாட்டு ராணுவக் கப்பல்களையும் தடை செய்வதாகக் கூறியது. சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹீவெய் ஏற்கனவே சாலமன் தீவுகளில் செல்லுலார் நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது. தலைநகர் ஹோனியாராவில் உள்ள துறைமுகத்தைச் சீன அரசு நிறுவனம் மறுவடிவமைப்பு செய்யும் எனவும் கூறப்படுகின்றது. மேலும் நவம்பர் மாதம் நடத்தப்பட இருக்கும் பசிபிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான மைதானத்தையும் சீனா அங்கே கட்டியுள்ளது. இவை அனைத்தும் சாலமன் தீவுகளின் சீன ஆதரவை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக, பதினான்கு பசிபிக் தீவுப் பிரதேசங்களில் சீனா இப்போது பத்து பங்காளிகளைக் கொண்டிருக்கிறது. அவற்றுள் சாலமன் தீவுகள் முக்கியமான கப்பல் வழித்தடங்களில் ஒன்று என்பதால் சீனா பசிபிக் பிராந்தியத்தைச் சுற்றியுள்ள கடல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
பசிபிக் நாடுகளில் தங்களது செல்வாக்கை நிலைநாட்ட அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பகீரதப் பிரயத்தனம் செய்து வரும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கைகள் புவிசார் அரசியல் போரில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.